நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா

Interview 82 Years Old Tamil Nadu Stapathi Master Artisan Nataraja Pillai Ayya FI

நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா

தலைமை கைவினைஞர் நடராஜ பிள்ளை அய்யாவுடன், கலைஞர்களுக்கு மதிப்பளித்தல் தொடர்

நாகர்கோவிலின் இரண்டடுக்கு மாடி வீடுகளின் பின்னால் மறைந்திருக்கும் பாரம்பரியக் கட்டுமான முறைகளை ஆராயும் பயணம், அம்முடிச்சுகளை அவிழ்க்க முடிந்த ஒரு அனுபவம் வாய்ந்த  கைவினைஞரை வந்தடைந்தது. இப்பகுதியின் இயற்கை கட்டுமான முறைகளைத் தெரிந்து கொள்க –  நாகர்கோவிலின் மண் வீடுகள் பேசும் தொன்மையானக் கட்டிடக்கலை.

நாகர்கோவிலைச் சேர்ந்த 82 வயது ஸ்தபதி மற்றும் கோவில் கட்டிடக்கலை நிபுணரான நடராஜ பிள்ளை அய்யா, இன்னும், அப்பகுதியில் உள்ள பல கோவில்களைத் தீவிரமாகச் சீரமைத்துக் கொண்டும், புதிய பல கோவில்களையும் அவற்றில் அமையும் சிற்பங்களையும் கட்டிஎழுப்பும் பணியிலும் உள்ளார். இவர் தன் இளம் பருவத்தில் சில காலம் கொத்த வேலையில், இயற்கைக் கட்டுமான பொருட்களுடன் நெருக்கமாக வேலை செய்து, அவற்றைக் குறித்த ஆழமானப் புரிதலையும் பெற்றிருக்கிறார்.

நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி (தலைமை கைவினைஞர்), நடராஜ பிள்ளை அய்யா
நடராஜ பிள்ளை அய்யா, 82 வயது ஸ்தபதி
சுண்ணாம்பு மணற் பூச்சு செய்முறையைப் பற்றி நடராஜ பிள்ளை அய்யா விளக்கம் அளித்தல்
சிலை தயாரித்தல்

இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.

எவ்வளவு காலமாக நீங்கள் இயற்கைக் கட்டுமானப் பொருட்களுடன் வேலை செய்கிறீர்கள்?

என் குடும்பத்தில், தலைமுறைகளாக நாங்கள் ஏதோ ஒரு வகையில் இயற்கைக் கட்டுமானப் பொருட்களுடன் நெருங்கியே வேலை செய்துள்ளோம். பின்னர், நானும் என் சகோதரர்களும் அதே பாதையின் வெவ்வேறு கிளைகளைச் சென்றடைந்தோம். கட்டுமானத்திலும், கட்டுமானப் பொருட்களை வைத்தும் நான் என் இளம் வயதிலிருந்து வேலை செய்கிறேன். பின்னர், இப்போது சிற்பங்கள் வடிவமைப்பு மற்றும் கோவில் வடிவமைப்பு போன்றவைதான் என் முக்கிய வேலை‌

நாகர்கோவில் பகுதியின் பாரம்பரியக் கட்டுமானத்தில், சுண்ணாம்பின் பங்கு எவ்வாறாக இருந்தது?

பல வருடங்களுக்கு முன்னால், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் வீடுகள், வெறும் மண்ணைக் கொண்டு தான் எழுப்பப்பட்டன. அவ்வீடுகளில் சுண்ணாம்பின் பயன்பாட்டை அரிதாகவே காண முடிந்தது. இப்போது, இயற்கை கட்டுமானத்தில் ஒரு முதன்மையான முக்கியமானப் பொருளாகக் கருதப்படும் சுண்ணாம்பு, முற்காலத்தில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆடம்பரப் பொருளாகவே இருந்தது. சுட்ட செங்களின் அறிமுகத்திற்குப்ஸபின்னரே, சுண்ணாம்பு சார்ந்த கட்டுமான முறைகள் வெகுவாகப் பயன்பாட்டிற்கு வந்தன. காலப்போக்கில், சாந்து, பூச்சு, அடித்தளம், தரைதளம் என எல்லாவற்றிலும் சுண்ணாம்புப் பயன்பட ஆரம்பித்தது.

சுண்ணாம்புச் சாந்தின் செய்முறையும் பயன்பாடும் குறித்த  தங்கள் விளக்கம் யாது?

கற்கட்டுமானம் மற்றும் செங்கல் கட்டுமானத்தில் பயன்பட்ட ஒரு வலுவான சாந்து தான், சுண்ணாம்பு மணற் சாந்து. இது, சுண்ணாம்பு, மணல் மற்றும் பிற இடுபொருட்கள் கலந்து, அம்மி அல்லது செக்கில் அரைத்து, சாந்தாகப் பயன்படுத்தபட்டது.

சுண்ணாம்பு மணற் பூச்சு என்றால் என்ன? அதன் நன்மைகள் யாவை?

காலத்தின் சோதனையை வென்று நிற்கும், நீண்ட பரந்த இவ்வெளிப்புற சுவர் பரப்புகள், சுண்ணாம்பு மணற் பூச்சு குறித்து உரைக்கப் பேசும்! இப்பழஞ்சுவர்களின்  வெளிப்பூச்சினை சிறிது உடைத்துப் பார்த்தால் தெரியும்சுண்ணாம்பு காலப்போக்கில் எவ்வளவு வலிமையானதாக மாறக்கூடியது என்று. சுண்ணாம்பு மணற் பூச்சு, அதிகப் படியான சுண்ணாம்பு மற்றும் மணல் கலந்து தயாரிக்கப்படும். இதில் இடுபொருட்கள் கலந்த பின், இதனை அரைத்து, புளிக்க வைத்துப் பின்னர் பயன்படுத்தலாம். இது ஒரு வலுவான பூச்சாதலால், இதனை வெளிப்புற சுவர்களைப் பூசப் பயன்படுத்தலாம். பொதுவாக இரண்டு அடுக்காக இது பூசப்படும்..

சுண்ணாம்புப் பூச்சுக்கு எவ்வகை சுண்ணாம்பு உகந்தது (கல் சுண்ணாம்பு/ கிளிஞ்சல் அல்லது சிப்பிச் சுண்ணாம்பு)?

கடலுக்கு அருகாமையில் இப்பகுதி அமைந்துள்ளமையால், கட்டுமானத்தில் பூச்சு உட்பட எல்லாவற்றிற்கும் இப்பகுதியில் கிளிஞ்சல் சுண்ணாம்பே பயன்படுத்தப்பட்டது‌. மற்றபடி, அதிக சுண்ணாம்புத் தன்மையை  உள்ளடக்கிய, கல் அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பு எதுவானாலும் பயன்படுத்தலாம்.

சுண்ணாம்புப் பூச்சு தயாரிப்பில்,  அரைத்தலின் முக்கியத்துவம் என்ன?

சுண்ணாம்பு மணற் பூச்சின் வலிமை அது எவ்வளவு நன்றாக அரைக்கப்பட்டது என்பதைப் பொறுத்ததே! அரைத்தலால், சுண்ணாம்பில் சரியாகத் தாளிக்கப்படாத பகுதிகள் பொடியாக்கலாம். மேலும், இதன் மூலம் கலவையிலுள்ள  வெவ்வேறு பொருட்களும் நன்றாக ஒன்று கலந்து, எந்த இரண்டு மணற் துகள்களும் அதற்கிடையில் சுண்ணாம்பு படலம் இல்லாமல் கலவையில் இடம்பெறாது. அரைத்தலின் மூலம் மணற்துகள்களின் அளவு சிறிதாகி, பூச்சு மேலும் நேர்த்தியானதாக மாறும்.

இப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த பல்வேறு மண் பூச்சுகள் குறித்துக் கூற முடியுமா?

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், சுண்ணாம்புப் பூச்சுவிற்குப் பதிலாக மண் சுவர்களின் மேல் மண் பூச்சே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. எந்த பகுதிக்கும் உகந்த, ஒரு எளிமையான மண் பூச்சு, அப்பகுதியில் கிடைக்கும் களிமண் மற்றும் மணல் கலந்து கலவை தான். கும்மயம் எனப்படுவது மண் மற்றும் சுண்ணாம்பு கலந்த ஒரு பூச்சுக் கலவை. சமமான அளவில் சுண்ணாம்பு, மணல் மற்றும் செம்மண் கலந்து இது தயாரிக்கப்படும். இப்படி, அவ்விடத்தில் கிடைத்த மண்ணிற்கேற்ப, இன்னும் பல வகை மண் பூச்சுகள், பயன்பாட்டில் இருந்தன.

சுண்ணாம்பு மணற் பூச்சு பூசப்பட்ட நீண்ட வெளிப்புற சுவர் பரப்பு
சுண்ணாம்பு மணற் பூச்சு பூசப்பட்ட நீண்ட வெளிப்புற சுவர் பரப்பு
வெள்ளையடிக்கப்பட்டுள்ள மண் பூச்சு
வெள்ளையடிக்கப்பட்டுள்ள மண் பூச்சு

வெளிப்புறச் சுவர்களில் பயன்படுத்தும் போது, மண் பூச்சுகள் எவ்வாறு பருவநிலையை  வென்று  செயலாற்றுகிறது?

மண் பூச்சுகள் வெளிப்புற சுவர்களில்  பயன்படுத்தப்பட்ட ஒன்று தான். மண்ணை நிலைப்படுத்தும் தன்மை சுண்ணாம்பிற்கு இருந்தாலும், அது எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படவில்லை. அதே போன்ற நிலைப்படுத்தும் தன்மை இயற்கை இடுபொருட்களை மண்ணுடன் சேர்க்கும் போதும் கிடைக்கும்  என்றே நம் முன்னோர்கள் நம்பினர். அதை நிருபித்தும் உள்ளனர். அல்லது, மண் பூச்சின் மேல் சில முறை வெள்ளை அடித்தாலும் கூட போதுமானது

வெள்ளையடித்தலின் முக்கியத்துவம் என்ன?

வெள்ளையடித்தல் எனப்படுவது சுண்ணாம்புப் பாலை மெல்லிய அடுக்காக சுவரின் மேல் பூசுவது. இதனை, பூசப்பட்ட சுவரின் மீது கூடுதல்  நீர்ப்புகா தன்மைக்காக, கடைசி அடுக்காகவும்  பயன்படுத்துவது உண்டு. முற்காலத்தில், திருவிழாக்களின் போது அல்லது பொங்கல் பண்டிகையின் போது, ஒவ்வொரு வருடமும் மீண்டும் சுவர்களை வெள்ளையடிப்பர்‌. இப்படி அச்சுவர்களை நீர்ப்புகா வண்ணம் பாதுகாத்தனர்.

கட்டிடத்தின் பிற இடங்களில் நீர்புகாத் தன்மையை எவ்வாறு அடையமுடிந்தது?

நீரின் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட எல்லா பரப்புகளுக்கும் இதே சூத்திரம் தான். அது, தரைப்பரப்பு, மொட்டைமாடி, முற்றம், சுவர்கள் அல்லது தட்டைக் கூரை எதுவாக இருந்தாலும் சரி! முதலில் சுண்ணாம்பு மணற் பூச்சு இரண்டடுக்கும், அதன் மீது வெள்ளையடித்தலும். அப்பரப்புகளின் நீர்ப்புகாத் தன்மைமீண்டும் வெள்ளையடிக்கக்  கூடிக்கொண்டே போகும். இதனால், கடினமானப் பருவநிலையைக் கூட கட்டிடங்கள் தாங்கி நிற்கும்

நவீன கட்டுமானங்களுக்கிடையே பாரம்பரிய இயற்கை கட்டுமானங்களை  எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இப்பகுதியில் இன்றளவும் நிற்கின்ற சில 50, 60 வருட பழமையான வீடுகளின் கட்டுமானப் பணியில் நானும் பங்களித்திருக்கிறேன். நூற்றாண்டுகள் தாண்டி இன்றும் வலுவாய் நிற்கும் சில வீடுகளும் உள்ளன. அதே சமயம், சரியானப் பராமரிப்பு இல்லாமல், அவ்வீடுகளை இடித்து, அவ்விடத்தில் நவீன வீடுகள் கட்டுவோரும்  உண்டு. காலத்தை வென்று சாட்சியாய் நிற்கும் இந்த இயற்கை வீடுகள்  இன்னும் நீண்ட  காலத்திற்கும் மனிதனோடு கூட வருவன. அதற்கு தேவையானதெல்லாம் நிதானமும் பராமரிப்பும்

இறுதியாக, கோவில் கட்டிடக்கலையில் நவீன மயமாக்கலின் தாக்கம் என்ன?

நவீன மயமாக்கலின் தாக்கம் கோவில் கட்டிடக்கலையிலும்  உள்ளது. முற்காலத்தில், உள்ளே மரக் கட்டமைப்பு அமைத்து, மண் மற்றும் சுண்ணாம்பு கொண்டுச் சிற்பங்களை வடித்தனர். பிற்காலத்தில், செங்கல் துண்டுகளும் கூட வடிவம் கொடுக்க பயன்பட்டது‌. கட்டுமானத்திற்குச் செய்வதைப் போன்றே, சுண்ணாம்பு மணற் கலவை இதற்கும் தகுந்த முறையில் தயாரிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற்கெல்லாம் மிகுந்த உழைப்பும் பொறுமையும் தேவையாக இருந்தது. கடவுள் தங்குமிடமான  இச்சிற்பங்கள் இப்படிப் புனிதமானது‌. இப்போது, நவீன மயமாக்கலின் தாக்கத்தால், இதே சிற்பங்கள் செங்கல், சிமெண்ட் மற்றும் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. மேலும், கல், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு எழுப்பட்ட கோவில் கோபுரங்கள் இன்று, செங்கல் சிமெண்ட் கொண்டு எழுப்பபடுகிறது.

இதன்மூலம், நாம் தெரிந்து கொள்வதென்னவென்றால், தற்காலத் தலைமுறையினர்இயற்கை கொடுத்தவற்றைக் காட்டிலும், மனிதனால் உருவாக்கப்பட்டவற்றையே மேன்மையாகக் கருதுகின்றனர். காலம் இவற்றிற்குப் பதிலளிக்கும்! மனிதனை உணர செய்யும்!!

Picture of நெ. இரமணி ராஜம்

நெ. இரமணி ராஜம்

எழுதியவர்: நெ.இரமணி ராஜம்
இக்கட்டுரை 'மக்கள்& நேர்காணல்கள்' தொடரில் ஒன்று

மற்ற பதிவுகள்

2 thoughts on “நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா”

  1. இரா.தங்கராஜா

    இயற்கையை நேசிப்போம்
    இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்…

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top