கொரோனா காலத்தில் காந்தி சொல்வதைக் கேட்போமா?

Understanding Gandhiji in the time of coronavirus FI

கொரோனா காலத்தில் காந்தி சொல்வதைக் கேட்போமா?

இக்கட்டுரை தணல் வலைப்பதிவின் உயிர்ப்பான கிராமங்கள் தொடர் இன் கீழ் வருகிறது. இந்தக் கட்டுரை, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களைக் காந்தியக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது மற்றும் அதற்கான உண்மையான காரணத்தையும் தீர்வையும் கண்டறிய முயற்சிக்கிறது. மேலும், இது ‘Swaraj-தற்சார்பு” என்ற சொல்லைப் பற்றிய புரிதலையும் இன்றைய இந்தியாவில் அதன் தேவையையும் வலியுறுத்துகிறது.

பொருளடக்கம்:

 • தொற்றுநோய்ப் பரவல்
 • நவீனத்துவத்தின் தோல்வி.
 • காந்தியக் கண்ணோட்டத்தை எடுத்துக்கொள்வது.
 • உண்மையான தற்சார்பு
 • காந்தியின் இலட்சிய தற்சார்புக் கிராமம்
 • வீடு கட்டுதல்
 • இந்திய கல்வி முறை எனும் அழகிய மரம் வேரோடு பிடுங்கப்பட்டது.
 • பிரட் லேபர்(ரொட்டி உழைப்பாளி)
 • ‘எளிமையான வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை’ என்பது அவரது மந்திரம்
 • இன்றைய இந்தியாவுக்குப் பொருந்தும் காந்தியின் கொள்கைகள்.

தொற்றுநோய் பரவல்

எப்பொழுதும் போல் ஒரு புதிய சதாப்தத்தில்(Decade) பல்வேறு கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் அடியெடுத்து வைக்கிறது இந்நாடு. மிகவும் சாதாரணமாகவும் வழக்கமாவும் போலதான் வாழ்க்கை எல்லாருக்கும் தென்பட்டது. இந்தியாவில் கோவிட்-19 தொற்றுப் பரவத்தொடங்கியது. விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்.
 
நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அனைவரின் வாழ்க்கையும் முடங்கிப்போனது. அன்புக்குரியவர்களிடம் நெருங்க முடியாமல் பிரிக்கப்பட்டோம்‌. பயணம் செய்ய இயலாமை, முகத்தை மறைத்தல், குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடந்துச் செல்கிறோம்‌. இரண்டாவது தெருக்களில் இறங்கி நடந்து செல்வதற்கே நம்மில் பெரும்பாலானோருக்குப் பயம்‌.

பொறுங்கள் மறுபக்கமும் பார்ப்போம்!

இந்தப்பெருந்தொற்று நேர்மையான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதை நாம் பாராட்டத் தவறக்கூடாது.
 
நமது அன்றாட வாழ்வில், அத்தியாவசியத் தேவைகள் எவை என அடையாளம் கொள்ளல், ஆடம்பரமான பகட்டு வாழ்க்கையை விடுதல், உடல்நலத்தில் கவனம் கொள்ளல், பிடித்த செயல்களைச் செய்தல், புதிய பழக்கவழக்கங்கள் கடைப்பிடித்தல் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் புரிந்துகொள்ளல் என வழிவகுத்தது. நம்மில் பலருக்கும் குடும்பம் மற்றும் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்தது‌.
 
காற்று மாசு கொண்ட நமது மாநகரங்கள் நிம்மதியாக மூச்சவிட்டன.
சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் முடக்கம் உடனடியாக காற்று மாசுவைக்குறைத்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், காற்று மாசுக்குக் காரணமான கரிம வாயு வெளிப்படவில்லை.
 
வாகனங்களின் இரைச்சல்கள் மறைந்து பறவைகளின் கீச்சிடல்கள் ஒலித்தன. சாலைகளில் விலங்குகள் நடமாடின‌. வானம் சுத்தமாக நீல நிறமாகக் காட்சியளித்தது. காற்று மற்றும் நீரில் தூய்மை பார்க்கமுடிந்தது. இதே நிலைமை தொற்று இல்லாத காலத்திலும் தக்கவைக்கப்பட்டால் மாநகரங்கள் எப்படி அழகாகயிருக்கும்!!!

காற்று மாசுவை வெகுவாகக் குறைத்தது மட்டுமில்லாமல் இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத் தன்சொந்த ஊருக்குத் திரும்ப வைத்தது!!!

நவீனத்துவத்தின் இறுதி தோல்வி

பல இலட்சம் மக்கள் நெடுஞ்சாலைகளில் கைவிடப்பட்டனர். தனது எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிவிட்டு பல மைல்கள் நடந்தே தன் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். உலகம் முழுவதும் இந்தப் பெருந்தொற்று உயிரிழப்புகளையும் பல சவால்களையும் ஏற்படுத்துகிறது என்றாலும் நமது நாட்டில் பெரும் வேலையின்மையை உருவாக்கியது‌. விளைவாக விளிம்புநிலை மக்களின் பட்டினியால் அவதியுற்றனர்.
 
நவீன இந்திய அமைப்பு நிலையற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தச் சம்பவங்கள். இந்த நவீன அமைப்புத் தனக்குக் கரம் கொடுத்து வேலை செய்தவரை இறுதியில் கைவிட்டது.
 

காந்தியக் கண்ணோட்டத்தை எடுத்துக்கொள்வது

நமது தேசத்தந்தை என்றழைக்கப்படும் காந்தி, நமது நாடு நமது மரபில் இருந்து விலகிச் செல்லும் போது சந்திக்கும் விளைவுகளை வெகு காலத்திற்கு முன்கூட்டியே எதிர்பார்த்தார். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி வறுமைக்கு வழிவகுக்கும் என அவர் தொலைநோக்குப் பார்வையுடன் கூறினார்.
 
காந்திஜி நவீன இந்திய நகரங்களை உபாஸ் மரத்துடன் ஒப்பிடுகிறார் -அது அதைச் சுற்றியுள்ள அனைத்து பூர்வீக வாழ்க்கையையும் அழிக்கும் ஒரு நச்சு மரம்.
 
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின், வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு இடையே இருக்கும் பல கிராமங்கள் வளர்ச்சியடையவில்லை. மாறாக கிராம மக்கள் நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்தனர். இது காந்தி எதிர்பார்த்த கிராமப்புற வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உண்மையாக்குகிறது.

கிராமங்கள் தான் இந்தியாவின் சொத்து

காந்தி கருத்துப்படி, “இந்தியா 7,50,000 கிராமங்களைக் கொண்டு வாழ்கிறது”, ” எமது மக்கள் இம்மண்ணில் வேரூன்றியவர்கள்”
 
” நாங்கள் கிராமப் புற நாகரிகத்தின் வாரிசுகள். பரப்பு நிலப்பரப்பு, மக்கள் தொகைச் செல்வம், நாட்டின் அமைவிடம், பருவச்சூழல் என அனைத்தையும் பார்க்கும் போது இந்நாடு கிராமப்புற நாகரித்திற்கானவை என்பது என் கருத்து. இவற்றை வேரோடு பிடுங்கி எறிவது பின்னர் நகர்ப்புற நாகத்திற்கு மாற்றுவது என்பது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது”

இந்தியச் சமூகத்தின் அடித்தளத்தை மையமாகக் கொண்டது அவரது சிந்தனை. அதாவது கிராமங்கள் தான் சுயசார்பான சமூகத்தை நிலைக்கச் செய்யும்.

உண்மையான தற்சார்பு:

காந்தி கருத்துப்படி தற்சார்பு என்பது ஒரு புனித வார்த்தை. தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் அவ்வார்த்தை பொருந்தும்.
 
“நம்மை நாமே ஆள்வதைக் கற்றுக்கொள்வதுதான் தற்சார்பு. ஆனால் அந்த அனுபவத்தை தனிஒருவராக அவர்அவர் அனுபவிக்க வேண்டும்…”

காந்தியின் இலட்சிய தற்சார்புக் கிராமம்

” எமது இலட்சிய கிராமம் அறிவாற்றல் நிறைந்த மனிதர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் அழுக்கு நிறைந்த இருளில் உள்ள விலங்குகளைப் போல் வாழமாட்டார்கள். ஆணும் பெண்ணும் சுதந்திர வாழ்வு வாழ்வார்கள். யாரையும் எதிர்பார்க்காமல் தங்களைத் தாமே பார்த்துக்கொள்ள முடியும். விளிம்புநிலை மக்களும் நாட்டை ஆளுபவர்களுக்கிணையாகவே மதிப்பளிக்கப் படுவர்.”
 
Village Swaraj என்ற அவரது குறிப்பில், ஒரு கிராமம் எப்படி முழுமையாகத் தன்னிறைவு அடைவது என்பதை விளக்கியுள்ளார்.
“ஒரு சிறந்த இந்தியக் கிராமம் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஐந்து மைல் சுற்றளவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதியுடன் கட்டப்பட்ட வீடுகளைக் கொண்டிருக்கும்”

இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?

இயற்கைக் கட்டுமானத்தை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் தணலுடன் சேர்ந்து கற்கலாம்.

வீடு கட்டுதல்:

இந்தியக் கிராமங்களில் உள்ள பாரம்பரிய வீடுகளை ஆராய்ந்தால், அந்தக் கட்டிடக்கலை எவ்வளவு சிறப்பானது என்பது புரியும்‌‌. காந்திய அணுகமுறையும் அதேதான்‌. உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சூழலுக்கு ஏற்பக் கட்டிடம் எழுப்பும் கலை. அது ஆடம்பரமாக இல்லாமல் நமது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். 
 
இங்கே ஏழு விதமான பாரம்பரிய வீடுகள் உதாரணமாகப் பாருங்கள். பல ஆண்டுகள் நிலைத்து நிற்பவை அவை. 
 
வீடுகள் முற்றம் கொண்டிருக்கும். அதில் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் பயிரிடப்பட்டிருக்கும்‌. கால்நடைகள் கட்டப்படுவதற்கான இடமும் இருக்கும்”
 
வாழ்வியல், கட்டுமானம் மற்றும் உணவு உற்பத்தி ஆகியவற்றிற்கிடையேயான இணக்கம்தான் இயற்கைக் கட்டிடக்கலை மற்றும் வாழ்வியலின் முதன்மையான கொள்கை. இந்திய நாகரிகத்தில் இந்த இணக்கம் பிரிக்க முடியாத ஒன்றாகத்தான் இருந்து வந்தது‌.
 
வயநாட்டில் உள்ள செருவாயல் இராமனின் 150ஆம் ஆண்டு பழமையான வீட்டில் இத்தகைய‌ இணக்கம் காணலாம்.
“கிராமத்துச் சாலைகள் மற்றும் தெருக்கள் கழிவுகளில்லாமல் சுத்தமாக இருக்கும். தேவைக்கேற்ப கிணறு அமைக்கப்பட்டு அனைவரும் அணுகும்படி இருக்கும். வழிபாட்டு இடம், சமூகக்கூடம், மேய்ச்சல் நிலம், ஒருங்கிணைந்த பண்ணை, தொழிற்கல்வி மையமாகக்கொண்டு கற்றுத்தரும் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியன காணப்படும்.”

இந்திய கல்வி முறை எனும் அழகிய மரம் வேரோடு பிடுங்கப்பட்டது

பல நூற்றாண்டுகள் செம்மையாக இருந்த இந்தியக் கல்வி முறை 18ம் நூற்றாண்டுவரை இருந்தது. நமது நாட்டைத் தொழிற்புரட்சி ஆதிக்கம் செலுத்திய பின் கல்வி முறையும் மாற்றம் சந்தித்தது. உலகக் கல்வி முறை நம்முடைய பாரம்பரியக் கல்வி முறையில் ஊடுருவி மாணவர்களை வகுப்பறைக்குள் அடைத்து அவர்களது சிந்திக்கும் திறனை ஓரிடத்தில் குவிக்கச் செய்தது. இது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரையும் சுற்றியுள்ள சூழல் மற்றும் உடல் உழைப்பிலிருந்து பிரித்தது. நவீனக் கல்வி முறையின் முக்கிய நோக்கமே நிறுவனங்களின் தேவைக்கேற்ப பெரும்பாலான மக்களைத் தயார் செய்வதாக இருந்தது.
 
இதற்கிடையில், உலகின் மற்றொரு பகுதியினர் நம் இந்திய நாட்டின் பாரம்பரியக் கல்வி முறையொத்த ஒன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கிக் கல்வி முறையின் தரத்தை உயர்த்தினர்.
 
காந்தி கருத்துப்படி,“உண்மையான கல்வி முறையில் வெறுமனே தகவல்களையும் எண்களையும் மூளையில் திணிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறுவது நோக்கமாகக் கொள்ளாமல் ஒருவரது பண்புகளை மேம்படுத்தச் செய்வதில் இருக்கிறது. உண்மையான கல்வி ஒருவரது மனதில் நற்மதிப்பு கொண்ட சிந்தனைகளை எழச்செய்யவதாகும்.”
 
இந்திய மரபுக் கல்வி முறை மற்ற நாடுகள் பின்பற்றும் கல்வி முறையிலிருந்து வேறுபட்டவை. அவை மதிப்புகள், ஒழுக்கம், திறமைகள், மரபு அறிவு, சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை வரும் சந்தினருக்குக் கடத்துவதாக இருந்தது‌. ஒவ்வொருவரும் தற்சார்பை அடைய உடல் உழைப்பு மற்றும் கலைநயத்தில் ஈடுபடுவது அவசிமாக இருந்தது‌.
 
தரம்பால் எனும் காந்திய சிந்தனையாளர் எழுதிய “The beautiful tree’ என்ற நூலில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இருந்த பாரம்பரியக் கல்வி முறையை அழகாகப் பகுப்பாய்வு செய்து விளக்குகிறார். 
 
ஒரு இலட்சிய கிராமத்தில் தகராறுகளைத் தீர்ப்பதற்கு பஞ்சாயத்துகள் இருக்கும்; அது அதன் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் அதன் சொந்த காதி ஆகியவற்றை உற்பத்தி செய்யும். இது ஒரு முன்மாதிரி கிராமம் பற்றிய எனது யோசனை.

பிரட் லேபர்(ரொட்டி உழைப்பாளி)

“நாம் உண்ணும் உணவு, வேர்வை சிந்தி உழைத்ததால் கிடைத்தாக இருக்கவேண்டும் என்பது இயற்கையின் விருப்பம்”
 
பிரட் லேபர் என்ற வார்த்தையை காந்தி குறிப்பிடுவதன் பொருள். ஒவ்வொருவரும் தனக்கான உணவையும் உடையையும் பெறுவதற்கு உடல் உழைப்பு செய்து பெறவேண்டும் என்பதாகும். உடல் உழைப்பு செய்யாதவர்கள் உணவு உட்கொள்ளும் உரிமை இல்லை.
 
“எல்லோரும் உடல் உழைப்பு செய்தால் அனைவருக்கும் போதுமான உணவும் ஓய்வு நேரமும் கிடைக்கும். அப்போது மக்கட்தொகைப் பெருக்கம் என்ற கூச்சல் இருக்காது. சுற்றிப்பார்க்கும் போது நோய்நொடி இல்லாமல் மக்கள் வாழ்வர். அந்த மாதிரி உழைப்பாளியாக இருப்பது தான் உயர்ந்த தியாகச் செயல்”
 
இந்தியச் சமூகத்தின் முதன்மையான தொழில் விவசாயம் தான்.
பெருமளவிலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு மண் வகைகளுக்கும் காலநிலைக்கும் ஏற்ற பயிர்களை பயிரிட்டனர். அனைத்து விவசாய முறைகளும் இயற்கையோடு இயைந்து செய்தவை. விவசாயத்தில் இப்போது உள்ள நெருக்கடியைப் பாரம்பரிய விவசாயத்தில் சந்தித்ததில்லை.
 
தொழில்மயமாதல் மற்றும் நவீனத்துவம் இந்தியாவைக் கைப்பற்றியபோது, விவசாயம் தொழில்நுட்பத்தின் கைகளுக்குச் சென்றது. பயிர் உற்பத்தியை அதிகரிக்க செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நிலத்தின் வளத்தை இழக்கச் செய்தது மற்றும் நீர்நிலைகள் அதிகமாகச் சீர்கெட்டுவிட்டது. மேலும், இப்போது, விவசாயிகள் அதிக மகசூல் தரும் குறிப்பிட்ட வகை பயிர்களைப் பயிரிட்டு இறுதியில் மண் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளின் பொருத்தமின்மையால் இழப்பைச்சந்திக்கின்றனர்.
 
மேலும், நவீன வசதிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுகின்றனர். பாரம்பரிய விவசாய முறை மறைவதால் விவசாயச் சமூகமும் வளமான விவசாய நிலங்களும் மறைந்து வருகிறது.
 
நமது தவறுகளைச் சரிசெய்யவதற்கான ஒரே வழி மரபு வழி விவசாயத்தை மீட்டெடுப்பதும் மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்வதும் ஆகும். தணல் வளாகத்தில் ஒரு மாதிரித் தோட்டம் அமைத்துள்ளோம்.

'எளிமையான வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை'
எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை
எளிமையான வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை‘ என்பது அவரது மந்திரம்.
 
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறியதன் மூலம், ஆடைகள், உணவுகள் மற்றும் பிற பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் கண்ணுக்குத் தெரியாமல் செல்வாக்கு செலுத்துகிறோம். இது இறுதியில் நமது ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் சீர்குலைத்து, இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது.
 
காந்தியிடம் ‘இந்திய நாடும் பிரிட்டன் போன்று வாழ வேண்டுமா?’ எனக் கேட்டபோது அவரது பதில் “ஒரு கோளின் வளத்தில் பாதி, பிரிட்டனைத் திருப்திப்படுத்தத் தேவைப்பட்டது. இந்தியா போன்ற நாட்டிற்கு எத்தனைக் கோள்கள் தேவைப்படும்?”
 
மகாத்மா காந்தியின் ‘எளிமையான வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை’ மதிப்புகள் இன்றைக்கு மட்டுமல்ல, எப்பொழும் முக்கியமானவை. தனிப்பட்ட அளவிலும், ஒவ்வொரு நபரும் அவரது வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் பயனடையலாம்.
 
இப்பொழுது நவீன இந்தியாவில் கூறப்படும் மினிமலிசம் வாழ்க்கை முறையை 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து சென்றுள்ளார். இயற்கை உணவுகளை விரும்பிச்சாப்பிட்டவர்‌. சிறுதானியங்களும் பச்சை உணவுப் பொருளும் அவரது விருப்பமான உணவுகள்.
 
மேற்கத்திய ஆடைகளைத் தவிர்த்துக் காதிப் பொருட்களை எந்த அளவிற்கு காந்தி விரும்பினார்‌ என்பது எல்லோருக்கும் தெரியும்.
காதி என்பது ஒரு துணி மட்டுமல்ல, அது சுதந்திரம், மரபு, ஒரு சித்தாந்தம் மற்றும் உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இன்று, நாம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தல் முதல் கார்பன் தடம் வரைப் பேசுகிறோம். ஃபேஷன் தொழில் மிகப்பெரிய மாசுபடுத்தும் ஒன்றாகும். ஆனால், காதி மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிகளில் ஒன்றாக இருக்கிறது.

இன்றைய இந்தியாவுக்குப் பொருந்தும் காந்தியின் கொள்கைகள்.

மரபு வாழ்க்கை முறை மற்றும் சமூகக்கட்டமைப்பானது புவியியல், காலநிலை மற்றும் சூழல் மாற்றங்களுக்கு ஏற்பப் பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆனால் இன்றைய இந்தியாவில் நமக்குப் பொருத்தமான, நிலையான நமது மரபை விட்டு விலகிச் சென்றுள்ளோம்.
 
மரபை விட்டுச் விலகிச் செல்வதன் விளைவை நாம் படிப்படியாகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம்‌. உலகமயமான வாழ்க்கை முறை நம்மை வலுவிழக்கச் செய்துள்ளது. சமூகத்தின் விளிம்புநிலையில் தற்சார்பு அடைவதுதான் இப்போதைய தேவை.
 
“இந்தியா உண்மையான சுதந்திரம் பெற, மக்கள் வாழ வேண்டிய
து கிராமங்களில் தான். நகரங்களிலோ, குடிசையிலோ அரண்மணையிலோ அல்ல’ என்று கருத்து அங்கிகரிக்கப்படும் போதுதான் நானும் திருப்தி கொள்வேன்.”
 
பாரம்பரியக் கட்டமைப்பை மீட்டெடுப்பதில் தான் ஒவ்வொரு கிராமும் சுதந்திரம் பெற்றுத் தனித்து இயங்கும். அது நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றும். தேசம் முழுவதும் வளரச்சி இருக்கும். வறுமை இல்லாமல் எந்த மக்களும் ஒதுக்கப்படாமல் வாழ்வார்கள்.
 
நம் மரபைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது. இளைஞர்கள் அதிகம் கொண்ட நம் நாட்டில், நாம் இணைந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் ஒரு தீர்வு மறைந்திருக்கும். இந்தத் தொற்றுக்காலம் நம்மைத் தூக்கத்திலிருந்து விழிக்கச்சொல்லி காந்திய வழியில் மரபு நடைமுறையில் பயணிக்கச் சொல்கிறது.
 
தணலின் 12 வருட அனுபவத்தில் பல மக்களும் மாநகரத்திலிருந்து கிராமம் நோக்கி நகர்வதைப் பார்க்கமுடிந்தது‌‌. மூத்தவர்கள், தம்பதியினர்கள், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் மற்றும் பலர் இயற்கை வீடு கட்டத் தொடங்கி இயற்கை வாழ்வியல் மேற்கொண்டுவருகின்றனர்.
 
இந்தக் கட்டுரையில் தமிழக இயற்கை விவசாயிகள் இயற்கை கட்டிடக்கலை பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டதைக் காணலாம்.
 
எனவே, கிராமப்புறப் பொருளாதாரத்தை மீண்டும் கொண்டுவரும் போது தற்சார்பு அடைவது என்பது வெகுதூரம் இல்லை!

ஓவியங்கள் : ஆர்க்கிடெக்ட் அனு திப்தி & இரமணி ராஜம்

Author picture

தமிழாக்கம்: து.கருப்பசாமிபாண்டி
ஆங்கிலத்தில் எழுதியவர்: நெ.இரமணி ராஜம்
இக்கட்டுரை 'உயிர்ப்பான கிராமங்கள்' தொடரில் ஒன்று

மற்ற பதிவுகள்

2 thoughts on “கொரோனா காலத்தில் காந்தி சொல்வதைக் கேட்போமா?”

 1. Anexcellent piece of writing.
  Living in Tirukoikur, close to Tanal, I wanted to visit you. But the wretched virus caught up with my whole family again and we are back in Chennai.
  Interested to know about the workshop on building natural houses. Please email or whatsapp details.
  With deep regards
  Ravichandran

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top