இந்தியாவின் தென் முனையில் இருக்கும் இந்த மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளின் இணையான வெவ்வேறு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் ஓர் இடம் ஆக உள்ளது. வரலாற்றில், ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் களஞ்சியம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் தான் நாகர்கோவில்.. இது தமிழ்நாட்டில் இருப்பினும், இவ்வூரின் ஒவ்வொரு அம்சத்திலும் – பருவநிலை, தாவரம், சடங்குகள், உடை, உணவு, பேச்சுவழக்கு மற்றும் மிக முக்கியமாக இங்குள்ள கட்டிடகலையிலும் கூட, கேரள நாட்டின் சுவையை உணர முடியும்.
பொருளடக்கம்:
1. அறிமுகம்
2. திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை
3. நவீனமயமாக்கலின் தாக்கம்.
இயற்கைக் கட்டுமான முறைகள் – நாகர்கோவில்.
4. மண்ணால் ஆன அடித்தளம். (Cob foundation)
5. சுவர் முறைகள்
6. கடற்பாசி கொண்டு அமைக்கப்படும் தட்டையான பச்சைக்கல் கூரை
150 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த கட்டிடக்கலை.
தென்னங்கீற்றுகள் சலசலக்க உலா வரும் தென்றல் காற்று, கோவில் மணியோசையினை நம் செவிகளில் சேர்க்கும். இவ்வீதிகளை கடந்தபடி, அதன் இருபுறமும், 100 ல் இருந்து 150 வருடம் பழமையான வெள்ளை அடிக்கப்பட்ட இரண்டு அடுக்கு மாடி வீடுகள் இன்றளவும் வலுவாக நிற்பதைக் காண முடிகிறது. இப்படி, இவ்வூரில் உள்ள எந்தக் கிராமத்தினைப் போன்றும், ‘பறக்கை’ எனப்படும் கிராமமும் அதன் செழிப்பான கட்டிடக்கலையினை உரக்கச் சொல்கிறது.
இந்தக் கிராமம் முழுவதும், ஒர் தனித்துவமான திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலையினை காட்சிபடுத்துகிறது. அங்குள்ள சூழலுக்கும், வசித்த சமூகத்திற்கும் உகந்த ஒரு வாழ்க்கை முறையினையே நம் முன்னோர்கள் எப்போதும் பின்பற்றினர். இவ்வகையில், இவ்வீடுகளும் உண்மையில், அர்த்தமுள்ள பசுமை வீடுகள் தான்.
திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை
ஊரின் பிரதானமான வீதிகள், தேர் செல்லும் வகையில் , தேவையான அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிற வீதிகளும் போதுமான அகலம் கொண்டவையே.
இவ்வீதிகளின் இருபுறமும் உள்ள மண் வீடுகள், அவற்றின் திண்ணை வழியே நம்மை வரவேற்கும். திண்ணை எனப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே! வீட்டு வாயிலில் அமைக்கப்படும் தாழ்வாரம் போன்ற ஒரு பகுதி இது. பொதுவாக, வீட்டில் வசிப்பவர்கள் பிற ஊர் மக்களோடு பழகுவதற்கும், உரையாடுவதற்கும், இளைப்பாறுவதற்குமான ஒரு இடம். இதை தொடர்ந்து, வீட்டின் நடுமுற்றத்தை வந்தடையலாம். நடுமுற்றம் வாழ்வறையை(living room) ஒட்டி இருக்கும். இப்பகுதி, வீட்டின் சமயலறை படுக்கையறை போன்ற தனிப்பட்ட பகுதிகளுக்கு முன் அமைந்து, வீட்டில் வசிப்பவர்களுக்கான தனியுரிமையை உறுதிபடுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வீடுகள் இரண்டு அடுக்குமாடி வீடுகளாக, முதல் அடுக்கில் பரண் எனும் ஓர் அறையைப் பெற்றிருக்கும். இங்கு வசித்த சமூகம், பிரதானமாக விவசாய சமூகமாக இருந்தமையால், நெற்தானியங்களை சேமிக்கவும் உலர வைக்கவும் இந்தப் பரண் பயன்படுத்தப்பட்டது. இப்பகுதியில் கனமான பருவமழை பொழிவதால், இதன் மேல், செங்குத்தான சாய்வு ஓட்டுக்கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள பெரும்பாலான வீடுகள், இவ்வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. பரப்பளவில் மட்டுமே வேறுபடுகின்றன.
நவீனமயமாக்கலின் தாக்கம்
இந்தியாவின் எந்த ஒரு கிராமத்தினை போன்றும், இந்தக் கிராமமும் நவீனமயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும், மிகக் குறுகிய கால அளவில். கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே, காலத்தின் சோதனையை வென்று நின்ற பல பாரம்பரிய வீடுகள், அவற்றுள் அடங்கியுள்ள நிகரற்ற அறிவினை உணராத தற்கால தலைமுறையினரால், குறைவாக மதிப்பிடப்பட்டு, இடித்தொழிக்கப்பட்டு, நவீன கான்கிரீட் வீடுகளுக்கு இரையாக்கப்பட்டன! இருப்பினும், இவ்வீதிகளில், உயிர் பிழைத்து இன்றளவும் வலுவாய் நிற்கும் சில வீடுகள், அவற்றுள் எண்ணிலடங்காத விலைமதிப்பற்ற அறிவினை பகிரக் காத்திருக்கிறது
பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள வீடுகள், அவற்றின் திட்டமிடலிலும் கட்டுமான முறையிலும் ஒரு பொதுவான நடையினைப் கொண்டுள்ளன. அவற்றின் பரப்பளவிலும், கட்டுமானப் பொருட்களின் தேர்விலும் மட்டுமே மாறுபடும். இந்தக்கட்டுரையில், நாகர்கோவிலில் பல்வேறு காலகட்டங்களில், பல தரப்பு மக்கள் பின்பற்றிய, கட்டுமான முறைகள்குறித்த ஆவணமாக்கத்தை காணலாம் – அடித்தளம் அமைத்தல், சுவர் எழுப்புதல், கூரை, மற்றும் இயற்கை பூச்சுகள்.
இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?
இயற்கைக் கட்டுமான முறைகள் – நாகர்கோவில்.
மண்ணால் ஆன அடித்தளம். (Cob foundation)
வசதி இல்லாதவரின் வீடு, எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், ஒரு நிலையான வசிப்பிடத்திற்கான அடிப்படைத் தேவைகளை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது. காப்(Cob) அடித்தளம், வெறும் மண்ணை கொண்டு குறைந்த விலையில் வலுவாக அமைக்கப்படும் ஒன்று. உள்ளூரில் கிடைக்கப்பெற்ற செம்மண் இதற்குப் பயன்படுத்தப்பட்டது. தாவர இடுபொருட்கள் கொண்டு நிலைப்படுத்தப்பட்ட செம்மண்ணை, சிறு பந்துகளாக வைத்து, சுவர் எழுப்புவதைப் போன்றே அடித்தளம் அமைக்கப்படும். மாறாக, வசதி படைத்தவர்கள், கல் கட்டுமானம் அல்லது கற்கள், மணல், சல்லிக்கல் கொண்டு வீட்டின் அடித்தளம் அமைத்தனர்.
மேலும், கரையான்கள் மற்றும் ஈரப்பதம் அண்டாமல் அடித்தளத்தைக் காக்க, பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட முறையில் ஒன்று தான், 2′ அடர்த்தியும், அடித்தளத்தைவிட 1′ அதிக அகலத்தையும் கொண்டு அமைக்கப்படும் மணற்படுக்கைகள். இது வடிகால் போன்று செயல்பட்டு நீர் மற்றும் கரையான்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.
சுவர் முறைகள்
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான இரண்டடுக்கு வீடுகளின் சுவர்கள், பளுதாங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டவை. அவ்வீட்டின் எடை அனைத்தையும் சுவர்களே தாங்கும். எளிமையாகவும், குறைந்த நேரத்தில் அதிக உயரம் வரை சுவர் எழுப்பலாம் என்பதாலும், வெயிலில் காய வைக்கப்பட்ட பச்சைக்கல், பிரதானமாகச் சுவர் எழுப்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து, காப் எனப்படும், (முன்னர் அடித்தளத்தில் குறிப்பிட்டபடியான) மண் சுவர் முறையும் பின்பற்றபட்டது.
இப்பகுதியில், மண் கலவையில் நார்ப்பொருள் சேர்ப்பதில்லை. மாறாக, சரளைக்கற்கள் மிகுந்த மண்ணையே தேர்ந்தெடுத்தனர். சில சமயங்களில், மண் சுவற்றில் கூடுதல் வலிமைக்காக, ஆங்காங்கே கற்கள் மற்றும் ஓடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காண முடியும்
மிக குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளிலேயே, தூண் மற்றும் உத்திரம் கொண்டு கட்டிடம் எழுப்பப்பட்டது. தவிர்த்து, திண்ணை அல்லது முற்றம் பகுதிகளில் மட்டுமே தூண்களை காண முடியும்.
கடற்பாசி கொண்டு அமைக்கப்படும் தட்டையான பச்சைக்கல் கூரை.
வீட்டின் அளவுகளைக் கருதில் கொள்ளாது, எல்லா வீடுகளிலும் முதல் அடுக்கு மாடி இருந்ததை காண முடியும். இப்பகுதிக்குரிய ஒரு தனித்துவமான பச்சைக்கல் கூரை, இதற்கு வழி வகுத்தது. இம்முறையில், மரப்பலகைக்கும் மண் அடுக்குகளுக்கும் இடையில் பச்சைக்கற்கள் வைக்கப்படும்.
பெரிய இடைவெளியிலான கூரைகளில், கூடுதலாக, மர உத்திரங்கள் சுவரின் மீது செங்குத்தாக வைக்கப்படும். அதன் மேல், உத்திரத்திற்கு செங்குத்தாக, 1 இல் இருந்து 1.5 அடி இடைவெளியில் மரக்கைகள் வைக்கப்படும். இவற்றைப் பின்னும்படி மர ரீப்பர்கள் வைக்கப்பட்டு, ஒரு வலை சட்டம்போல் அமைக்கப்படும். இதைத் தொடர்ந்து, மரப்பலகைகள் வைக்கப்படும். குறிப்பிட்ட வகை கரையான் எதிர்ப்பு மரங்களான பூவரசு, வேம்பு, தேக்கு, வாகை, வேங்கை மற்றும் நாவல் மரங்கள் தான் பெரும்பாலும் மர வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
கூடுதல் பாதுகாப்பிற்காக, மரப்பலகைகள் மீது, கடற்பாசி ஒரு அடுக்காக விரிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, வேப்பிலை அல்லது ஈரல்(ஒரு வகை மூங்கில்) இலைகளையும் கூடப் பயன்படுத்தலாம். இந்த அடுக்கின் மேல், பச்சைக்கல் அடுக்கு அமைத்து, மண், மணல் மற்றும் சில தாவிர இடுபொருட்கள் கலந்து பூசப்படும். இறுதியாக, மறுநாள், மாட்டுச்சாணம் மற்றும் மணல் கலந்து தரைப்பரப்பை மெழுகுவார்கள்.
இப்பகுதியில் பின்பற்றபட்ட கட்டுமான முறையில், அடித்தளம், சுவர், மற்றும் கூரை முறைகளிலும் கூட, சுண்ணாம்பு அரிதாகவே பயன்படுத்தப்பட்டதை காணலாம். உள்ளூரில் கிடைத்த தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களை கொண்டும், மண்ணை சரியான முறையில் கையாண்டும் மட்டுமே, நிலையான வலிமையை அடைய அறிந்திருந்த நம் முன்னோர்களுக்கு, சுண்ணாம்பு அரிதாகவே தேவைப்பட்டது!
இப்படிபட்ட தொன்மையான கட்டுமான முறைகளைப் பற்றியும், சுண்ணாம்பின் பயன்பாடு, இயற்கை பூச்சுகள் மற்றும் தரைதளம் குறித்தும் நாகர்கோவிலை சேர்ந்த, ஒரு 82 வயது கொத்தனார் மற்றும் ஸ்தபதியின் கருத்தினை தெரிந்து கொள்ள, இந்த லிங்க்-ஐ தொடரவும்.
லிங்க்: நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா
Illustration by: Architect Ramani Rajam
நெ. இரமணி ராஜம்
எழுதியவர்: நெ.இரமணி ராஜம்
இக்கட்டுரை 'உயிர்ப்பான கிராமங்கள்' தொடரில் ஒன்று
3 thoughts on “நாகர்கோவிலின் மண் வீடுகள் பேசும் தொன்மையான கட்டிடக்கலை”
Namaste Hari,
Kindly write to thannalroots<@>gmail.com
tq very much . im from nagercoil. like to have a cow dung floor . how to make it
மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றிகள் பல. உங்கள் பயணம் சிறக்கட்டும், பாராட்டுகளும் மற்றும் வாழ்த்துகளும்.