பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கான குறிப்பு

பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கான குறிப்பு

தணல் பயன்நோக்காமல் செயல்படுகின்ற ஒரு விழிப்புணர்வு அமைப்பாகும். இதன் நிறுவனர்கள் ரமண மகரிஷியின் கருத்தைப் பின்பற்றுவதால் அந்த மதிப்புகளைத் தொடர்ந்துக் கடைபிடித்து வருகின்றனர். இதன்காரணமாக ஊடகங்களின் தேவையில்லாத பார்வை, விவாதம் அல்லது பொதுவெளிப்பிரச்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம். விழிப்புணர்வைப் பரப்புவதில் இத்தகைய தீவிரச் செயற்பாடுகளைத் தவிர்த்து, இயற்கைக்கு நெருக்கமாக வீடுகள் அமைக்க விருப்பம் கொண்டோருக்கு, செயற்பாடுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மூலமாக முறையாகக் கற்றுத்தருகின்றோம்.

தணலின் பன்மயம் சார்ந்த கட்டுமானப் பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள “தணலின் பயணங்கள்” கட்டுரைகளை வாசிக்கவும். எங்களை நேர்காணல் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் FAQ ஐ படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மற்றும் தணலைப் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளையும் வாசிக்கலாம்.

  1. ஏன் உண்மையான இயற்கைக்கட்டுமானம் இத்தருணத்தில் தேவைப்படுகிறது?
    தற்போதைய சூழ்நிலையில் நடப்பது என்னவென்றால், மாற்றுக்கட்டுமானம் என்ற பெயரில் மண்ணுடன் சிமெண்ட் கலந்து வீடு கட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு கட்டப்பட்ட வீட்டை உணர்ந்து பார்த்தால், மென்மையான வளமான துளைகள் நிரம்பிய மண், உறுதியாகக் கெட்டியாக மற்றும் உட்புகும் திறன் குறைந்த பிணைக்கப்பட்டப் பொருளாக மாற்றப்படுகிறது. மட்பாண்டங்களில் ஊற்றிவைக்கப்பட்ட தண்ணீரின் குளுமை பாதுகாக்கப்படும். அதேபோல மண் மட்டும் அல்லது மண்ணுடன் சுண்ணாம்பு கலந்துக்கட்டப்படும் வீடு சுவாசிக்கும் குணத்தைப் பெற்றுள்ளதால் வெப்பநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும். மண்ணுடன் வெறும் 5 விழுக்காடு சிமெண்ட் சேர்த்துப்பயன்படுதினாலும் அந்தக்குணம் மாற்றப்படுகிறது. வேதிப்பொருட்கள் அற்ற தூய இயற்கை விவசாயம் மற்றும் உணவு, மாற்றுக்கல்வி போன்றவற்றை தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கும் உணர்வைப் பெற்றுள்ள நிலையில், கட்டிடங்களும் உள்ளூர் பருவநிலைக்கு ஒத்துப்போவதாகவும் பருவநிலைமாற்றத்திற்கேற்ப பொருந்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக்கொண்டு முக்கியமாக மண் (எந்த மண்ணாக இருந்தாலும்) ஒரு தீர்வாக அமையும். எனவே இந்தியாவில் உள்ள மரபுசார்ந்த தொழில்நுட்பங்கள் இயற்கைக்கட்டுமானத்திற்குத் தேவைப்படுகிறது.

  2. எப்பொழுது உங்கள் வீடு கட்டப்பட்டது? அதன் செயல்முறை மற்றும் மூலப்பொருட்கள்பற்றிக் குறிப்பிட முடியுமா
    இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு வித்தியாசமான தொழில்நுட்பமான மண் மூட்டைகள் கொண்டுக் கட்டப்பட்டது. இந்த மண் மூட்டைத் தொழில்நுட்பம் இராணுவத்தில் வேகமாக உறுதியான பாதுகாப்பு அரண் உருவாக்கப்பயன்படுத்தப்படும். மண் அரிப்பைத் தடுக்கக் கரையெழுப்பவும் படிவரிசை தளம்(contour bund) அமைக்கவும் பயன்படுகிறது. ஏற்கனவே மண்சுவர், வரிச்சிச் சுவர்(wattle and daub) ஆகிய தொழிற்நுட்பங்கள் உள்ளூர் மக்களுக்குப் பிரபலமாக இருப்பது போல் மண்மூட்டை தொழில்நுட்பமும் அவர்களுக்குச் செய்து காண்பித்து அறிமுகப்படுத்தலாம். சணல் சாக்குகளில் மணல் நிரப்பி இறுகச்செய்துக் கட்டுமானக்கல் போல் தயார் செய்ய வேண்டும். அது 45 நாட்களில், 6 விவசாயிகள் மற்றும் 2 உதவியாளர்களுடன் தயார் செய்யப்பட்டது. மண், சுண்ணாம்பு, விதவிதமான தாவர விலங்குகளின் மூலப்பொருட்களை வலுசேர்க்கும் கலப்புப்பொருளாகவும் பயன்படுத்தினோம். அதுவே உச்சி முதல் அடிவரை இயற்கைப்பொருட்களால் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் மண்மூட்டை வீட்டின் காட்சிப்படங்களைப் பார்க்க இங்கே பார்க்கவும்.

  3. தணல் ஆரம்பித்ததற்கான காரணம் என்ன?
    இந்தியா, மரபுசார்ந்த இயற்கைக் கட்டுமானத்தொழில்நுட்பங்களில் பலவகை உள்ளது என்பதற்கான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இப்பொழுது அவற்றைக் கற்க விரும்பினால் ஒருசில அமைப்புகள் மட்டுமே தூய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி வருகிறது. பரந்து காணப்படும் மரபுத் தொழிற்நுட்பங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வண்ணம் தணல் செயல்படுகிறது. அதனால் தணல் வெவ்வேறு மொழிகளில் இயற்கைக் கட்டுமானங்களைக் கற்க விரும்புவோருக்கு ஒரு தளமாக உருவாக்கப்பட்டது.

  4. உங்களுடைய அனுபவத்தில் கையால் கட்டி எழுப்பிய வீடுகள் பற்றியக் கருத்து நகர மக்களிடம் எவ்வளவு சென்றிருக்கிறது?
    அதிகமாகவே சென்றிருக்கிறது. கிராமம் நோக்கித் திரும்ப விரும்பும் நபர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. பெங்களூர் மற்றும் சென்னையின் வளங்குன்றா வளர்ச்சியுள்ள பகுதியில் உள்ள பலர் நகர்ப்புறத்திலும் இயற்கைக் கட்டுமானப் பொருந்தும் என்பதை கண்டறிகின்றனர். வரிச்சி சுவர் முறை நகர்ப்புறத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். சில குச்சிகளைக் கொண்டுப்பின்னி அதன் மேல் மண் கொண்டு பூசுவதால் சுவரின் கடமையைச் செய்கின்றது. குறைந்த அளவுப் பொருட்களை நுகர்ந்து குறைந்த அளவு எடையைக் கொண்டு உள்ளதால் விட்டம் மற்றும் தூண்கள்மூலம் தாங்கச் செய்யலாம்.

  5. உங்கள் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களில் எத்தனை சதவீதம் பேர் நகர்ப்புறத்திலிருந்து வந்தவர்கள்?
    60 விழுக்காட்டிற்கும் மேல் மாநகரங்களிலிருந்து வந்தவர்கள்.

  6. பயிற்சி வகுப்புக்கு வந்தவர்களின் பின்புல விவரங்கள் மற்றும் வயது வரம்புகள்பற்றிய தகவல்கள்?
    வாழ்வின் அனைத்துத் துறைகளில் இருந்தும் பயிற்சி வகுப்புக்கு வந்துக் கற்றுச்செல்கின்றனர். எழுத்தாளர், தீயணைப்பாளர், கொல்லர், அரசுப் பணியாளர், விவசாயி, பள்ளி ஆசிரியர், குடும்பப் பெண் மற்றும் கட்டுமானத் துறை தவிர்த்துப் பிற துறைகளிலும் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். மண்ணை நுகர்ந்து செல்வதற்காக 3 வயது குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களுடன் வருகின்றனர். பணி ஓய்வுக்குப் பின் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுடன் வந்து அவர்களுக்கான வீட்டை, பழைய காலத்தில் கட்டப்பட்டது போல் கட்டக் கற்றுச் செல்கின்றனர்.
    இந்த இணைப்பில் சென்று மேலும் தெரிந்துகொள்க.

  7. எந்தந்த மாநகரங்களிலிருந்து எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கின்றனர்? எத்தனைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது?
    எவற்றையெல்லாம் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டார்கள்?
    50 பயிற்சி வகுப்புகளுக்கு மேல் பல மாநகரங்களிலும் பல தலைப்புகளில் இயற்கைக்கட்டுமானப் பயிற்சி அளித்துள்ளோம். ராஜஸ்தானில் சர்தார் சாகரில் நடைபெற்ற கடைசிப் பயிற்சி வகுப்பில், கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கும் பூச்சுத் தொழில்நுட்பமான தாப்பி, அரைஷ் பூச்சுகள் ஆகியவற்றைக் கற்றுத் தந்தோம். இதுவே மரபுத் தொழில்நுட்பங்களை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் பயிற்சி வகுப்பு.
    பயிற்சி வகுப்புக்களில் அடிப்படை இயற்கைக் கட்டுமானத் தொழில் நுட்பங்கள் கற்றுத்தரப் படுவதால் அது அவர்களே மேற்படி பாடங்களைக் கற்றுப்பயணிக்க உதவும். சர்தார் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பைப் போல எங்கள் வளாகத்திலும் இயற்கை பூச்சுக்காக மட்டுமே பயிற்சி வகுப்பும் நடத்தி இருக்கிறோம். இவையெல்லாம் மேம்பட்ட பயிற்சி வகுப்புகள், ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்திற்கான ஒதுக்கப்பட்டது.

  8. இயற்கை வீடு கட்ட என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன?
    பொதுவாக ஐவகைப் பொருட்களான மண், 
    சுட்டமண், சுண்ணாம்பு, மூங்கில், விலங்கு மற்றும் தாவரங்களிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்கள்.

  9. ஒரு வீடு கட்ட எவ்வளவு காலம் தேவைப்படும்?
    500 சதுர அடிகள் கொண்ட ஒரு வீட்டை ஒரு குடும்ப உறுப்பினர்களே இரண்டு முதல் ஐந்து மாதங்களில் கட்டி முடித்து விடலாம். அதுவும் கிட்டத்தட்ட விவசாயம் செய்வது போன்றே ! கட்டுவதற்கு முன் ஆயத்தம் மிக முக்கியமானது. தேவையான மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்வது முதல் அதற்குச் சிகிச்சை அளிப்பது வரைக்கவனம் செலுத்த வேண்டும். மேலும் வலு சேர்க்கும் கலப்புப் பொருட்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும். இவைகள் தான் ஒரு கட்டுமானத்தின் வயது வரம்பை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளாகும். கண்டிப்பாக அதில் அலட்சியம் காட்டக் கூடாது. உள்ளூர் சார்ந்தப்பொருட்களை பயன்படுத்துவதால் அது பருவநிலைக்கு பொருந்தும். மேலும் அப்பொருட்களை பயன்படுத்துவதற்கு தேவைப்படும் ஆற்றல், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்குத் தேவைப்படும் ஆற்றலைவிட மிகக் குறைவு.

  10. எவ்வளவு பணம் தேவைப்படும்? சிமெண்ட் வீட்டைக் கட்டுவதற்குத் தேவைப்படும் செலவைவிடக் குறைவானதா? எந்த வகையில் செலவுக்குறைவு?
    நாங்கள் எழுப்பிய கட்டிடங்களுக்குச் சதுர அடிக்கு 800 லிருந்து 1000 ரூபாய் வரை செலவாகும். அருகாமையில் கிடைக்கும் பொருட்களைப் பொறுத்து இது மாறுபடலாம். நடைமுறைக்கட்டிடங்களுக்கு ஆகும் செலவு சதுர அடிக்கு ரூபாய் 2500 லிருந்து 3000 வரை. இதுபோக மாற்றுக் கட்டுமானத்திற்கு ஆகும் செலவு இதைவிட அதிகம்.
    இதற்கு முக்கிய காரணம் மண்ணை முதன்மைப் பொருளாகப் பயன்படுத்துவது ஆகும். அந்த மண்ணும் களத்திலோ அல்லது அதற்கு அருகிலோ எடுத்துக் கொள்ளலாம். சுண்ணாம்பு மிக முக்கிய பிணைப்புப் பொருள். அதுவும் சிமெண்டை விடக் குறைவான அளவில் தேவைப்படும். நடைமுறைக் கட்டுமானத் தொழிலில் அதிக தேவையுள்ள பொருட்களை இங்கே பயன்படுத்துவதில்லை. மணல் தவிர்க்கப் படுகிறது. வீடானது நேர்மறை ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதால் நெகிழிக் கழிவுப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுமானங்களில் தவிக்கிறோம்.

  11. இந்த மாதிரியான வீடுகள் கிராமப்புற மற்றும் நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் பொருந்தும், மாநகரங்களில் எப்படி நடைமுறைப்படுத்துவது?
    முன்னர் குறிப்பிட்டது போல் பெங்களூரின் நீலமங்கலம் என்ற இடத்தில் ஒரு கட்டிடம் கட்டியுள்ளோம். அந்தப் பகுதி குறைந்த வளர்ச்சியடைந்த பகுதியாகும். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் தாங்களாகவே வீடுகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பல அடுக்குக் குடியிருப்புக் கட்டுவது பற்றி இன்னும் ஆய்வில் உள்ள நிலையில், எங்களிடம் பயிற்சி பெற்ற ஒரு நபர் அடுக்குக் குடியிருப்புக் கட்ட ஆரம்பித்துள்ளார். பல அடுக்குக் குடியிருப்புகள் வரிச்சி சுவர் முறைமூலம் கட்டுவதற்குச் சாத்தியமுள்ளது. அந்தத் தொழில்நுட்பம் எங்களுடைய யாக்கை சுவர்கள் என்று புத்தகத்தில் விவரித்துள்ளோம். எங்களுடன் பயணிக்கும் மாற்றுக் கட்டுமான வடிவமைப்பாளர்கள், ஆசான் லாரிபேக்கர் உடன் பணி செய்த அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் தற்போது இயற்கைக் கட்டுமானம் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இட நெருக்கடிக்கு உள்ளாகும் மாநகரங்களைவிடச் சுயசார்பான கிராமங்களை அதிகம் உருவாக்க விரும்புகிறோம். வளங்கள் கொள்ளையடிப்பதும் தவிர்க்கப்படும். பயிற்சியில் பங்கெடுத்த பலர் சென்னை பெங்களூர் போன்ற மிகப்பெரிய மாநகரங்களில் இந்தப் பெரிய சிந்தனைகளைச் செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். இப்படி இயற்கைக் கட்டுமான வீட்டில் குடி மாற்றம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.

  12. தனிநபர் யாராவது அதைச் செய்திருக்கிறார்களா?
    கேரளாவில் வடகரையில் அமைய உள்ள இயற்கை சுகாதார உணவகம், இரண்டடுக்கு கட்டிடமாக மண் கலவை கொண்டுதான் கட்டப்படவுள்ளது. (நிழற்படங்களைக் காண்க) மற்றவர்களைப் பற்றியும் விரைவில் எடுத்துரைப்போம்.

  13. மாநகர வீட்டிற்கு ஏதேனும் ஒரு பகுதியாவது இயற்கை முறையில் கட்ட வழிகள் உள்ளனவா?
    சிறிய பகுதியில் அல்லது தற்போதைய வீட்டில் இயற்கைக் கட்டுமான முறையைத் தொடங்கலாம். அவர்கள் இயற்கை முறையில் பூச்சுகளைத் தங்கள் வீடுகளில் முயற்சி செய்து அந்தப் பகுதி எப்படி மாறுகிறது என்பதை உணரலாம். எளிய அடியை எடுத்து வைப்பதன் மூலமும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், நச்சு வேதிப்பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்ற உறுதியும் இருந்தால் இயற்கை கட்டுமானத்தின் முக்கியத் தேவையைப்பூர்த்தி செய்யலாம்.
    தற்போதைய சூழ்நிலையில் மாநகர அனைத்துக் கட்டிடங்களின் அடித்தளத்தில் மண்கொண்டு நிரப்பப்படுகிறது. அதன்மேல் உற்பத்தி செய்யப்பட்டப் பொருளான அதிக வெப்பம் உமிழும் தன்மை கொண்ட சிமென்ட் கொண்டு பூசப்படுகிறது. அது தயாரிக்க அதிக கரியமில வாயு வெளியிடப்படுகிறது. நச்சுத்தன்மை கொண்ட சாயப் பூச்சுகள் பயன்படுத்துகிறார்கள். சிமெண்ட் கல் பொதுவாகத் தொழிற்சாலைகளின் நச்சுத்தன்மை கொண்ட உபரி பொருட்களைக் கொண்டு வார்க்கப்படுகிறது. இப்படிப் பல வழிகளில் நமக்கு நாமே பல அசாதாரண, தீங்கிழைக்கும் சூழலை உருவாக்குகிறோம். இது கண்டிப்பாக மாற வேண்டும். இயற்கை கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உயிர்ச் சூழலுள்ள பருவநிலைக்கு பொருந்தும் வண்ணம் வீடுகள் மாற வேண்டும்.
    தணல் ஒரு கட்டுமான நிறுவனம் அல்ல. ஆனால் ஆய்வு படுத்துதல், ஆவணப் படுத்துதல் ஆகிய செயல்களில் ஈடுபடும் ஒரு விழிப்புணர்வுக்குழு. இயற்கைக்கட்டுமானம் கற்க விரும்பும் மக்களுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. வருடத்திற்கு இரண்டு கட்டிடங்கள் மட்டும் பெரும்பாலும் கிராமப்பகுதியில் தன்னார்வத்துடன் கட்டித்தருவோம். கட்டிட வேலைகளின் மூலம் நீண்டகால இடைவெளியில் கற்க விரும்பும் தன்னார்வலர்களுக்கு வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. நமது மரபுத் தொழில்நுட்பங்கள் அழிந்து கொண்டு வருவதாலும் அதன் ஆசான்கள் 70 வயதை தாண்டியவர்கள் ஆகவும் இருப்பதால் அத்தொழில்நுட்பங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அதை ஆவணப்படுத்தியும் எங்கள் கட்டிட வேலைகளில் அதைச் செய்து பார்த்தும் வருகிறோம். இது நமது மரபு தொழில்நுட்பங்களைப் பாதுகாத்து வருங்காலத் தலைமுறையினருக்கு பரிமாற்றம் செய்ய உதவியாக இருக்கும். ஒரு கைவினைஞரை குறைந்த அளவு ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை எங்களுடன் வேலை செய்ய வைத்து அவர்களுக்குப் போதிய மதிப்பு அளித்து வருகிறோம். இந்தக் கற்றல் அனுபவங்கள் மீட்டெடுக்கும் பயிற்சி வகுப்பில்
    கற்க விரும்புபவர்களுக்குக்கடத்தப்படும். கைவினைஞர்களே நேரடியாகப் பயிற்சி கொடுக்கும் வண்ணம் “மீட்டெடுக்கும் பயிற்சி வகுப்புகள்” நடத்தப் படுகிறது. தண்ணல் புதிய பரிமாணம் நோக்கிச் செயல்படுகிறது. அது பல பல மக்களுக்குக் கற்க உதவும் வண்ணம் இருக்கும்.
    இந்த முன்னெடுப்பின் காரணமாகப் பல வேலையாட்களுக்கு உதவுவது மட்டும் அல்லாமல், பல மக்களுக்கு இக்காலத்திற்கு ஏற்றவாறு எப்படி மரபுத் தொழில்நுட்பங்களை அழகாகப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு அடையச் செய்யலாம்.
    எங்களுடைய வேலைகள்பற்றிய காணொளிகளைப் பார்த்தால் மேலும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?

இயற்கைக் கட்டுமானத்தை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் தணலுடன் சேர்ந்து கற்கலாம்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top