ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

கலைஞர்களுக்கு மதிப்பளித்தல்

ஆசான் தாவூத் அய்யா உடன்

Dawood

ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள். இந்த அனுபவமும் புரிதலும் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது. கட்டுமானப் பொருட்களுக்கும் அவர்களுக்கும் இடைப்பட்ட உறவுதான் காரணம்‌. ஆனால் நவீனக் கட்டுமானப் பொருட்களின் வருகையால் சில பாரம்பரியக் கலைஞர்களே மிஞ்சியுள்ளனர். நம்மை கடந்த காலத்துடன் தொடர்புகொள்ளச் செய்வது பாரம்பரியக் கட்டுமானங்கள். அக்கட்டிடங்களைப் பற்றி நன்கு தெரிந்த கலைஞர்கள் எல்லாம் வயதானவர்கள். இந்த நவீனச்சூழலின்‌ நெருக்கடியால் தங்கள் பிழைப்புக்காகப் பலரும் பல திசைகள் நோக்கி நகர்ந்தனர்; வழியின்றி நவீனக்கட்டுமானப் பொருட்களில் வேலை செய்யத்தொடங்கினர். ஒரு சிலரே தம்முடையக் குலத்தொழிலை புனிதமாகக் கருதித் தொடர்ந்து செய்தனர். அத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, முடிந்த அளவில் செய்து பார்த்துத் திரும்ப மீட்டெடுக்கும் முயற்சியாக தான் ‘கலைஞர்களுக்கு மதிப்பளித்தல்’ எனும் திட்டம் வகுத்துள்ளோம்.

தாவூத் அய்யா என்கிற 64 வயது முதியவர், பாரம்பரிய சுண்ணாம்புக் கலைஞர் ஆவார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். பாரம்பரியக் கட்டிடங்களைப் புதுப்பிப்பதில் கடுமையாக உழைத்தவர். இவர் திருவண்ணாமலைக்குப் பயணித்து வந்து இங்குள்ள இயற்கைக் கட்டிடக் கலைஞரான பிஜு பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார். பின்னர் இருவருக்கும் இடையே பிரிக்கமுடியாத நட்பு ஏற்பட்டது. இருவரும் சுண்ணாம்பு பற்றிய தங்களுக்கு இருந்த புரிதலைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அனுபவப் பகிர்வு ஆயுள் முழுக்க தொடரும் நட்புக்கு வழிசெய்தது.. தாவூத் அய்யாவின் தந்தையான முகமது இப்பிராஹிமிற்கு தற்போது 97 வயதாகிறது. இவரது நான்கு மகன்களும் ஐந்து சகோதரர்களும் சுண்ணாம்புக் கட்டுமானத்தில் நல்ல அனுபவம் கொண்டவர்கள். சுண்ணாம்புடன் வேலைப் பார்ப்பது என்பது முவல் குடும்பத்தினரின் நாடி நரம்பில் ஓடுகின்ற உணர்வு என்றே சொல்லலாம்.

இந்த வியப்பான பொருளைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காக தாவூத் அய்யாவின் உதவியுடன், பிஜு பாஸ்கர் அவர்கள் சுண்ணாம்பை பயன்படுத்திப் பல பரிசோதனைகளை மேற்கொண்டார். அதில் தண்ணீர் தேக்கும் தொட்டி, நீர்த்தடுப்பு திறன் கொண்ட பூச்சு அமைத்தல், தளம் மற்றும் சமதளக் கூரை அமைத்தல் ஆகியவை அடங்கும். தாவூத் அய்யா செய்யும் வேலை கவனமிக்கதாக முறைப்படுத்தி செய்வதாக இருக்கும். மேலும் தனது விவேகத்தாலும் நகைச்சுவையினாலும் பணியிடத்தை ஊக்கக்கத்துடன் வைத்திருப்பார். உருது இலக்கியத்தில் பற்றாளராக இருக்கும் இவர், தனது போதனைகளின் போது ஆழமான தத்துவங்களையும் “ஷயாரி” எனப்படும் கவிதையையும் ஒன்றிணைத்து சுண்ணாம்பைப் பற்றி எடுத்துரைப்பார். இயற்கைக் கட்டுமானங்களில் அவருக்கிருந்த பட்டறிவைப் பகிர்ந்த பின் பிஜு பாஸ்கர் அவர்களுக்கு, புனிதம் கொண்ட சுண்ணாம்பை வேறுபட்ட கோணத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றியது.

கீழ்க்காணும் கட்டுரையில் அவர்களுக்குள் நடந்த உரையாடல் தாவூத் அய்யாவின் பாணியில் உள்ளது. சக்தி வாய்ந்த பொருளாகக் கருதப்படும் சுண்ணாம்பைப் பற்றி மேலும் நன்கு அறிந்து கொள்ளவும் சுண்ணாம்பு வல்லுநர் தாவூத் அய்யாவைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் மேலும் படிக்க.

. சுண்ணாம்புடன் தாங்கள் கடந்து வந்த பயணம்பற்றிக் கூறுங்கள்

சுண்ணாம்பைப் பற்றி எனக்குத் தெரிந்தவை அனைத்தும் ராஜஸ்தானில் இருக்கும் எனது கிராமம் சர்தார் சாகரில் கற்றது. என் தாத்தா, சுண்ணாம்புச் சூலையிலிருந்துச் சுண்ணாம்பைத் தயார் செய்தவர். என் தந்தையும் அதனைப் பின்பற்றினார். 16 வயது இருக்கையில் கட்டுமானத்தில் உதவியாளராகப் பணியாற்றினேன். அங்கிருந்து தான் என் பயணம் தொடங்கியது. சுண்ணாம்புக் கலவை தயாரிப்பதில் உள்ள முறைமைகளைப் புரிந்துக் கொண்டேன். மேலும் பயன்பாட்டு நோக்கத்தைப் பொறுத்து சுண்ணாம்பு கொண்டு கலவை தயாரிப்பு முறைகள் வேறுபட்டன. எனது கிராம மக்கள் எல்லோரும் சுண்ணாம்பு பயன்படுத்தி அதிக வேலைச் செய்ததால் எனக்கு இதில் ஒரு பிடிப்பு வந்தது. பிறகு ஜெய்ப்பூர் சென்று இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.. இறுதியில் அப்பயணம் என்னை மும்பைக்குக் கொண்டுச் சென்றது. அங்கு எனது உறவினருடன் சேர்ந்து கொத்தனாராகப் பயிற்றுவிக்கப்பட்டேன். ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. கற்ற பாடங்கள் தான் என்னுடைய கூலி என்று சொல்லலாம். பிறகு அரேபிய நாடுகள் மற்றும் மஸ்கட்டில் கொத்தனாராக வேலை செய்துவிட்டு மறுபடியும் மும்பை திரும்பினேன். ஒரு நாள் மும்பையைச் சேர்ந்த புணரமைப்புப் பணி செய்யும் கட்டிடக்கலைஞர் விகாஷ் திலாவாரி ஜி என்னைச் சந்தித்தபின் சுண்ணாம்புடன் வேலை செய்யும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரிடம் நான் 16 வருடங்கள் பணியாற்றினேன். தற்போது என் மகன் அல்டாஃப் 4 வருடங்களாக அவரிடம் பணிப்புரிந்து வருகிறான். நான் பெற்ற பகுத்தறிவைப் பயன்படுத்தி சுண்ணாம்பை ஆய்வு செய்வதற்கான சுதந்திரத்தையும் கால அளவையும் கொடுத்தார். சிறு வயதிலிருந்தே எனது குடும்பமும் கிராமத்தார்களும் சுண்ணாம்பு வைத்து வேலை செய்வதைப் பார்த்து வளர்ந்தேன். அதனால் இவ்விடம் எனக்கு வழக்கமான இடமாய்த் தோன்றியது. சுண்ணாம்பின் அடிப்படை இயல்புகளைப் தெளிவாகப் புரிந்துவிட்டால் நீங்கள் அதைத் திட்டமிட்டு வேலை செய்யலாம். அதன் பிறகு மும்பையில் எல்லா விதமான மறுசீரமைப்பு தொடர்பான திட்டங்களில் பணியாற்றுனேன். சுண்ணாம்பைப் பற்றி எனது கிராமத்திலிருந்து நான் பெற்ற அறிவை, பாரம்பரிய கட்டிடங்களைச் சீரமைப்பதில் பயன்படுத்தினேன். நான் மறுசீரமைத்த வேலைகளில், மசூதி(Bhau da ji lad), ராஜாபாய் கோபுரம் மற்றும் எலிபண்டா குகை ஆகியவை அடங்கும். இந்த பாரம்பரியக் கட்டங்கள் பாழடைந்து புறக்கணிக்கப்பட்டுப் பரிதாபகரமான நிலையில் இருந்தன. இவைகளுக்கு எப்படிப் புத்துயிர் ஊட்டுவதென்று யாருக்கும் தெரியவில்லை. சுண்ணாம்பைப் பயன்படுத்தி, அக்கட்டங்களின் தொடக்க நிலையை வெற்றிகரமாக மீட்டெடுத்தேன். எனது வேலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது. தற்போது வரையில் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். அதில் ஓர் விருது ரத்தன் டாடா என்னுடைய மறுசீரமைப்புப் பணிக்காக வழங்கியது. திருவண்ணாமலை என்றொரு ஊர் இருக்கிறது என்று அறியாமல் இருந்த நான், 50 மணி நேரம் இங்கு பயணித்து வந்ததற்குக் காரணம், நான் கொண்ட நம்பிக்கையை ஒரு படி மேல் எடுத்துச் செல்ல முடிவு செய்தது தான். வெகு தொலைவில் இருக்கும் இடத்திற்கு இதுவரை சந்திக்காத மக்களைச் சந்தித்து அவர்களுடன் பணியாற்ற வந்திருக்கிறேன்.

. சுண்ணாம்பா அல்லது சிமெண்டா ?

நான் இரண்டையும் பயன்படுத்தி வேலை செய்திருக்கிறேன். ஆனால் சுண்ணாம்பு வைத்துப் பணியாற்றுவது எளிது. சுண்ணாம்பு வேலைகள் நிறைய செயல்முறைகளை உள்ளடக்கியது. ஆனால் மக்களுக்கோ அவ்வளவு காலம் வரை பொறுமையில்லை. வீடுகள் உடனே தயாராகி இருக்க வேண்டும். அடுத்த நாளே அதன் மீது நடக்க வேண்டும். குளியலறை தயாரான உடனே குளியல் போட வேண்டும். உண்மை என்னவெனில் தட்பவெப்பதிற்கு ஏற்றார் போல் சுண்ணாம்பு தனது பண்புகளை மாற்றிக் கொள்ளும். வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் மழைக் காலத்தில் சூடாகவும் வைத்திருக்கும். சுண்ணாம்பு வேலை என்பது சிமெண்டை விட நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாக இருக்கும். ஆனால் சிமெண்டோடு ஒப்பிடும் போது பயனளிக்கத்தக்கதாக இருக்கும். சிமெண்ட் பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கம்பி தேவைப்படும். சுண்ணாம்பிற்கோ கம்பி தேவைப்படாது. 20-40 ஆண்டுகளில் சிமெண்ட் விரிவடைந்து அதில் குறைபாடு ஏற்படும். ஏனென்றால் அதன் ஆயுட்காலம் குறைவு. சிமெண்ட் கடினமானது ஆனால் சுண்ணாம்பு மென்மையானது. சுண்ணாம்பை அதிக விசையுடன் உடைக்க முயற்சித்தால் அது உடையத்தான் செய்யும். எனது கட்டுமான இடத்தில் பொறியாளர்கள் சுத்தியை எடுத்து வந்து உடைத்துப் பார்த்து சுண்ணாம்பு அவ்வளவு வலுவானதில்லை என்பர். சுண்ணாம்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாத மூடர்களிடம் என்ன சொல்வது!

. சுண்ணாம்பின் பல்வேறு வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களும் என்ன?

எனக்குச் சுண்ணாம்பைப் பற்றித் தெரிந்தது இவ்வளவு தான். என் ஊரில் உள்ள சுண்ணாம்பு வகைகள் பற்றி மட்டும் தான் தெரியும். இங்கு சுண்ணாம்பு எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. நிலப்பரப்பின் இருப்பிடத்தைப் பொறுத்து இவை இரண்டு வகைப்படும். ஒன்று சூனா மற்றொன்று களிச் சுண்ணாம்பு. சூனா சமவெளிகளில் காணப்படும். “கச்சா டாகத்” என்கிற கல்லை வேகவைத்து தயாரிக்கப்படுகிறது. மலைகளில் கிடைக்கும் கற்களைச் சூலையில் வைத்து எரித்தால் களிச் சுண்ணாம்பு உருவாகும். களிச் சுண்ணாம்பு பிரகாசமாயிருக்கும். களிச் சுனா சுத்தமான வெள்ளை நிறத்திலும் சூனா மங்கலான வெள்ளை நிறத்திலும் இருக்கும். இது தான் இரண்டுக்கும் உள்ள இருக்கும் வேறுபாடு.

“சின்கி ” எனப்படும் களிச் சுண்ணாம்பு மென்மையாக இருப்பதால், அதிகமாக விரிசல் விடும். அதனுடன் சுடுமண் பொடியை அதிக அளவில் கலந்து பயன்படுத்தலாம். பாலேடு(Icecream) போன்ற களிச் சுண்ணாம்பு மேம்பட்ட பணிகளான சுவர்களின் பூச்சுகளுக்கும் வெள்ளையடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடினமான பணிகளுக்குச் சூனா பயன்படும். இதற்குக் குறைந்த அளவில் சுடுமண் பொடி கலந்தால் போதும்.

. சுர்க்கி(சுடுமண்) மற்றும் அதில் கலக்கப்படும் பொருள்களைப் பற்றி மேலும் கூறுங்கள்.

களிமண்ணை சுட்டுப் பொடியாக்கினால் அதற்கு பெயர் தான் “சுர்க்கி”. செங்கலை எரித்தோ அல்லது சரியான வகைக் களி மண்ணை எரித்தோ உருவாக்கலாம். சுண்ணாம்புக்கு ‘சுண்ணாம்பு’ என அடையாளம் கொடுப்பதே சுடுமண் தான். சுடுமண் சுண்ணாம்பு சேர்ந்தால் ஒற்றைத் தன்மை கொண்டு ஒரே பொருளாகிவிடும். இதனுடன் வெல்ல நீர் மற்றும் வெந்தய நீரைக் கலந்து, கூரை மற்றும் விரிசலை பழுது பார்ப்பது போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். வெல்லம் ஒட்டும் தன்மையுள்ளது. எனவே பிணைப்பை மேம்படுத்தி ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். அது சாந்து மெதுவாகக் கடிமாவதற்குப் பயன்படுவதால், விரிசல் ஏற்படுவதைத் தடுக்கிறது. வெந்தயம், சுண்ணாம்புச் சாந்துவுக்கு குலைவுத்தன்மையைக் கொடுக்கிறது. மேலும் சுர்க்கிக் கலவைக்கு நீர்த்தடுப்புப் பண்பைக் கொடுக்கும். இரண்டு செங்கலை ஒட்ட உதவும் சாந்துவில் இருக்கும் வெல்லம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். பூச்சுவில் வெல்லம் தேவைப்படாது. அப்படி அதனுடன் கலந்தால் அதன் பதம் மாறி எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அது மட்டுமல்லாமல் அக்கலவை தளர்ந்து போய்க் கடினமடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

. பூச்சு சாந்துவில் என்னென்ன நார்ப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன? அதன் செயல்பாடுகள் என்ன?

மூஞ்ச்(Saccharum munja) என்று ஒரு வகையான புல்லில்லிருந்து எடுக்கப்படும் நாணல் நார்கள் மற்றும் சணல் நார்கள் சுண்ணாம்பு கட்டுமானத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. நாணலுக்கும் சணலிற்கும் வேறுபாடுகள் உண்டு. ஈரநிலங்களில் காணப்படும் உலர்ந்த புல்லில் இருந்து நாணல் பெறப்படுகிறது. படுக்கை விரிப்புகள் இதை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. சணல் பைகள் சணலால் தயாரிக்கப்படுகின்றன.

சிறுசிறு துண்டுகளாக வெட்டி நாணல் நார்கள் பூச்சுக் கலவையில் பயன்படுத்தப்படுகின்றன. இது இழுதிறனை அதிகரித்து பூச்சுவில் உள்ள மூலக்கூறுகளைப் பிடித்து வைத்திருக்கிறது. இந்த நார்கள் பூச்சுவில் விரிசலைத் தடுக்கும். அப்படியே விரிசல் ஏற்பட்டாலும் ஆழமாக விரிசல் ஏற்படாமல் தடுக்கும். விரிசல் அடைந்தாலும் பின்னர் தானே சரியாகி கொள்வது சுண்ணாம்பின் இயல்பு.

தளம் அமைக்கும் போது கற்காரையினுள் சணல் கயிற்றைக் நிறையாகவும் நிரலாகவும்(நெடுக்கும் குறுக்குமாக) வைத்து நார்களின் கட்டம் உருவாக்கப்படுகிறது. செங்கற் கற்களை இட்ட பிறகு அதன் மேல் சுண்ணாம்பு – சுடுமண் கலவை கொண்டு ஒரு படுகைப் போடப்படும். பின்னர் நார்களின் கட்டம் அமைத்து அதன் மீது மீண்டும் இப்படுகை போடப்படும். சுண்ணாம்பின் வலுவூட்டலுக்கு இது இயற்கையான எளிய முறையாகும். மேலும் இது சிறப்பாக வேலை செய்கிறது. அவர்கள் கம்பியும் சிமிட்டிக் கலவையும் பயன்படுத்துவர். நாங்கள் நாற்களை சுண்ணாம்பும் சுர்க்கியுடன் பயன்படுத்துவோம்.

. மண்ணால் சுவரோ தரையோ இருக்கும் போது என்ன வகையானப் பூச்சு தேர்ந்தெடுப்பீர்கள்?

ஏதாவது ஒரு தளத்தின்(சுவர் அல்லது தரை) மீது பூசும் போது கவனம் கொள்ள வேண்டியது அத்தளம் எத்தகையது எனப் புரிதல் வேண்டும். செங்கல், கல் போன்று உறுதியான தளம் அல்லது பரப்பாக இருந்தால் உறுதியான பூச்சுப் பூசவேண்டும். மண்சுவர் போன்ற மென்மையான தளமாக இருந்தால் நேரடியாக உறுதியான பூச்சு பூசுவது நல்லதல்ல. மென்மையான தளத்திற்கு மென்மையான அல்லது சற்று உறுதியானப் பூச்சு முதலில் பூசலாம். ‘சுண்ணாம்பு’ என்பது வெப்பத்திற்கான பொருள்; வினைதிறன் மிக்கது. ‘மண்’ என்பது பூமியின் அங்கம்‌ மென்மையானது, அமைதியானது. எனவே வெவ்வேறு குணம் கொண்ட இரண்டு பொருளை இணைக்கும் இடத்தில் பிணைப்பு இருக்காது. ஆனால் மண்ணுடன் சுண்ணாம்பு கலந்து மண்ணை நிலைப்படுத்தி மண்சுவரில் பூசினால் ஒட்டிக்கொள்ளும். அதே சிமெண்ட் பூச்சு சுண்ணாம்புப் பூச்சுவை விட வீரியம் கொண்டதால் மென்மையான மண்ணிலிருந்து நாளடைவில் விழுந்துவிடும். சுண்ணாம்பு சாந்துவின் கலவை விகிதம் தெரிவதற்கு முன் இத்தகைய அடிப்படைப் புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்.

. தாப்பி என்றால் என்ன? சுதை- சுடுமண் கலவையின் மீது ஏன் இது தேவைப்படுகிறது?

தாப்பி என்பது இராஜஸ்தானில் புழங்கும் சொல். மற்ற பகுதிகளில் எப்படி அழைப்பார்கள் என்று தெரியாது. பூசிய பிறகு சாந்து கடினமடைவற்கு முன்னர் ஒரு மரக்கட்டையால் தட்டிக்கொடுக்கும் முறையைத் தாப்பி என்று கூறுகிறோம். தாப்பி செய்யாமல் சுதை-சுடுமண் பூச்சு நிறைவடையாது. அந்தப் பூச்சு தன்னைத்தானே கூடப் பிடித்து நிற்காத அளவில் இருக்கும்; விரிசல் ஏற்படுத்தும். அதைத் தட்டிக்கொடுக்கும் போது மூலக்கூறுகள் நெருக்கமடைந்து அடிஅடுக்குடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்துகிறது

சுர்க்கியைப் பயன்படுத்தி பூச்சு அல்லது கூரை வேலைகள் முடிந்தவுடன் ஒரு மரத்துண்டை வைத்து அடிக்க வேண்டும். அது காயும் போது அடிக்கின்ற ஓசை கேட்கும். முதலில் தட்டும்போது சுவருடன் பூச்சு நன்றாக ஒட்டிக்கொண்டு ஒரு படிவத்திற்கு வந்துவிடும். விரிசலைத் தடுத்து சுர்க்கிக்கு வலிமையைக் கொடுக்கும். இது மிகவும் முக்கியமானது. இதனை உதாசினப்படுத்துக் கூடாது. எனது கிராம மக்கள் சுண்ணாம்பைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளில் இந்த செயல்முறையைக் கையாளுவதைக் கண்டிருக்கிறேன்.

சுண்ணாம்புடன் மணலைப் பயன்படுத்தலாமா?

சிமெண்ட் மற்றும் மணலின் சேர்க்கை நன்கு வேலை செய்யும். ஆனால் சுண்ணாம்பும் மணலும் நன்கு பிணையாது. இந்தச் சாந்து கடினமடைந்த பின்னர் போதுமான வலிமை அதற்கு இல்லாததால் அது உடைந்து விடும். காரணம் இரண்டும் பிணைந்து ஒற்றைத் தன்மை கொண்ட பொருளாக மாறுவதில்லை‌. கலவை தயாரித்த பின் சுண்ணாம்பும் சுடுமண்ணும் பிணைந்து ஒற்றைப் பொருளாக மாறுகிறது; ஆனால், சுண்ணாம்பு மணலும் வேறு வேறு பொருளாகக்தான் இருக்கும். சுர்கி அல்லது சுடுமண்ணில் சிறுதுளைகள் இருப்பதால், உறிஞ்சும் தன்மை கொண்டு வலிமையான பிணைப்புக்கு உதவுகிறது. ஆனால் மணல் வெறும் செயலாற்றல் அற்ற பொருள். அதேசமயம் சுர்க்கிக்கும் சுண்ணாம்பிற்கும் ஒரு இணக்கமான உறவு இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

. வெள்ளை அடித்தல் அல்லது சுண்ணாம்பு அடித்தலுக்கு சுண்ணாம்புக் கரைசல் எவ்வாறு தயாரிப்பது? வெள்ளை அடித்தலின் முக்கியத்துவம் என்ன?

பெயிண்ட் அடிக்கும் பதத்திற்குக் கொண்டுவர சுண்ணாம்புடன்‌ நீர் சேர்த்து தூரிகையால் வெள்ளை அடிக்கலாம். பழைய சுவர்களுக்கு சுண்ணாம்புக் கரைசல் கெட்டியாக இருக்கலாம்‌‌. அது குறைந்து அளவே நீரை உறிஞ்சும். புதிய சுவர்களுக்கு, அதிகம் நீர்ச் சேர்த்த சுண்ணாம்புக் கரைசல் 3-4 முறை அடிக்க வேண்டும். அது அதிக நீரை உறிஞ்சும். சுண்ணாம்பு அடித்த சுவர்கள் நீர்த்தடுப்புதிறன் பெறுகிறது இந்தச் சுண்ணாம்புக் கரைசல் தயாரிப்பதற்கு எந்தவொரு விகிதமும் கிடையாது. உள்ளுணர்வின்படி செய்யலாம்.

வெள்ளை யடிக்கும் போது சுண்ணாம்புடன் உப்பு சேர்ப்பதால் சுண்ணாம்பு உலர்ந்த பின் கையில் ஒட்டாது. neelநீல நிறப்பொடியை துணியில் கட்டி சுண்ணாம்புக் கரைசலில் இட்டு குச்சி வைத்து கலந்து பின் சுண்ணாம்பு அடிப்பதால் அது 2-3 வருடங்கள் பொழிவுடன் இருக்கும். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு முன் ஆண்பிள்ளைகள் சுவர்களுக்குச் சுண்ணாம்பு அடிப்பது வழக்கம். இப்படி வெள்ளையடித்த சுவர்கள் பாதுகாப்பானதும் எங்கள் கிராம மக்களைப் போல் எளிமையானதும் கூட.

. பல கருத்துக்களை ரசிப்பவர் நீங்கள், இலக்கியம் மற்றும் பாடல்கள் கூறும் கருத்துகளையும் சுண்ணாம்பையும் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்?

உலகத்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் எழுதிய கவிதைகள் எனக்கு பிடித்தயானவை‌‌. அவர்களின் உணர்தல் நிலையும் வேலைகளும் என்னைக்கவர்ந்தவை. என்னுடைய சிறுவயதில் பலவகையான புத்தகங்களையும் கருத்துக்களையும் அறிமுகப்படுத்தியவர் என்னுடைய அப்பா. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு கவிதைகளை வானொலி வழியாகக் கேட்பது வழக்கம். நான் படிக்காதவனாக இருந்தாலும் புத்தகங்கள் மற்றும் வார்த்தைகளின் மதிப்பை நான் நன்கு அறிவேன்.

நான் ஈடுபட்டிருக்கும் பணி மாறுபட்டது. இங்குள்ள மனிதர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களின் மொழி செப்பமற்றதாகவும் கரடு முரடாகவும் இருக்கும். இந்த மக்களுக்கு சொந்த காலில் நிற்பதற்கு இந்தக்கடின உழைப்பைத் தவிர வேறு எதுவுமில்லை. கடின உழைப்பிற்குப் பின் மண் படிந்த உடைகளுடன் வீடு திரும்பும் போது குளிர்ச்சியான குளியலும் நல்ல உறக்கமும் தான் ஒருவருக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் கவிதைகள் மற்றும் பாடல்கள் பற்றிக் கண்டு கொள்வார்கள் என நினைக்கின்றீர்களா? கவிதைக்கு இங்கு என்ன இருக்கிறது? கவிதைகளின் மீது இருக்கும் எனது பேரார்வத்தை எனது பணியுடன் இணைக்கமாட்டேன். இவையிரண்டும் மாறுபட்டவை. கொத்தனார்களுக்கும் கவிதைக்குமான தொடர்பு குறைவுதான். ஆனால் என் மனதை இன்பமாக வைத்திருப்பது அந்தக் கவிதைகள் தான்.

. உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன? தணல் மூலமாக இயற்கைக் கட்டுமானம் மீட்டெடுக்கப்படுகிறதா?

எதிர்காலத்தில் நான் பிஜு அவர்களிடம் பணியாற்றிக் கொண்டிருப்பேன். எனது கிராமத்திலும் பணியாற்றலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

மறுமலர்ச்சிப் பற்றிப் பேசுகையில் நான் நேர்மையாக இருக்கிறேன். என்னால் ஒரு பக்கமாக மட்டும் நின்று பதில் கூற இயலாது. நான் இன்னும் ஒரு முடிவை அடையவில்லை. ஆழ்ந்த குழப்பத்தில் தான் இருக்கிறேன். ஒரு பக்கத்தில் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி தணல் கட்டிட வேலைப்பாடுகள் செய்து வருகின்றது. மற்றொரு பக்கத்தில் சந்தையில் காணப்படும் வழக்கமானக் கட்டிடத் தொழிலில் இருக்கும் உயர்ந்த வடிவங்கள். எது சரி என்று எனக்குச் சொல்ல இயலாது. நான் தற்போது உறுதியற்றிருக்கிறேன். அதிக மக்கட் தொகை அடர்த்தி இருக்கும் இடங்களில் உயரமாகக் கட்டுபவர் செய்வது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் பிஜு செய்து கொண்டிருப்பதை பார்க்கும் போது மேலோங்கிய செயல் ஒன்றுக்கான தொடக்கம் என எண்ணுகிறேன். வீடுகள் வாங்க முடியாத மக்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும். மக்கள் இதில் கவனம் செலுத்துவதை என்னால் காண முடிகிறது. கிராமங்களில் இது வெற்றியடையும் என்று நம்புகிறேன். இது சுற்றியுள்ளவற்றை உடனே மாற்றிவிடும். நீங்கள் செய்வதைக் கண்டு மக்கள் இயற்கைக் கட்டிடங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பாரம்பரிய முறைகளை மீட்டெடுப்பது, தணல் ஆற்றும் பணி . நமது முன்னோர்கள் கால கட்டுமான முறைகளை பாதுகாத்து வருகிறது, தணல். இது சேற்றின் மறுபிறவியாகும். நீண்ட காலமாக நாம் இதை உதாசினப்படுத்தி வருகிறோம். நாம் இதை தூக்கி எரிந்ததால் இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மறந்துவிட்டோம். இதன் மதிப்பையும் இதை மறுமலர்ச்சி செய்வதன் முக்கியத்துவத்தையும் தற்போது மக்கள் புரிந்து கொண்டதால் நல்ல மாற்றம் நிலவி வருகிறது. அல்லது மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது என்று கூறலாம். இச்செயல்முறை இறந்த உடலுக்கு உயிர் கொடுப்பது போலதான். கட்டுமானம் புத்துயிர் பெறுகிறது எனக் கூறலாம்.

நான் இங்கு வருவதற்கு முன்பு எனக்குச் சேற்றைப் பற்றி முற்றிலும் வேறுபாடான கருத்துக்கள் இருந்தன. ஆனால் சேற்றுடன் வேலைச் செய்யும் அழகை பிஜு அவர்களிடம் சேர்ந்து கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். மேலும் நான் கற்பதற்கு நிறைய உள்ளது. இவர்கள் சேற்றைப்பற்றி இனிமையானக் குறிப்புகளை வைத்திருக்கின்றனர் தினமும் அதை நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். நான் இங்கு ஆசான் மட்டுமில்லை;பிஜு அவர்களிடம் கற்கும் மாணவனும் கூட.

. வெளியைப் பற்றி உங்களுக்குள்ள கருத்து? அந்த வெளிக்கென்று ஏதும் தனித்திறன் அல்லது ஆன்மீகத் தொடர்பு உள்ளதா?

ஆம், வெளிகளில் ஆன்மீக சாரம் இருக்கிறது. சேற்று மண் கட்டிடங்கள், நமது உடல், உயிர் மற்றும் உள்ளத்துடன் தொடர்பு கொண்டது. வெளி, உங்களுக்கு உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சுகத்தைக் கொடுக்கும்; நமது உடலும் உள்ளமும் நிம்மதியாக இருக்க உதவும். பழங்காலத்தில் மக்கள் தங்கள் வீட்டின் சன்னல்களை எந்தக் கவலையுமின்றி திறந்து வைத்துக் காற்றோட்டமாக உறங்குவர். ஆனால் இப்போழுது குளிர்சாதனப் பெட்டி இருந்தும் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மண்ணிற்கும் நமக்கும் உள்ள இணைப்பைக் காண்கிறீர்களா? நாம் பலபிறவிகளாக இணைக்கப்பட்டுள்ளோம். ஒருவர் இறந்த பிறகு அவரது உடலைப் புதைப்பதற்கு முன் குரானில் இருந்து சில மந்திரங்களை வரிசைப்படுத்தி ஓதுவார்கள். அதில் மண் இடப்பெற்றிருக்கும். “மண்ணிலிருந்து படைத்த உன்னை மீண்டும் மண்ணிற்குள் புதைக்கிறோம்” என்பது இதன் பொருள். ஆம். நாம் எல்லாம் மண்ணால் உருவாக்கப்பட்டவர்கள் தான். நம்மை அறியாமலே சில சமயங்களில் அதை அத்தகைய தொடர்பை உணர்வதுண்டு.

.தணலுடன் ஓராண்டாக இருக்கும் உங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன?

இதை கேள்வியை வேறுவகையில் கேட்கலாம். நீங்கள் என்ன அனுபவித்தீர்கள்? இந்தப் பயணத்தில் எதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டீர்கள்? மற்ற துறைகளில் கிடைக்கும் அனுபவத்தில் இருந்து மாறுபட்ட பல அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. மக்கள், மொழி மற்றும் இடம் என எல்லாமே எனக்குப் புதியது தான். ஆனால் அவை அவ்வளவு அழகான அனுபவங்கள். அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பம் போல வேலை செய்யும் ஒரு மாறுபட்ட சூழலில் இதுக்கு முன்னாடி வேலை செய்தது இல்லை.

செங்கற்கள் மற்றும் சுண்ணாம்புச் சாந்து கொண்டு ஒரு தண்ணீர்த் தொட்டி கட்டினோம்‌‌. அத்தொட்டி ஆகச் சரியாக செயல்படும் என்று எதிர்பார்க்கவில்லை. பச்சைக் கல் மீதான நம்பிக்கை பிறந்திருக்கிறது‌. இங்கே பார்க்கலாம் ஒரு சொட்டு நீர் கூட கசியவில்லை என்பதால் இச்சொதனை வெற்றியே!

மண் வீடுகட்டுவதில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துக் கொண்டு மகிழ்ச்சியாக கற்றுக் கொண்டிருக்கிறேன். முன்னதாக எனக்குச் சிறிய தயக்கமிருந்தது. ஆனால் இப்போழுது முழுமனதுடன் மண் கட்டிடங்களைப் பற்றி நான் மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நான் இதைப் பற்றி எழுதவும் ஆரம்பித்திருக்கிறேன். நான் இங்கில்லாமல் போனாலும், எனது குறிப்பேடு என்னிடம் இருக்கும். என்றைக்காவது ஒரு நாள் இது யாரோ ஒருவருக்குப் பயன்படும். கடைசியாக இந்தக் கவிதையைப் பகிர்கிறேன்.

Rondhi aur kuchli hui aarzu bhi rang lati hai,

besabab samajhke phenke hui mitti bhi mina ban jati hai.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top