தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்

Cementum athan mohamum

தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்

கவனத்திற்கு: இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் தனிமனித கருத்தாகும். யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை.

சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. தீஞ்சுதை எஃகுடன் சேர்ந்த பின்னர், மனிதகுலம் இதற்கு முன் எட்டத்துணியாத புதிய உயரங்களை தொட்டதால், இது ஒரு அதிநவீனக்கட்டுமானப் பொருள் என்று போற்றப்படுகிறது. அதிக வலுவானது என்று சொல்லி அது அரங்கேறியது. ஆனால் அனைவரின் வாழ்வை சீரழித்ததை மறைத்தது. தீஞ்சுதை பிறப்பதற்கு முன்பே, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கட்டுமானங்களை, இயற்கை பொருட்களைக் கொண்டே பாதுகாப்பாகக் கட்டப்பட்டன என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு, வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சாம்பல் பொருளைப் பற்றிய ஒரு பகுப்பாய்வுமூலம் அதன் பின்னால் உள்ள உண்மையை இக்கட்டுரை விளக்குகிறது.

நவீன உலகின் கட்டிடக்கலை:

தீஞ்சுதை தற்போதைய உலகின் நவீன கட்டிடங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு பாரம்பரியக் கட்டிடமானது மழை, வெயில், புயல் போன்றவற்றை எதிர் கொள்ளும் வகையிலும், கலை, நாகரீகம், வளங்கள் போன்றவற்றால் தனித்தும் இருந்தது. மேலும் தீஞ்சுதை பயன்பாட்டால் அவை குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது. எல்லா இடங்களிலும் கட்டிடங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் உள்ளன. நியூயார்க் நகரத்தில் உள்ள உயர்ந்த கட்டிடத்திற்கும் துபாயில் உள்ள உயர்ந்த கட்டிடத்திற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. எங்கும் நிறைந்திருக்கும் இந்தச் சிமெண்டால் நமக்கும் நம்முடைய வீட்டுக்கும் பாதிப்புகள் அதிகம் உண்டாகும். வானுயர்ந்த கட்டிடங்கள் போது அவற்றால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இந்தியாவில் பலவிதமான இயற்கை கட்டுமானங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் திறந்தவெளியும் முற்றமும் கொண்டுள்ளதால் மக்களை ஒன்றிணைக்கின்றன. அது வீட்டை இயற்கையுடன் தொடர்பு படுத்தவும் நம்மைப் பக்கத்து வீட்டாருடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்தவும் உதவியது. ஆனால் தற்சமயம் கட்டும் வானுயர்ந்த கட்டிடங்களால் இயற்கையுடன் உள்ள தொடர்பும் அண்டையில் வசிப்பவர்களுடைய தொடர்பும் அறுந்து கிடக்கிறது. குறைந்த இடத்தில் நெருக்கமாகக் கட்டும் கட்டிடங்களால் ‘சிக் பில்டிங் சின்ட்ரோம்’ என்று சொல்லக்கூடிய மக்களின் மனநிலை மற்றும் உடல்நலத்தை பாதிக்கும் நோய் ஏற்படுகிறது. இந்த நகரங்கள் தவிர்த்துக் கிராமங்களிலும் அதே நிலமை தான் நிலவுகிறது. இந்த ஊடுருவலுக்கு அரசாங்கத்தின் ‘யோஜனா திட்டங்கள்‘ ஒரு காரணம். தீஞ்சுதை வீடுதான் ஒருவருடைய செல்வசெழிப்பை வெளிப்படுத்துவது என்ற சமூகத்தில் உள்ள அழுத்தங்கள் மற்றொரு காரணம். நகரமயமாக்கலின் விளைவுகளைப் பல மேற்கத்திய நாடுகளும் சந்தித்து அதைச் சரிசெய்து வரும் வேளையில் இந்தியா மட்டும் அதை உணராமல் அப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது‌‌.

ஏன் வானுயர்ந்த கட்டிடங்கள்?

உங்களுடைய பதில் சரிதான். குறைந்த இடத்தில் அதிக மக்கள் வாழ்வதற்கு பல அடுக்குகள் கொண்ட வீடுகள் தேவை. அதற்குத் தீஞ்சுதை தேவை. ஆனால் நமது பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறதா? அல்லது நமது பொறாமைக்கான தீர்வா அமையுதா?உடல்நலத்துடன் தான் வாழமுடிகிறதா? இயற்கைச் சூழலைக் கெடுக்காமல் தான் கட்டமுடிகிறதா?

குறைந்த இடத்தில் அதிகரித்து வரும் மக்கட்தொகைக்குத் தீர்வாக இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பிரச்சினைக்கான மூலகாரணத்தை அறிவதில்லை. மும்பையில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் 1.2கோடு வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காலியாக உள்ளன; மறுபுறம் வீடுகளின் தேவை இருக்கிறது. குடிசைப்பகுதிகள் அதிகரிப்பு இந்தக் கட்டுமான தொழில் நிறுவனங்கள் முன்வைக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் திட்டம் பொருந்தாது என்பதைக் காட்டுகிறது. பிரச்சினை தெளிவாகத் தெரியும்போது தீர்வுக்கு வேறு வழிகளைக் தான் தேட வேண்டும். ரியல் எஸ்டேட்டுகளின் ஒட்டு மொத்த அமைப்பு மற்றும் கட்டுமானங்களின் நிலமை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகளோ திட்டமிடப்படாத நகரமயமாதலோ தீர்வு கிடையாது என்பது வெளிப்படையாகத்தெரிகிறது. சிக்கல்களை மேலோட்டமாகப் பார்த்ததால் தான், எந்த முன்னறிவிப்புமின்றி தீர்மானம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அடிப்படையில் பொருளாதார சிக்கலும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் பகட்டான நகர வாழ்வும் பிரச்சினையுடன்‌ தொடர்புடையது.

இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?

இயற்கைக் கட்டுமானத்தை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் தணலுடன் சேர்ந்து கற்கலாம்.

மண்ணில் அடுக்குமாடியா?

உயர்ந்த கட்டிடங்களின் தேவைக்கான காரணங்களை ஒதுக்கி வைத்து, நமது வரலாற்றைத் திருப்பிப் பாருங்கள். பெருத்த அளவிலான கட்டமைப்புகள் யாவும் இயற்கையான முறையில் கட்டியதாக இருக்கும். மண்ணால் ஆன அடுக்குமாடிக் குடியிருப்புகள் வறண்ட அல்லது வெப்பமண்டலப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. பெரிய பாலங்களும் கால்வாய் பாலங்களும் கூட அற்புதமாகக் கட்டப்பட்டுள்ளன. நம்முடைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இன்றும் அதை மதித்து வருகிறோம்.

வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையை அடுக்குமாடிக் குடியிருப்புகள் தீர்க்கும் என்ற கருத்தை நாம் விமர்சித்தாலும், இயற்கைப் பொருட்களை வைத்து நீண்ட கால ஆயுள் கொண்ட உயரமான கட்டிடம் கட்ட முடியும். நம்முடைய கோட்டைகளும் அரண்மணைகளும் கோபுரங்களும் இதை நிரூபிக்கிறது‌. மண் கட்டுமானங்கள் 9000 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்திருக்கின்றன. வலிமை வாய்ந்த நிலநடுக்கத்திலும் பல பேரிடர்களிலும் பல இயற்கைக்கட்டுமானங்கள் நிலைத்திருந்தன. ஆனால் நவீன கட்டுமானம் நிலைக்கவில்லை. பாரம்பரிய கட்டுமானத்தின் நீண்டாயுளை நிரூபிக்கப் பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று ‘புங்கா’ என்று குஜராத்தில் உள்ள இயற்கை வீடுகள் பலத்த நிலநடுக்கத்திலும் நிலைபெற்றன. இராஜஸ்தானின் சர்தார்சாகரில் சுண்ணாம்பு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. இந்தியாவில் பல கிராமங்களும் இயற்கைக் கட்டுமானத்துக்கான தீர்வைக் கொண்டுள்ளன.

தீஞ்சுதை: என்ன, எப்பொழுது, எப்படி

மரபுக் கட்டுமானப் பொருட்களின் கால அளவுகளைப் பார்த்தால் காலத்தைக் கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு அவ்வளவு வருடங்களுக்கு முன்பாகவே அவை பயன்படுத்துப்பட்டுள்ளது என்பது தெரியும். போர்ட்லாண்ட சிமெண்ட் எப்பொழுது வந்தது. நூறு வருடங்களுக்கு முன்பாக வந்திருக்கும். ஆனால் அதற்கு முன்பாகவே ‘நேச்சுரல் சிமெண்ட்’ அல்லது ‘ரோமன் கான்கிரீட்’ தயாரிக்க சுண்ணாம்பு மற்றும் களிமண்‌ பயன்படுத்தினர். ஒவ்வொரு இடம் சார்ந்தும் பொருட்களின் தன்மை மாறுபடும் என்பதால் குற்பிட்ட வரையறைக்குள் கொண்டு வர‌முயற்சித்தனர். இப்பொழுது கால்சியம், சிலிக்கா, அயர்ன் , அலுமினியம் ஆகியன சேர்த்து தீஞ்சுதை தயாரிக்கிறார்கள்.

ஐந்தாண்டுத் திட்டம் மூலமாகத் தீஞ்சுதை உற்பத்திக்கு ஊக்கம் செய்யப்பட்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன‌. தீஞ்சுதை என்பது ஒரு முக்கிய கட்டுமானப் பொருளாகப் பார்க்கப்பட்டது. விவசாயத்தில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் இராசயன உரங்களை ஊக்கப்படுத்தினார்கள். அதிகமான உணவுத் தயாரிப்பு மற்றும் நல்ல வாழ்க்கை அமையும் எனக்காரணம் கூறப்பட்டது. இராசயனம் பின்னாளில் நிலத்தின்‌ வளத்தைக் கெடுத்தது. அந்த இரசாயனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தான் பயன்பெற்றது. இதேபோல் தான் விளைவுகளைப் பற்றி அறியாமல் அதாவது நமது நலன் மற்றும் சூழல்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் ‘சாம்பல் புரட்சி’ தொடங்கப்பட்டது. ‘ஒருபயிர்ச் சாகுபடி’ மற்றும் ‘ஒருபொருள் கட்டுமானம்’ பிரபலமானது. ஆனால் அதன் தீங்கான விளைவுகளை யாரும் பொருட்படுத்தவில்லை அல்லது அறியவில்லை. ஒரு பெரும் நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலைகளை நிறுவியது என்றால் அது தயாரிக்கும் பொருளை எங்கும் யாவருக்கும் விற்க முற்படும். “சிமெண்ட்டுக்கு வாழ்வு இருக்கிறது. அது கடிமடைந்தால் எதைக்கொண்டும் உடைக்க முடியாது” என்று விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அது இந்த நவீன உலகில் முன்னோக்கச் செல்லச் சிமெண்ட்டு மட்டுமே தீர்வு என்ற பதிவை ஏற்படுத்தியது.

மணல் இல்லாமல் தீஞ்சுதை வேலை செய்யாது. பல வருடமாக நடந்த மணற்கொள்ளையால் நதிகளின் நிலமை மிக மோசமாகி விட்டன. மணல் என்பது இயற்கையான பொருள் என்றாலும் இந்த நவீனத் தொழில்நுட்பம் முன்வைக்கும் முறைகளுக்குத் தேவைப்படும் மணலின் அளவை பூர்த்தி செய்வது சாத்தியமில்லை. ஆனால் மணற் கொள்ளையர்கள் மணலை எடுத்து விற்கிறார்கள். மேலும் வெளிநாட்டில் பொருட்கள் அதிகம் கிடைக்கும் இடத்திலிருந்து எடுத்து வர ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.

சுண்ணாம்பு ஓர் பழம்பெரும்பொருள்:

தீஞ்சுதை இல்லாத அக்காலகட்டத்தில் சுண்ணாம்பு முக்கியப் பங்கு வகித்தது.

அரண்மனைகள், கோட்டைகள், குவிமாடங்கள்(Dome), பெட்டகங்கள்(Vault) போன்றவை ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது. அரைத்தல், அடித்தல் மற்றும் நொதிக்கவைத்தல் ஆகிய செயல்முறை மூலமும் மூலிகை சாறுகளைச் சேர்த்து சுண்ணாம்புக்கு வலுசேர்க்கப்படுகிறது. இதற்கு, அதிமான நேரமும் அதிமான வேலையாட்களும் தேவைப்படும். ஆனால் அதன் பயன்கள் அளக்க முடியாது.

சுண்ணாம்புச் சுழற்சியைப் புரிந்து கொண்டால் சுண்ணாம்பைப் பயன்படுத்துவது இயற்கைக்கு நெருக்கமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சுண்ணாம்புக்கல்லை எரிக்கும்போது வெளிவருகிற கரிம வாயு, சாந்து அல்லது பூச்சு கடினமடையும்போது உள்ளிழுத்துக் கொள்ளப்படும். காலம் செல்லச் செல்ல இந்தக் கரிமமேற்ற வினையின் காரணமாகக் கல்போல் மாறுகிறது. இடுபொருட்கள் சேர்க்கும்போது சுண்ணாம்புக் கலவைக்குத் தேவையான பண்புகளைக் கொடுக்கிறது.

வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் தீஞ்சுதை இல்லாமல் எப்படிக் கட்டினார்கள் என்ற‌கேள்விக்குப் பல பதில்கள் கிடைக்கும். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் ஒரு பதிலைக் கொடுக்கும். அந்தந்த இடத்துக்குப் பொருத்தமாகப் பருவநிலையை சமாளிப்பதாகவும் உள்ளூர்ப்பொருட்கள் மற்றும் ஆட்களைப் பயன்படுத்தி அழகாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக இருக்கும். அவை அழிந்தாலும் பின்னர் திரும்பப் பயன்படுத்தக்கூடியது. ஒரு வீடு கட்டுவது என்பது சமூகச்செயல்பாடாக இருந்ததால் கட்டிட வேலை என்பதே சமூகமாகக்கூடிப் பேசிப் பாடல் பாடி அரட்டை அடிப்பதற்கான வாய்ப்பாக இருந்தது. எதும் கட்டுமானக் கழிவுகள் மிஞ்சினால் மண்ணில் கலந்து மட்கிவிடும்.. பல தீமைகள் கொண்ட சிமெண்டை விடுத்து பல ஆண்டுகளாக வழக்கத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வந்த பொருளைத் திரும்பப் பயன்படுத்துவது தான் தீர்வு

சுற்றுச்சூழல் தாக்கம்:

ஒரு டன் சிமெண்ட் தயாரிக்க ஏறத்தாழ 2.5 டன் கரிம வாயு வெளியிடப்படுகிறது. அது மொத்த கரிமவெளியேற்றத்தில் 10விழுக்காடு. சிமெண்ட்டு உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து கட்டிடம் கட்டும் இடத்திற்குக் கொண்டுவர சராசரியாக 600கிமீ பயணிக்கவேண்டிருக்கிறது. சிமெண்ட்டு தயாரிக்கும் அதோட மூலப்பொருட்களை எரித்து உடைப்பதற்கு அதிக எரிபொருள் தேவைப்படும். அது மட்டுமல்ல அந்தச் செயல்முறையின்போது நச்சுத்துகள் நிறைந்த காற்றை வெளியேற்றும். பல ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன தீஞ்சுதை தான் பெரும்பாலான கரிம வாயு வெளியேற்றத்துக்கான மூலம் என்று. காற்று மாசுக்கான எந்த வரையறையுமின்றி கட்டுப்பாடு இல்லாமல் இன்றும் அவலநிலை தொடர்கிறது. மாசுக்காற்றால் நுண்ணுயிர்களும் பெருக்கமடைந்து வாழவழியில்லாத நிலமைக்குத் தள்ளிவிட்டார்கள்.

நாம் என்ன செய்வது?

இந்த நேரம் நமக்குள்ளேயே உரையாடல் நிகழ்த்த வேண்டிய நேரமாகும். தற்சமயம் உள்ள வழக்கத்தைக் கேள்வி எழுப்ப வேண்டும். தனிமனித ரீதியாகவும் சமூகமாகவும் ஒரு நாடாகவும் இணைந்து தீர்வுகளை அணுக வேண்டியிருக்கிறது.. நம்மில் பலருடைய அறியாமயாலும் அக்கறையின்மையினாலாம் உருவாக்கப்பட்டது தான் அப்பிரச்சனைகள். இதைப் பலரும் உணர வேண்டும் அல்லது உணர்த்த வேண்டும். இது புவியின் நாடி நரம்புகளை அடைத்து மூச்சுத்திணற வைத்துவிட்டது இந்தத் தீஞ்சுதை. நம்முடைய முட்டாள் தனத்தால்தான் ஆறுகள் சாக்கடையாக ஓடுகிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வு என்னவென்றால் நம்முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவுக்களஞ்சியம் தான்

தீஞ்சுதை வைத்துக் கட்டும் கட்டிடத்தில் என்ன உணர்வு இருக்கிறது?

கான்கிரீட் கேன்சர் என்ற நோய் எல்லாக் கட்டிடத்தையும் பாதிக்கிறது‌. கான்கிரீட் நீரை உறிஞ்சு தக்கவைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. சுவாசிக்கும் குணமும் அற்றது‌. சேகரமான நீர்த்துளிகளால் கம்பிகள் துருப்பிடித்து ஏதோஒரு நாளில் உடைந்து விடும். இது ஏதோ ரகசியம்போலக் கடைசி நேரத்தில் தான் வெளிப்படுத்தும்‌. தீடீரென இடிந்து விழுந்த கட்டிடங்கள் ஏராளம். குறிப்பிட்ட காலத்தில் அல்லது பின்காலத்தில் அதான் நிலமை. நாம் முன்வைக்கும் கட்டுமான‌முறைக்கு தீஞ்சுதை வழங்கும் வலிமை அவசியமே கிடையாது. விலையுயர்ந்த தீஞ்சுதை (பணத்தின் அடிப்படையில் மட்டுமல்ல) ஐப் புறக்கணித்து வருகிறோம்‌.

இயற்கை கட்டுமானத்தில் தீஞ்சுதை கலப்படம்

மண் கட்டுமானத்தில் தீஞ்சுதை சேர்ப்பதால் ஏற்படும் கேடான விளைவுகள்பற்றிப் பாபாரா ஜி எழுதிய கட்டுரையைவிட வேற எதும் தெளிவாக விளக்க முடியாது. நம்முடைய நாட்டில் சூழல் சார்ந்து செயல்படும் சில அமைப்புகள் மண்சுவர்கள் போல வீட்டின் சுவர்கள் தோற்றமளிக்க வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாகக்கொண்டுள்ளது‌. ஆனால் மண்ணின் அடிப்படைக் குணம் அவர்களுக்குத் தெரியவில்லை. தெரிந்தால் தீஞ்சுதை கலப்பதற்கு வாய்ப்பில்லை. தீஞ்சுதையால் மண்ணின் குணம் சிதைவடைவது மட்டுமில்லாமல் காலப்போக்கில் அது பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும்‌. மண் கட்டுமானங்கள் குறைந்த செலவில் கட்டக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் முன்வைக்கும் சிமெண்ட் ஸ்டெப்லைஸ்டு வீடுகள் வழக்கமான வீடுகளைவிட அதிக செலவு வாய்ந்தவை. இந்தக் கலப்படப் போக்கு இயற்கைக் கட்டுமானங்கள் என்பது அழகியல் தொடர்புடையது என்ற வட்டத்தில் உள்ளடக்கிவிட்டது. சூழல் விழிப்புணர்வு கொண்ட மக்களின் சந்தையாக அது மாறியிருக்கிறது. இது 25 வருடங்களுக்கு முன்னர் தொடங்கியது, மேற்கத்திய வழக்கங்களைத் தழுவி அல்லது கடன் வாங்கி அது ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆய்வு முடிவுகள் மண்ணை நிலைப்படுத்த என்று சொல்லப்பட்டது. ஆனால் மண்ணின் தூயதன்மை இழக்கச் செய்தது. சுவாசிக்க முடியாமல் திணறியது மண்சுவர்கள்.

இதற்கு மாறாகச் சுண்ணாம்பும் மண்ணும் தானே குணமடையக்கூடியது. சிறிய விரிசல்கள் நல்லது தான்‌. கொஞ்சம் மண் கொண்டு அதை அடைத்து விடலாம். ஆனால் சிமெண்ட்டில் ஏற்படும் விரிசல் அதன் தொகுதிறனைப்(Integrity) பாதிக்கிறது.

அதீத நுகர்வுக்கலாச்சாரத்தில் உள்ள மற்ற பொருட்களைப் போல் கட்டுமான துறைக்கும் வரையறைக்குட்ட விதிகள் கொண்டு வரப்பட்டன, எந்திரங்களால் எளிதில் உருவாக்க வேண்டும், தொழிற்சாலையில் பெரும் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அதில் அடங்கும். ஒருபயிர்ச் சாகுபடியைப் போல ‘ஒருபொருள் கட்டுமானம்’ பிரபலமானது, தீப்பெட்டிகள் போல ஆனது வீடுகள், வசிப்பதே திணறலானது மற்றும் உடல்நிலையும் கவலைக்கிடமானது.

வடிவமைப்பில் பல அருவருப்பான உத்திகளைக் கையாண்டு பார்ப்போரைக்கவர்ச்சியூட்டுவதாகவும் பயனாளியைக் கட்டாயப்படுத்தி கட்டக்கூடியதாகவும் இக்காலக் கட்டடக்கலை உள்ளது. கட்டிடத்தின் சட்டகங்களை(frame) மூடப்பயன்படுத்தும் கண்ணாடிப் பலகங்கள்(panel) கட்டிடத்தை அதிக வெப்பமடையச் செய்யும்‌. அதை ஈடுகட்ட 4மடங்கு அதிக ஆற்றலால் குளிர்சாதனம் இயக்குவதும் விளைவாகக் கழிவுகாற்று அறையினுள் அடைபட்டு வசிப்பவர்களின் உடல்நலம் பாதிப்பதும் வழக்கமாக உள்ளது‌. இது நம்முடைய அடிப்படை அறிவை இழந்துவிட்டோம் என்று வெளிப்படுத்துகிறது. இக்காலக் கட்டிடக்கலை என்பது கொடுங்கோன்மை வாய்ந்த, சமூக நீதி அற்ற, அமைதி மற்றும் இன்பம் இழந்த வீட்டைக்கட்டுவதில் தான் முனைப்பில் உள்ளது. ஓட்டப்பந்தயத்தின் எல்லைக்கோடு அறியாமல் ஓடுகிறார்கள். நம்முடைய கட்டுமானமும்‌ நம்மைப் போலவே தனித்துவம் இல்லாமல், நிறமற்ற பிரதிகள் (குளோன்கள்) போல, மந்தமான மற்றும் ரசனையில்லாத பொருளாக மாறிவிட்டது.

இந்த மாற்றுக்கட்டுமான முறைகளைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது‌. அதில் பெரும்பாலானோர் சிமெண்ட்டில் மண்ணைச் சேர்த்து ‘எக்கோ பிரண்ட்லி(சூழலுக்கு நெருக்கமான)’ வீடுகள் எனக்கூறுகிறார்கள். சுவரில் தீஞ்சுதை சேர்ப்பது அது ஈரப்பதத்தை உறிஞ்சி பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சுவர்களை உடைத்துத் திரும்பப் பயன்படுத்தவும் முடியாது, பூமியுடன் சேராது‌. இக்காலத்திற்குத் தேவையான ஒன்று என்னவென்றால் கொஞ்சம் விழிப்பான ஆர்க்கிடெக்ட், மற்ற மக்கள், தானே வீடு கட்ட நினைப்பவர்கள் யாவரும் இயற்கையான பொருளை அதன் வழியில் நின்று ஏற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் முன்வைக்கும் கட்டுமான முறைகளை எடுத்துக்கூறுங்கள். அனைவரும் சேர்ந்து தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய இருந்த பல அறிவுக்களஞ்சியங்களை இழந்துவிட்டோம். மீண்டும் முயற்சித்தால் அதை மீட்டெடுக்க முடியும். எளிமையான முறையில் தீர்வைக்காணாமல், இயற்கையான பொருளை அதன் தன்மை மாறாமல் பயன்படுத்தும் இயற்கை கட்டிடக்கலைஞர்களாக இருக்க வேண்டும்.

தீஞ்சுதை வந்தபிறகு, மேற்கத்திய நாடுகளைப் போலவே இங்கும் நவீன முறையில் நிரந்தரமான வானளாவிய பளபளக்கும் கண்ணைக் கவரும் கட்டுமானங்களை எழுப்புவதை உறுதிமொழியாகக் கொண்டனர் பலர். பல நேர்மையான ஆய்வுகளும் கூறுவது என்னவென்றால் அது வெறும் மேற்தோற்றத்தில் காட்டும் போலி நடவடிக்கைகள். ஒரு கான்கிரீட் கட்டிடத்தின் ஆயுள் 50-60வருடங்கள் தான். ஆனால் அதை உருவாக்கத் தேவைப்படும் ஆற்றலுக்கு 1000வருடம் நிலைத்தாலும் ஈடாகாது. ஏனென்றால் இப்போது கண்டறிந்த ஒரு தொழிற்நுட்பம், நாம் கற்பனை செய்ய முடியாது அளவுக்கு நஞ்சுக்கழிவுகளை உருவாக்குகிறது. . இவற்றின் காலாவதி ஆகும் நேரம் முடிந்தவுடன் அக்கட்டிடங்களை என்ன செய்வது என்ற திட்டமிடலும் இங்கு யாரிடமும் இல்லை

வளர்ச்சி நடவடிக்கைகளும் மூடத்தனமான கான்கிரீட் மயமாதலும் என்ன செய்திருக்கிறது? வடிகால் வசதிகளை மூடியது. வெள்ளநீர் தேங்கி, மனிதர்கள் ஏற்படுத்திய பேரிடராக மாறியதற்குக் காரணமாகியது. இது ஒரு உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதை நம்மால் உணர முடியும். நமது கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்படும்போது மாநகரங்களில் சிறிய மழை செய்தாலும் நிலத்தில் நீர் ஊடுருவிச் செல்ல வழியில்லாத வகையில் மூடத்தனமாகக் கான்கிரீட் கலவை இட்டு அடைத்திருக்கிறார்கள்‌.

சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உணர்ந்த பின்னர் நம்முடைய நடவடிக்கைகளை மாற்றுவதை விட முற்றிலும் முதலிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. தீஞ்சுதை மட்டுமே பிரச்சினை ஏற்படுத்துகிறது என்பதல்ல நமது கருத்து. தொழிற்மயமாதல், வெப்பமயமாதல், உணவுத்தட்டுப்பாடு, பகட்டான தோற்றங்கள், வாழ்க்கை முறை மற்றும் பலவற்றின் புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் அவை அனைத்தும் தொடர்புடையது என்பது புரியும்‌. நவீனகால வாழ்க்கை முறை மாற்றங்கள், நம்மை இயந்தரத்தனமான வாழ்க்கை முறைக்கு அழைத்துச் சென்றுவிட்டது‌; பல கடுமையான சிக்கல்களைச் சமூகத்தில் உருவாக்கிவிட்டன. நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் ஆடம்பரமாக இல்லாமல் எளிமையானதாக இருக்கலாம்‌.மரபுத்தொடர்ச்சி கொண்டு சமூகத்துடன் சுமூகமாக வாழ்வுதான் அமைதியாக நலமாக வாழ்வதற்கான வழி.

சில தாவர மற்றும் விலங்கு மூலப்பொருட்கள் வைத்து நாமும் மாற்றங்களைக் கொண்டு வரலாம். பல நேர்மையான சிந்தனை களாலும் உந்துதலாலும் பல மக்கள் தற்போதுள்ள சமூகக்கட்டமைப்பை கேள்ளிகேட்கத் தொடங்கியுள்ளனர்‌. மூத்த கலைஞர்களும் கொத்தனார்களும் இத்தகைய பயணத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்‌. வேதங்கள் கூறும் கட்டுமான முறைகளால் வலிமையான நீடித்த ஆயுள் கொண்ட வீட்டைக் கட்டி முடிக்க முடியும். சுதை அல்லது சுண்ணாம்பு வைத்துத் தீஞ்சுதை செய்யும் வேலைகளில் நமக்குத் தேவையான சிலவற்றைச் செய்ய முடியும். வலிமை வேண்டுமானாலும் நீர்த்தடுப்பு வேண்டுமானாலும் நமக்கு நாமே செய்துகொள்ள முடியும். இயற்கைப் பொருளைத் தேர்ந்தெடுப்பதில் எண்ண முடியாத அளவில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதை உணர்ந்து நாம் தேர்ந்தெடுப்பதில் தான் பொருத்தமான விளைவு உருவாகும்‌. நமது அன்றாட வாழ்வில் சில நேரம் ஒதுக்கி அதைக் கற்றுக்கொண்டு பின்னர் சில மாதங்கள் எடுத்து நமது வீட்டைக்கட்ட முடியும். நீண்டநாட்கள் எடுத்தாலும் எடுக்கலாம்‌. தீஞ்சுதை பயன்பாட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதை விட, மண், மூங்கில், சுண்ணாம்பு, சுடுமண் மற்றும் இடுபொருட்கள் பயன்படுத்தி பொருத்தமான வீட்டைக்கட்ட முடியும் என்பதில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

ஆதாரங்கள்:

Reality of real estate: http://www.firstpost.com/business/1-2-crore-vacant-homes-one-number-tells-us-wrong-indian-real-estate-2220612.html

Cement and CO2 Emissions: http://www.rammedearthconsulting.com/rammed-earth-cement-co2.htm

Bhunga –earthquake resistant homes: http://aina.wikidot.com/documentation:traditional-circular-house-form-bhunga-in-kutc

Why cement should not be used with natural buildings: https://www.lowimpact.org/why-cement-should-never-be-used-on-straw-bale-houses/

Building materials of ancient India: https://www.scribd.com/document/235812176/Building-Materials-of-Ancient-India

தமிழாக்கம்: இ.குகப்பிரியா & து.கருப்பசாமிபாண்டி
ஆங்கிலத்தில் எழுதியவர்கள்: பிஜு பாஸ்கர் & முஷாரஃப் ஹெப்பலி
இக்கட்டுரை கிராமத்தின் பழம்பெரும் வீடுகள் தொடரின் ஒன்று.

All Posts

This post is also available in: English

5 thoughts on “தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்”

  1. தற்போது மக்கள் விழிபுணர்வுடன் இயற்கை உணவு ,இயற்கை விவசாயம் என்று மாறி வருகின்றனர். அதுபோல் முக்கியமான ஒன்று காற்று .நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்க வேண்டும், நாம் அதிக நேரம் செலவிடுவது நம் விடுகளில் தான் ஆகையால் இவ்வகை வீடுகள் முலம் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். இந்த ஆய்வின் முலம் மக்களுக்கு மண்வீட்டின் உள்ள பயன்களை அறிவித்து விழிபுணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றிகள்🙏🏻

  2. இவ்வளவு தீமை இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரியும்.
    நலம் பெறுவோம் வளம் பெறுவோம்…. ஆத்ம நமஸ்தே

  3. ஐயா வணக்கம். தீஞ்சுதை பற்றிய விரிவான ஆழமான அற்புதமான பல பயனுள்ள கருத்துக்கள் அழகாக எடுத்து கூறியது அருமை.நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on email

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:

படோடு கல் வீடு

இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இயற்கை நிறைவுகள்

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top