ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

திருவண்ணாமலை, தமிழ்நாடு – எங்கள் படைப்புகள் – தொடர் 2

வழக்கமான கட்டுமானத்தில் ஒரு கட்டுமானக் கலைஞர், கட்டிடப் பொறியாளர், தொழிலாளர், மற்றும் உரிமையாளர் ஆகியோர் தனது குறிப்பிட்ட வேலைகளில் மட்டுமே ஈடுபடுவார்கள். ஆனால் அதற்கு மாறாக அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி வேலை. செய்தால், அந்த படைப்பு எப்படி இருக்கும்? அப்படி ஒரு கவரும் கருத்தை தணல் முன்வைக்கும் பொருட்டு இந்த வீடு கட்டப்பட்டது. இயற்கை வழிக் கட்டுமான முறையில் ஒரு மண் வீட்டை உருவாக்க விரும்புபவர்களுக்கு, தாங்களே வேலை செய்து கற்றுக்கொள்ள தணல் வழி வகுத்தது. திருவண்ணாமலை சமுத்திர ஏரிக்கரை அருகே உள்ள ஆனந்தவனம், கலைக்கூடத்தில் உள்ள இந்த மண்வீடு முற்றிலும் தன்னார்வலர்களின் வேலைப்பாட்டால் எழுப்பப்பட்டது. இது இயற்கை கட்டிடக்கலைஞர், திரு.பிஜு பாஸ்கரின் சிந்தனை மற்றும் வழிகாட்டுதலினாலும், மற்றும் அனுபவமிக்க மூங்கில் கைவினைஞர்களான சுவாமி மற்றும் காசிஅண்ணா ஆகியோரின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த நாட்டுப்புறக் கட்டுமானம் வெறும் 350 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. கோடைகால இரவில் சுகமாக உறங்கும் இடமாக தாழ்வாரத்தில் ஒரு திண்ணை இருக்கிறது. அது நீண்ட நெடு வேலைக்குப் பின் ஓய்வெடுக்கும் இடமாகவும் அமைகிறது. உள்ளே அமைக்கப்பெற்றிருக்கும் தாழ்வான மேடை எழுத, உட்கார மற்றும் உறங்கும் இடமாகத் திகழ்கிறது. வருபவரைத் கவரும் வண்ணம் அதன் சுற்றுப்புறமும் இயற்கை எழிலுடன் சூழப்பட்டுள்ளது. குறைந்த உயர சாளரங்கள் வழியே திறந்தவெளியின் அழகான காட்சிகளை கண்டு மகிழலாம்.. மேலே ஒரு பரந்த வெளி கொண்ட பரண், வீட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மூங்கில் ஏணி, பரணுக்கு அழைத்துச் செல்லும்.

வெறும் சுண்ணாம்பு, மண், சுடுமண்(டெரகோட்டா) மற்றும் மூங்கில் போன்ற எளிய பொருட்களின் மூலம் வசதியான வெளியைக் கொண்ட கட்டுமானத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இந்தவீடு ஒரு சான்று. அடித்தளமானது கல் மற்றும் சுண்ணாம்பால் ஆனது. மண், சுண்ணாம்பு, தண்ணீர் மற்றும் வைகோல் ஆகியன கலந்து சுவர்கள் எழுப்பப்பட்டு வெளிப்பூச்சும் பூசப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய சாளரங்கள் மற்றும் கதவுகளும் இவ்வீட்டில் மீண்டும் தன் பயன்பாட்டைத் தொடர்கின்றன. தரை தளம், சுடுமண் (டெரகோட்டா) ஓடுகளால் ஆனது. மூங்கில் சட்டம் மற்றும் தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்டுள்ளது. பரண் பயன்படுத்த ஏதுவாக இருக்க, கூரை அதிக வாட்டம் கொண்டுள்ளது. மண் சுவற்றின் உள்ளேயே மாடக்குழிகள் செய்தும், மண் பானைகள் வைத்தும் அதைச்சுற்றி உடைந்த ஒடுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. சுவரிலே அடுக்குவளம்(Shelf) கட்டப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வைப்பகமாகச்(Storage) செயல்படுகிறது. இக்கட்டுமானத்தின் மொத்த செலவு ரூ 85,000 க்கும் குறைவானதே!

ஏரிக்கரை மண் வீடு பற்றிய ஆவணங்களைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

ஒரு இயற்கை வீடு கட்டுவதால் நமக்கு கிடைக்கும் வெகுமதி என்ன? அதைக் கட்டி எழுப்பும் செயல்முறையே இன்பம் தரக்கூடியது. மேலும் பொருட்களைக் கவனமாகக் கையாண்டு ஒரு கட்டுமானத்தை எழுப்பும் போது அதன் பின்னர் நம்மை பல்வேறு எதிர்மறையான சூழலில் இருந்து அக்கட்டுமானம் பாதுகாக்கிறது. கட்டுமானச் செயல்முறை, நம்மை இயற்கையுடன் தொடர்பு படுத்துவது அல்லாமல், மற்ற மனிதர்களுடனும் நல்லுறவை ஏற்படுத்த உதவுகிறது.. இதுவே இயல்பான வாழ்க்கை முறை. இவ்வாறு இயற்கைவீடுகள் கற்பிக்கும் பாடங்களைக் கொண்டு குறைந்த எண்ணிக்கையில் வீடு கட்டி வலிமையான சமூகத்தை உருவாக்கி இப்புவி அமைதியாக இருக்க வேண்டுவோம்

புதுக்கம்(Update):

31 ஜூலை 2018

பொதுவாகவே பலரிடம் எழும் கேள்வி, சிமெண்ட் சேர்க்காத மண் வீடுகள் மழையில் தாங்குமா? வெள்ளம் வந்தால் என்ன நடக்கும்‌? இதற்குப் பதிலளிக்கும் வகையில் இங்கே ஒரு காணொளி இருக்கிறது. திருவண்ணாமலையில் டிசம்பர் 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏரிக்கரை மண்வீட்டை வெள்ளநீர் சூழ்ந்தும் அவ்வீட்டிற்கு எந்தப் பாதுப்பும் நேரவில்லை என்பதை அந்த காணொளியில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 4அடி உயரத்தில் 3நாட்களுக்கு வெள்ளநீர் தேங்கியிருந்தது‌.

இத்தனைக்கும் இந்த வீடு கட்டும் போது மண்ணுடன் சிமெண்ட் சேர்க்கப்படவில்லை. கட்டடி(plinth) பாதுகாப்பு கிடையாது. அடித்தளத்தில் நீர்வடியக்குழாய்கள்(french drain)ஏதும் பதிக்கப்படவில்லை. கட்டடிப் பட்டி(plinth beam), சுவரில் நீர் மேலேற்றத்தைத் தடுக்க எந்தவொரு நீர்த்தடுப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை. அடித்தளம் வழியாக நீர் கசிந்து அறையின் தளத்தில் வராமல் இருக்க EPDM விரிப்போ அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் விரிப்போ இடவில்லை. ஆனால் சுவர் ஈரமானதால் கரையான்கள் வர ஆரம்பித்தன‌. அதைத் தடுக்க சுண்ணாம்பும் தாவர இடுபொருளும் சேர்த்து மூன்று தடவை பூச்சு பூசப்பட்டது.

மண்ணுடன்‌ சேர்த்த கடுக்காய்-வெள்ளக் கரைசல் மற்றும் சுண்ணாம்பு, மண்ணை நிலைப்படுத்தி அத்தகைய வெள்ளத்திலும் தாங்கி நிற்க உதவியிருக்கிறது.

அதனால் மண் வீடுகள் கட்டும் போது வெள்ளம் அதிகம் ஏற்படும் இடங்களில் கீழ்க்கண்ட வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

  • உபரி நீர் வெளியேறும் வகையிலான வடிகால் அமைப்புகள்
  • நிலத்தின் உயர்வான இடத்தில் கட்டிடம் கட்டுதல்
  • நீர்க்கசிவு இல்லா கூரை
  • நிலத்தின் மட்டத்திலிருந்து குறைந்தது 3 முதல் 4 அடி உயரத்திற்கு கல்லால் ஆன சுவர்.
  • சுண்ணாம்பு மற்றும் இடுபொருட்கள் மண்ணுடன் சேர்த்து முறையாக நிலைப்படுத்துவது.
  • கட்டிடத்தைச்சுற்றி தண்ணீர் தேங்காதவாறும் கட்டிடத்தை நீர்த்தாக்காதவாறும் இருக்க முறையாக வடிகால்கள் அமைத்தல். ஒருவேளை அடித்தளத்தில் நீர்ப்புகுவதாக இருந்தால் பிரஞ்சு ட்ரைன் எனப்படும் முறையில் அடித்தளத்தினுள் வடிகால்கள் அமைக்கலாம்‌.
  • கட்டடிப்பாதுகாப்பும்(plinth protection) அதற்குரிய தண்ணீர்த் தடுப்புப் பூச்சும்‌
  • சுதையால் ஆன கட்டடித் தூலம்(plinth beam) அடித்தளத்தில் இருந்து சுவருக்கு நீர் மேலேறுவதைத்தடுக்கும்.
  • மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் விரிப்புகளை தரைதளத்தில் அடி அடுக்குப் போடும்முன் விரிப்பதால் அடித்தளம் வழியாக கீழிறிருந்து நீர் அறையில் மேலேறுவதைத்தடுக்கலாம்.

This post is also available in: English

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on email

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

Cementum athan mohamum
இயற்கை நிறைவுகள்

தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்

சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இயற்கை நிறைவுகள்

ராஜஸ்தானின் பூச்சுகள்.

ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம். அரண்மனைகளின் காணப்படும் ஆடம்பரமான நிறைவுகள்(Finishes) அல்லது பூச்சுகள் ஒன்று. மற்றொன்று சிக்கனமானப் பூச்சுகள். இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top