நேர்காணல் : தாப்பி, சுண்ணாம்பின் ஒரு சிறப்புக் கருவி

நேர்காணல் : தாப்பி, சுண்ணாம்பின் ஒரு சிறப்புக் கருவி

மறுமலர்ச்சி தொடர்: தாப்பி-அரைஷ்-சுண்ணாம்பு-பூச்சு, இராஜஸ்தான்

திரு.அப்துல் ரசாக் முவ்வல் (என்ற பாஜி மேஸ்திரி ) இராஜஸ்தானில் உள்ள சர்தார்சாகரின் ஒரு மூத்த கொத்தனார் மற்றும் சுண்ணாம்புக் கலைஞர். இவர் வேளாண் தொழில் மற்றும் சூளை வேலை செய்த வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த மகன் என்பதால், இவருடைய மனைவியின் தாத்தாவான பெயிண்டர் திரு.அப்துல் அவர்களிடம் ஏழுவயதிலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டார். அப்துல் அவர்கள் சர்தார்சாகரில் தான் பணிசெய்த ஹவெலி மற்றும் கோபுரகடிகாரம் மூலம் மிகவும் அறியப்பட்டவர். பின்னர் ரசாக் அய்யா கொத்தனாராகிச் சர்தார்சாகர், ஜெய்ப்பூர் மற்றும் கோவாவில் பல கட்டுமானகளைக் கட்டியுள்ளார். மும்பையில் உள்ள முக்கிய கட்டிடக்கலைஞர்களுடன் பல மறுசீரமைப்புப் பணிகளில் (பிந்தி பஜாரில் உள்ள கோல்தேவ் கோவிலில்) முக்கிய அங்கமாக இவர் வேலை செய்துள்ளார். இவர் திரு.தாவூத் இப்ராகிமின் அண்ணனும் கூட. சர்தார் சாகரில் வைகாசி மாதம் (மே 2018) நடந்த தாப்பி, அரைஷ் பூச்சு வகுப்பில் இவர் முக்கிய பங்கினை வகித்தவர். தனது அறுபத்தி எட்டாவது வயதில் கூட வேலை செய்தும், சுண்ணாம்பு கலைஞர்கள் கூட்டமைபின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். பிஜு பாஸ்கரும் பாஜி மேஸ்திரியும் மேற்கொண்ட நீண்ட உரையாடலுக்குப்பின் சுண்ணாம்பு மற்றும் தாப்பிப் பூச்சுவைப் பற்றி எழுப்பிய சில எளிய கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தார் பாஜி மேஸ்திரி‌. அவை பின்வருமாறு.

1. தாப்பிப் பூச்சு என்றால் என்ன?

தாப்பி என்பது கையில் அடங்கக்கூடிய ஒரு மரக்கட்டை‌. சுண்ணாம்பு மற்றும் சுடுமண் கலந்து செய்த சாந்துவைப் பூசிய பின்பு அக்கட்டையால் தட்டுவதால் சுண்ணாம்பும் நன்கு பிணைந்து விடும். அப்படி இரண்டும் பிணைய வில்லை என்றால் சுவரில் இருந்து பூச்சு எளிதில் உதிர்ந்து விடும் அல்லது பூச்சுவில் விரிசல் வரலாம். தாப்பிக் கொடுத்தபின் அதாவது தாப்பி என்று சொல்லக்கூடிய மரக்கட்டையால் தட்டிய பிறகு சுண்ணாம்பும் சுடுமண்ணும் பிணைந்து ஒரே பொருளாக மாறுவதால் நீர்ப்புகாத தன்மையைப் பெறுகிறது அப்பூச்சு. துணியை துவைத்து நெருப்புப்பெட்டியால் தேய்க்கும் போது துணி எவ்வாறு விறைப்பாகவும் கடினமாகவும் மாறுகிறதோ அதேமாதிரி தாப்பி செயல்முறையும் பூச்சுக்களின் பல அடுக்குகளை அழுத்திச் சேர்த்து ஒரே அடுக்காக மாற்றுகிறது. தாப்பி கொடுக்கும் போது இரண்டு மரக்கட்டைகளைத் தட்டினால் ஏற்படும் சத்தம் போல் ஒரு ஒலி கேட்கும். அது சுண்ணாம்பு உலர்ந்து கடினமடையத்தொடங்குகிறது என்று பொருள்.

இந்தியாவில் சுண்ணாம்பைப் பலவகையான முறைகளில் தட்டிக்கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது.பூசியபின் உடனடியாக தாப்பி கொடுக்கும் போது, பூச்சுகளில் உள்ள சிறுசிறு இடைவெளிகள் குறையும். வெளிப்பரப்பில் சுண்ணாம்புப் பால் வெளிவரத்துவங்கும்‌. இதுவே சுடுமண் துகளும் சுண்ணாம்பும் ஒன்றுடன் ஒன்று பிணையக்காரணமாகி வலிமையாக இருக்க உதவுகிறது.

2.நீங்கள் பார்த்த அல்லது பணிபுரிந்த சுண்ணாம்பின் முக்கிய வகைகள் யாவை?

சிம்லா சுண்ணாம்பு, மீதா சுண்ணாம்பு, தர்பாரி சுண்ணாம்பு, களி மற்றும் கலார் சுண்ணாம்பு போன்ற பல்வேறு வகையான கல் சுண்ணாம்புகள். ராஜஸ்தானில் கிடைக்கும்.

நிலத்துக்கடியில் இயற்கையாகவே பல வகையான சுண்ணாம்பு கற்கள் காணப்படுகின்றன. வலுவாக இருக்கும் சுண்ணாம்புக்கற்களை, அடுக்கி அடுக்கி, சுவர் அல்லது அடித்தளக் கட்டுவேலைக்குப் பயன்படுத்தலாம். துளைகளும் இடைவெளியும் கொண்ட சுண்ணாம்பு கற்கள், சுண்ணாம்பைத் தயாரிக்கப் பயன்படுகின்றன.

கச்சி சூளை மற்றும் பக்கி சூளை ஆகிய இரண்டு வகையான சூளைகள் உள்ளன, இதில் சுண்ணாம்பு கற்கள் எரிக்கப்படுகின்றன. கச்சி சூளை என்பது சாணி வறட்டி கொண்டு எரிக்கப்படுவது. இது திறந்த நிலையில், மூடப்படாமல் எரிக்கப்படுவதனால், வெப்பநிலை குறைவாக இருக்கும். எரியும் நேரமும் குறைவு (ஒரே இரவில் எரிந்துவிடும்). அடுத்த நாளே சூளையில் இருந்து சுட்ட சுண்ணாம்பு பயன்பாட்டுக்கு எடுக்கப்படுகிறது. பக்கி சூளையில் எரிப்பதற்கு மரம் அல்லது கரியைப் பயன்படுத்துகிறார்கள். இச்சூளைப் பொதுவாக மண்ணால் கட்டியதாக இருக்கும், மூடப்பட்ட நிலையில் எரிக்கப்படும். இது நீண்ட காலத்திற்கு எரிக்கப்பட்டு, கற்களை குளிர்விக்க சில நாட்கள் ஆகும். இதில் வெப்பநிலை கச்சி சூளையை விடவும் அதிகம்.

சிம்லா சுனா என்பது சர்தார் சாகரில்(ரசாக் அய்யவின் சொந்த ஊர்) காணப்படும் ஒரு வகை கல் சுண்ணாம்பு. இது ‘தண்ட் கா பட்டா” என்ற சூளையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.( ‘தண்ட்’ என்பது ஒரு வகை சுண்ணாம்பு கல்). இது ஒரு பக்கி சூளையில் பிரித்தெடுத்த பிறகு, இதை செக்கில் அரைத்த பிறகே பயன்படுத்தப்படுகிறது. சிம்லா சுனாவும் சுர்க்கியும்(எரித்த மண்) ஒன்றாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சுர்கி அல்லது சுடுமண் பொடி கிடைக்கவில்லை என்றால், உடைந்த செங்கற்கள் செக்கில் சேர்க்கப்படுகின்றன. இச்சுண்ணாம்பு வகை முன்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது இந்த வேலைப்பாடு காணப்படுவதில்லை.

பிகானேரில் (ராஜஸ்தானில் ஒரு இடம்), கிடைக்கும் ஒரு வகை சுண்ணாம்புக் கற்கள் ‘கடக்’ எனப்படும். அவற்றில் இருந்து ‘தர்பாரி’ சுனா பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவும் அரைக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இதன் வலிமை ‘களி சுனா’ விடக் குறைவானது. தர்பாரி சுனாபக்கி சூளையில்’ (மூடிய சூளை, மிக அதிக வெப்பநிலையுடன் எரித்தல்) மட்டுமே எரிக்கப்படும். சூளை வைப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ள நிலையில் இக்கற்களஇக் கண்டெடுப்பது கடினமாகி உள்ளது.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அல்லது பி.ஓ.பி.யின் முக்கிய மூலப்பொருளானது மீதா சுண்ணாம்பு. தற்பொழுது பி.ஓ.பி என்று அழைக்கப்படுவது இச்சுண்ணாம்பு தான். இது ஒரு ‘கச்சா’ சூலையில் இருந்து எரிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. மாட்டு சாண வறட்டியில் எரித்து, செக்கில் அரைத்த பிறகே அதைப் பயன்படுத்துவர். கட்டுமான வேலை நடக்கும் இடத்திலேயே ஒரு கச்சி சூலை மிக எளிதாக உருவாக்கி, ஒரே இரவில் சுண்ணாம்பு கற்களைச் சுட்டுப் பயன்படுத்தலாம். களி, தூய வெள்ளைச் சுண்ணாம்புக் கல்லில் இருந்து, ஒரு பக்கிப் பட்டியில் (அதிக வெப்பநிலை எரியும் சூளை) பிரித்தெடுக்கப்படுகிறது.

‘களி சுண்ணாம்பு’ என்பது வெள்ளைநிறம் மிகுந்த சுண்ணாம்புக் கற்களில் இருந்து எடுக்கப்படும் சுண்ணாம்பு வகை. இது பக்கி சூளையில் தயாரிக்கப்படும் கல் சுண்ணாம்பு.

‘களி சுண்ணாம்பு’ மற்றும் ‘கலர் சுண்ணாம்பு’ ஆகிய இரண்டையும் தற்போது சிமென்ட் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

தணல் செய்த ஆய்வின்படி, பல கட்டிடக்கலைஞர்களும் ஆசான்களும் கூறியது என்னவென்றால் சுண்ணாம்புச் சேர்த்த சாந்துவை அரைத்துப் பயன்படுத்துவதால் நல்ல பிணைப்பு உருவாகும் என்பதே‌! இதில் தமிழ்நாடு முதல் இராஜஸ்தான் வரை தொழில்நுட்பங்கள் மாறலாம்; ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான்.

3. வெவ்வேறு வகையான சுண்ணாம்பு இருப்பதால், தாப்பி கொடுக்கும் முறையும் வேறுபடுகிறதா? .

சுண்ணாம்பு வகைகளைப் பொருட்படுத்தாமல் தாப்பி ஒரே வழியில் பயன்படுத்தப்படுகிறது. பூச்சில் விரிசல்கள் உருவாகும் நிலையில், சுண்ணாம்பு மற்றும் சுர்க்கியின் விகிதங்களை மாற்ற நேரிடலாம்.

4. தாப்பிப் பயன்படுத்தப்படாத சுவர்களை நீங்கள் எங்கே பார்த்திருக்கிறீர்கள்?

அனைத்து வகையான சுண்ணாம்பிலும் தாப்பி கொடுக்க தேவையில்லை. ராஜஸ்தானில் மீதா சுனா (ராஜஸ்தானில் மிகவும் தூய்மையான சுண்ணாம்பு வகை) என்பதால் தாப்பிப் பயன்பாடு தேவையில்லை. மீதா சுனா வெளிப்புறச் சுவர்களில் பயன்படுத்தினால், அது வீங்கி வலிமையை இழக்கும். இவ்வகைச் சுண்ணாம்பு உட்புறப் பூச்சில் மட்டுமே பயன்படுகிறது.

5. நீங்கள் கோவாவிலும் பணியாற்றியுள்ளதால், கிளிஞ்சல் சுண்ணாம்பு பற்றிய உங்கள் அனுபவம் என்ன?

கிளிஞ்சல் சுண்ணாம்பு, மிகவும் தூய்மையான, உயர் தரமான சுண்ணாம்பு வகை. ‘கடா’ பூச்சு (மார்பில் பொடி கலந்த பூச்சு) செயல்முறையின் போது பல அடுக்குகளின் இறுதிக் கட்ட அடுக்கில் தூய வெள்ளையான சுண்ணாம்பு தேவைப்படும். பல கலைஞர்கள், கிளிஞ்சல் சுண்ணாம்பைப் பயன்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். வெளிச் சுவர்ப் பூச்சுகளில் யாரும் இதைப் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை. இது மிகவும் தூய்மையாகவும் மென்மையானதாகவும் இருப்பதால், கையாளக் கடினமாக இருக்கும். ராஜஸ்தானில் கிளிஞ்சல் சுண்ணாம்பு கிடைப்பதும் மிகக் குறைவு.

கல் சுண்ணாம்பைக் காட்டிலும் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தது. ஏனெனில் கல் சுண்ணாம்பில் உள்ள அசுத்தங்கள் சுர்கி மற்றும் சுண்ணாம்பின் சிறந்த பிணைப்புக்கு உதவுகின்றன. கிளிஞ்சல் சுண்ணாம்பு ‘பக்கி சூளையில்’ கரி மற்றும் மற்ற ஏரிபொருட்களுடன் எரிக்கப்படும்போது, அதன் சாம்பல் சுண்ணாம்பின் மென்மை தன்மையை குறைக்கிறது. இந்த மாசுக்கள் பிணைப்பு திறனையும் அதிகப்படுத்துகிறது.

இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?

இயற்கைக் கட்டுமானத்தை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் தணலுடன் சேர்ந்து கற்கலாம்.

6. தாப்பிப் பூச்சுவின் நன்மைகள் யாவை?

இது கட்டுமானத்தின் உட்புறத்தை மிகவும் குளிச்சியாக வைக்க செயல்படுகிறது. மண் சிறந்த வெப்பத் தடை; சுண்ணாம்பு இரண்டாவதாக சிறந்தது. கற்கள் கொண்டு எழுப்பும் கட்டுமானம் மண் அல்லது சுண்ணாம்பைக் காட்டிலும் வெப்பமாக இருக்கும். வெளிப்புற வெப்பம் ஒருபோதும் சுண்ணாம்புப் பூசப்பட்ட வீட்டில் உறிஞ்சப்படுவதில்லை.

சுண்ணாம்பின் வலிமையும் காலப்போக்கில் அதிகரிக்கிறது (சுண்ணாம்பு, கரிமக் காற்றை எடுத்துக் கடினமாவதால்). ஆனால் இது சுண்ணாம்பு மற்றும் சுர்க்கியின் விகிதத்தைப் பொறுத்தது. இது ஸ்டீல் அல்லது கான்கிரீட் போன்றில்லாமல், காலத்தைத் தாண்டி வாழும்.

7. தாப்பிப் பூச்சுவின் நீர்ப்புகாத் தன்மையை பற்றிக் கூறுங்கள்.

தாப்பி வழங்கப்படுவதால் பூச்சிவின் மேற்பரப்பிலுள்ள விரிசல்கள் நீங்குகின்றன; சுர்கி மற்றும் சுண்ணாம்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து, நீர்த்துளி உள்ளே செல்வதை தடுக்கிறது. இது பூச்சை நீர்ப் புகாவாறு மாற்றுகிறது. லோஹி அல்லது அரைஷ் எனப்படும் பூச்சுகளைத் தாப்பிப் பூச்சுவின் மேலே பூசி இன்னும் வலிமையாக்கலாம். நமது தோலைத் துணிப் பாதுகாப்பது போலதான் இது செயல்படுகிறது.

சுண்ணாம்பு மற்றும் சுர்கி ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் பொசோலானிக் வினையின் காரணமாகப் பூச்சு, நீர்த்தடுப்புத்திறனைப் பெறுகிறது. தாப்பி கொடுப்பதால் விரிசல்கள் நீங்கி நீர் நுழைவதைத் தடுக்கிறது. இதைப்பற்றித் தெரிந்துகொள்ள தாவூத் அய்யாவுடன் நேர்காணல்-. கட்டுரையை வாசிக்கவும்.

8. பல அடுக்குகளாகப் பூச்சு செய்வது அவசியமா?

சுவர்களைப் பாதுகாக்க ஒரு அடுக்குத் தாப்பிப் பூச்சு மட்டுமே போதுமானது. சர்தார் சாகரில் ஒரு அடுக்குப் பூச்சு மட்டுமே கொண்ட பல கட்டுமானங்கள், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதைக் காணலாம்.

லோஹி மற்றும் அரைஷ் ஆகிய இரண்டும், உட்புறச் சுவர்களில், அதாவது மென்மையான பூச்சுகள் விரும்பப்படும் இடங்களில் பரவலாக செய்யப்பட்டன. நுட்பமான வேலைகள் செய்வதற்கும் ஓவியங்கள் வரைவதற்கும், மென்மையான பரப்பு தேவைப்பட்டது. அவை லோஹி மற்றும் அரேஷ் ஆகியவற்றின் மீது செய்யப்பட்டன.

9. தாப்பி செய்வதற்கான வெவ்வேறு வழிகள் யாவை?

தாப்பி நேரான கோடுகளில் வழங்கப்படுகிறது. அதில்லாமல் வட்ட வடிவங்களில் சிறு பள்ளங்களாகக் கொடுக்கலாம்.

10. இந்தப் பூச்சில் என்னென்ன பொருட்கள் சேர்ப்பீர்கள்?

வெந்தய விதைகள் மற்றும் வெல்லம் அரைக்கப்பட்டு, தண்ணீரில் கலந்து ஒரு இரவுப் புளிக்க வைத்துப் பூச்சுடன் கலக்கப்படும். இதனால் பூச்சுவின் வலிமை மற்றும் நீர்ப்புகாத குணம் அதிகரிக்கும். வெந்தய ஊறல் சேர்க்கும் போது சாந்து குலைவுத் தன்மை பெறுகிறது. வெல்லம், தண்ணீரில் கலக்கப்பட்டு, பூச்சு சாந்திலும் சேர்க்கப்படுகிறது. ஹவேலியில் பணிபுரிந்தவர்கள் காலமாகிவிட்டார்கள், ஆனால் வெந்தயம்-வெல்லம் சேர்த்து செய்த பூச்சுகளால் பல ஹவேலிகள் இன்றும் நிற்கின்றன.

மூன்ஜ் (ஒரு வகைப் புல் ) தாப்பிப் பூச்சுவின் முதல் அடுக்கில் சேர்க்கப்படுகிறது. இது விரிசல்களைக் குறைக்கவும், கூரை மற்றும் தளங்கள் போன்ற இடங்களில் பூச்சு வலிமையாக இருக்கவும் சேர்க்கப்படுகிறது.

சுவர் சந்திகளான தளமும் சுவரும் இணையும் இடம், சுவரும் சுவரும் இணையும் இடம், சுவரின் விளிம்புகள், சுவரில் திறப்புகள் உள்ள இடத்தில் பூச்சு செய்யும் போது விளாம்பழத்தின் சாறு சேர்ப்பதுண்டு.

சன்னமான துளைகள் கொண்ட சல்லடையில் சலித்த சுடுமண்-சுண்ணாம்பு உள்ளடக்கிய லோஹி (இரண்டாவது அடுக்கு ) மிகவும் மெல்லிய அடுக்காகப் பூசப்படும். அதிகபட்சமாக இரண்டு நூல் தடிமன் தான் பூசப்படும். லோஹி கொண்டு, உருவங்கள் பொறிப்பது போன்ற நுட்பமான வேலைகள் செய்யப்படவேண்டுமெனில் வெந்தய-வெல்ல சாறு சேர்க்கப்படும்.

11. பூச்சின் போது தடிமனான அடுக்கு எவ்வாறு பூசப்படுகிறது?

2 வது அடுக்கு, லோஹியின் (நன்றாக சலித்த சுண்ணாம்பு மற்றும் சுர்கி) தடிமனான அடுக்கைச் சேர்க்க, நீங்கள் மீதா சுண்ணாம்பு அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பு பயன்படுத்தப்படவேண்டும்

12. பூச்சிற்கு முன் எவ்வளவு நேரம் சுண்ணாம்பை ஊறவைப்பீர்கள்?

சுண்ணாம்பைத் தண்ணீரில் போடும்போது, வெப்பம் வெளியிடப்படும் (சிம்லா சுண்ணாம்பு போன்ற சில வகைகள் வெப்பத்தை வெளியிடாது). அது குளிர்ந்தவுடன், நீங்கள் சுண்ணாம்பைப் பயன்படுத்தத் தொடங்கலாம் . பயன்படுத்துவதற்கு முன் சுண்ணாம்பில் எந்த வெப்பமும் இருக்கக்கூடாது.

13. கற்சுவர்களில் தாப்பிப் பூச்சு எவ்வாறு செய்யப்படுகிறது?

கல் கட்டுவேலை முடிந்தபின்னர் ‘களி’ சுண்ணாம்பு கொண்டு ஒரு தடவை முலாம் பூசிக் குறைந்தது இரண்டு மாதங்கள் விடவேண்டும். இதைச் செய்வதற்குக் காரணம் கற்களும் அதன் பிணைப்பில் உள்ள சாந்தும் வெவ்வேறு அளவில் ஈரப்பதம் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பூச்சுவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஒரே விதமான பரப்பாக இருக்க இவ்வாறு செய்க‌. இது கடினமடைந்தபிறகு முதல் அடுக்கான சுடுமண்- சுண்ணாம்பு கலந்த சாந்து கொண்டுப் பூசிப் பின்னர் தாப்பிக் கொடுக்கலாம்.

14. கூரையின் மேற்பரப்பில் எவ்வாறு தாப்பிப்பூச்சு செய்வது?

பலகைக்கற்களை அடுக்கிச் சமதளமாக அமைத்தக் கூரையின் மேற்பரப்பில் நீர்த்தடுப்புக்காகவும் வெப்பத்தடுப்புக்காகவும் தாப்பிப் பூச்சு செய்யப்பட்டது. சணலின் உபரிப் பொருளான ‘சீனி‘ பூச்சுகளின் வலுவூட்டி(reinforcement) ஆகச் செயல்படுகிறது.

15. பல்வேறு வகையான சுண்ணாம்புகளைப் பயன்படுத்தும் போது தாப்பி கொடுப்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன வா?

தாப்பிச் செயல்முறையின் போது ஒவ்வொரு சுண்ணாம்பும் விதவிதமாக தன்னை வெளிப்படுத்துகிறது. சிம்லா சுண்ணாம்பில் வேலை செய்யும் போது குறைந்த அளவு ஆற்றலே போதும். ஆனால் களி சுண்ணாம்புக்கு தாப்பி கொடுப்பதில் அதிக முயற்சி தேவைப்படும். ஏனென்றால் சுண்ணாம்பு, தாப்பிக் கட்டையில் ஒட்டிக்கொள்ளும். அடிக்கடி கழுவ வேண்டியிருக்கும். காரணம் களி சுண்ணாம்பு மென்மையானது. சிம்லா சுண்ணாம்பு சொரசொரப்பானது.

பூச்சுக்களில் சேர்க்கப்படும் சுண்ணாம்பின் வகை, சுடுமண்ணின் தரம், சுடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மண், சாந்துவில் சேர்க்கப்படும் இடுபொருட்கள், சாந்து தயாரிப்பு முறை மற்றும் கலவை விகிதங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பூச்சுகளின் தரம் மாறுபடும். விரிசல் ஏற்படலாம். எனவே தகுந்த முறையில் வெவ்வேறு விகதங்களில் மாதிரிப் பூச்சுகள் செய்த பின் சரியான விகிதம் நிர்ணயம் செய்க.

நேர்காணலின்‌ முதல் பாகமே இது. இரண்டாவது பாகம் விரைவில் வெளிவரும்

Author picture

தமிழாக்கம்: இ.குகப்பிரியா & து.கருப்பசாமிபாண்டி
ஆங்கிலத்தில் எழுதியவர்கள்: பிஜு பாஸ்கர் & அகில் ஷாஜன்
இக்கட்டுரை மக்கள்& நேர்காணல்கள் தொடரின் ஒன்று.

All Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

Natural Finishes

ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.

Natural Finishes

பாரம்பரிய ஓவியரான யூசுப் உடன் ஒரு நேர்காணல்

இந்தியாவின் சுண்ணாம்புப்பூச்சுகளுக்கான ஆய்வுப்பயணத்தில் பிஜு பாஸ்கர், சுவஓவியம் வரைவதில் கிட்டத்தட்ட 50வருட அனுபவம் கொண்ட யூசுப் என்ற மரபு ஓவியரைச் சந்திக்கிறார். இயற்கை வண்ணங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நுட்பங்கள் ஆகியவற்றில் அவருக்குள்ள அனுபவங்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்க.

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top