இயற்கைக்கட்டுமான தொழிற்நுட்பங்கள் – தொடர் 1
அறிமுகம்
பலதரப்பட்ட சுவர் வகைகளை உள்ளடக்கிய பெரும் ஆலமரமாய் இயற்கை வழிக்கட்டுமான முறைகள் திகழ்கின்றன. பற்பல தலைமுறைகள் தாண்டி, பழம்பெரும் பாரம்பரிமுறைகளை கட்டுமானங்கள் உள்ளடக்கியுள்ளன. பருவச்சூழல் மற்றும் கிடைக்கும் பொருளுக்கு ஏற்றவாறு இடத்துக்கு இடம் தனித்துவமாய் விளங்கி, பூமித்தாயை வருடிக்கொடுக்கும் வகையாக, அருகே கிடைக்கும் எளிய பொருட்களை வைத்து கட்டுமானம் எழுப்ப வலியுறுத்துகிறது. அதேபோல எளிய பொருளாதரத்தை முன்வைக்கும் விதமாக உள்ளூர் திறன்களில், வளங்களில் கவனம் செலுத்தி உள்ளூர்ப் பண்பாட்டுச்சூழலை இயற்கையுடன் பிணைக்கிறது. உடல்,மனம் மற்றும் உயிர்ச்சூழலைச் சுகமாக அமைத்துக்கொடுக்கும் வகையில் வீட்டிற்குள் தட்பவெப்பத்தை இவ்வகைச்சுவர்கள் உருவாக்குகின்றன.மேலும் மண்ணாலான சுவர்கள் பல வண்ணங்களையும் texture என்று சொல்லக்கூடிய இழைநயத்தையும் கொடுக்கக்கூடியது.
குறிப்பு: கீழ்காணும் ஒவ்வொரு சுவர் வகையும் மண் வைத்தே எழுப்பப்படுபவை, சுண்ணாம்பு மற்றும் இடுபொருட்களால் நிலைத்தன்மை அடைகின்றன. சூழலுக்கு உகந்த, கலப்படமற்ற, சிக்கனமான பொருட்கள் தான் தற்சார்பிற்கான செய்முறையில் இருக்கமுடியும். சிமிண்ட் பயன்பாடு மண்சார் சுவர்களின் தரத்தைப் பாதிப்பதால் அவற்றை அறவே தவிர்க்கிறோம்
மண்சுவர்(Cob)
“மண்வீடு” என்றாலே மண்சுவர் வீட்டை தான் குறிக்கும். இந்தியா முழுவதிலும் இதைக் காணலாம்.
மண்சுவர் என்பது மணல், வண்டல்,களி இவற்றுடன் நார்பொருட்கள் சேர்த்த கலவை கொண்டு கட்டுவதால் கிடைக்கும் ஒற்றைதன்மை கொண்ட அமைப்பு. நம் நாட்டைப் பொருத்தவரை மண்சுவர் கலவையில் கடுக்காய்-வெல்லம் கரைசல், வேம்பு-மஞ்சள் நீர் சேர்க்கப்படுகின்றன, இவை கரையான் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து சுவரின் ஆயுளை நீடிக்கச்செய்கின்றன. இச்சுவர்களானது வெளி வெப்பத்தை வெகுவாகத் தடுக்கும் பண்புபெற்று, நிலநடுக்கத்திற்க்கு எதிராக மிக நிறைவான வலிமையைப்பெற்றுள்ளன.
மண் உருண்டைகள் வைத்து வைத்து, கைகளால் செதுக்கி, வேண்டிய அமைப்பைக் கொடுக்கலாம். இவை அடுக்குகளாக எழுப்பப்பட்டு, அதிக தடிமன் கொண்ட சுவர்களாக உருவெடுக்கின்றன. இதனால் விதவிதமான வடிவங்களில் சுவர் படைக்கும் அளவில்லா பெருஞ்சுதந்திரம் கட்டுமான நிபுணருக்குக் கிடைக்கிறது.
- ஒற்றைக்கல் அமைப்பு
- எடைதாங்கும் சுவர்
- மிகையான நீர்ப்பயன்பாடு
- மேற்பரப்பில் எளிதில் சிற்பங்கள் செய்யலாம்
மண்சுவர் கட்டிட நிழற்படத்தொகுப்பு : இயற்கை உணவகம், வடகரா, கேரளா
மண்வீடு கட்டியதன் காணொளி: ஏரிக்கரை மண்வீடு
மண்வீடு கட்டிடங்கள் பற்றிய நூல்: ஒற்றைக்கல் சுவர் அமைப்புகள்
வரிச்சிச் சுவர்(Wattle and daub)
உலக அளவில் பலதரப்பட்ட கலாச்சாரம் கொண்ட சிற்றூர்ப்பகுதிகளில் உள்ள தொழில்நுட்ப முறை இது.
இம்முறையில் இரண்டு பகுதிகள் உள்ளன: முதலாவதாகச் சட்டம் பின்னுவது. எளிதில் வளையக்கூடிய மரக்குச்சி அல்லது மூங்கில் வைத்து சுவருக்கு தேவைப்படும் வடிவத்தில் பின்னிவைப்பது முதல் வேலை. மண்சுவர் கலவை போலவே சற்று அதிகமான நீர்த்தகலவையை வைத்து முதலாவதாக பின்னிய சட்டத்தின் சிறு இடைவெளிகளில் நிரப்பவேண்டும். பின்னல் சுவர்களுக்கு மிகக்குறைந்த அளவே மண்பொருட்கள் தேவைப்படும். மிக விரைவாக கட்டிமுடிக்கக் கூடிய முறை இது. கொஞ்சம் கிளைகள், குச்சிகள், களிமண் மற்றும் நீர் இருந்தால் ஒரு பின்னல்சுவர் வீட்டை கட்டிஎழுப்பலாம். மழையில் இருந்து பாதுகாப்பாகப் பராமரித்தால் பல ஆண்டுகளுக்கு மேலே நீடித்து நிற்க்கும்.
- ஒற்றைக்கல் அமைப்பு
- சுமைதாங்காது
- மிகையான நீர்ப்பயன்பாடு
- மேற்பரப்பில் எளிதில் சிற்பங்கள் செய்யலாம்
வரிச்சிச் சுவர் கட்டிடப் நிழற்படத்தொகுப்பு: வரிச்சிச் சுவர் வீடு
வரிச்சிச் சுவர் கட்டப்பட்டதன் காணொளி: வரிச்சிச் சுவர் வீடு
வரிச்சிச் சுவர் கட்டிடங்கள் பற்றிய நூல்: பின்னல் சுவர்கள்
அச்சுச் சுவர்(Rammed Earth)
ஆயிரம் ஆண்டு கால வழக்கமாய் நீடித்து இருக்கும் கட்டுமானத் தொழில்நுட்பமுறை இது. நூற்றாண்டுகளை கடந்த பற்பல கட்டிடங்கள் எடுத்துக்காட்டுகளாக கைவசம் உள்ளன.
(எடு-கா) சீனப்பெருஞ்சுவர்
இச்சுவர்வகையானது திரட்சிக்கலவையான சரளைக்கற்கள், மண், மணல் சிறிது களி சேர்த்து தட்டையான உருச்சட்டத்தில் இட்டு இடித்து நன்றாக இறுக்கிய அடுக்குகளாக கட்டமைப்பதே ஆகும். அடுக்குமாடிக் கட்டுமானம் எழுப்ப ஏற்ற வகையில் இதன் இறுக்கத்தன்மை வலிமைசேர்க்கிறது. சுண்ணாம்பு சேர்த்து நிலைத்தன்மை கொடுக்கும்பட்சத்தில் இதற்கு வெளிப்பூச்சு கூட அவசியமில்லை. ஒவ்வொரு அடுக்கிலும் வெவ்வேறு மண் வகைகளை பயன்படுத்தும்போது விதவிதமான வண்ணங்களும் இழைநயமும் கலைநயத்தையும் கொடுக்கும்.
- ஒற்றைக்கல் அமைப்பு
- சுமைதாங்கிச் சுவர்
- குறைவான நீர்ப்பயன்பாடு
அச்சுச்சுவர் கட்டிடப் புகைப்படத்தொகுப்பு: அச்சுச் சுவர் வீடுகள்
அச்சுச்சுவர்கள் கட்டப்பட்டதன் காணொலி: அச்சு சுவர்கள் அறிமுகம்
அச்சுச்சுவர் கட்டிடங்கள் பற்றிய நூல்: ஒற்றைக்கல் சுவர் அமைப்புகள்
இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?
பச்சைக்கல்(Adobe)
பச்சைக்கல் பயன்பாடு உலகத்தின் முதல் நாகரீகத்திலிருதே உள்ளது என்பதற்கான சமீபத்திய சான்று, தொன்மைகால மதுரை என்று ஆராய்ச்சிக்கு உட்பட்டுள்ள கீழடி அகழ்வாய்வு.
சூரிய வெப்பத்தில் காய்ந்த மண் கட்டிகளே பச்சைக்கல் என்பதாகும். மண்சுவர்களின் கலவை போலவே இவையும் மண், மணல், களி இவற்றுடன் நார்பொருட்கள் சேர்ந்தே உருவாக்கப்படுகின்றன. மேற்கூறிய கலவையை சரியான ஈரப்பததில் செங்கல் அறுக்கும் சட்டத்தில் இட்டு எடுத்தால் வடிவம் கிடைக்கும், அதை வெயிலில் காயவிட்டால் போதுமானது. நடைமுறையில் உள்ள செங்கல் போலவே தேவைக்கு ஏற்ப பல வடிவங்களும் அளவுகளும் இவற்றிக்கும் உள்ளன. வெளி வெப்பத்தை வெகுவாக தடுக்கும் பண்பைப் பெற்ற இக்கட்டுமானமுறை மலிவானது.
- பல கற்கள் கொண்டு சுவர் எழுப்பும் முறை
- சுமைதாங்கிச் சுவர்
- மிகையான நீர்ப்பயன்பாடு
- மேற்புறத்தில் சிற்பங்கள் செய்ய வல்லது
பச்சைக்கல்லால் கட்டப்பட்ட விதைவங்கியின் புகைப்படத்தொகுப்பு: அடோப் விதை வங்கி, கேரளா
பச்சைக்கல் செய்யப்பட்டதன் காணொலி: தி ஆர்ச் ஆஃப் அடோனிஸ்
வரிச்சிச் சுவர் கட்டுமானம் பற்றிய நூல்: தி ஓனர்ஸ் பில்ட் ஹவுஸ்
மண்மூட்டை(Earth Bag)
மண்மூட்டைக் கட்டுமானமுறை புதியது என்றாலும் வெள்ளநீரைத் தற்காலிகமாகத் தடுக்கப் பயன்படுத்தியது பழங்காலத்திலும் மண்மூட்டைப் பயன்பாடு இருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும், நிரந்தரமானக் கட்டுமானத்தை எழுப்பும் வழக்கம் சமகாலத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஈரமண் கலவையை சணல் சாக்கில் இட்டு திம்சுக்கட்டையை வைத்து அடித்து அழுத்தி இறுக்கிச் செங்கல் போல் மாற்றி அதை அடுக்கி சுவர் எழுப்பலாம்.
பாரம்பரிய சணல் சாக்கு மக்கும் என்பதால், இம்முறைக்கு வெளிப்பூச்சு தேவைப்படுகின்றது. இச்சுவர் வகைகள் உறுதியாக இருப்பதால், இவை அனைத்துவிதமான தட்பவெப்ப சூழலையும், இயற்கைச் சீற்றங்களான நில நடுக்கம் மற்றும் வெள்ளத்தையும் தாங்குகிறது. குறைந்த செலவில் மிக விரைவாக உடனடியாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து நேர்த்தியாக எழுப்பலாம்.
- பல கற்கள் கொண்டு கட்டப்பட்டதைப்போலவும் ஒற்றைத்தன்மையுடையதாகவும்
- சுமைதாங்கிச் சுவர்
- குறைவான நீர்ப்பயன்பாடு
மண்மூட்டை வீட்டின் புகைப்படத்தொகுப்பு: திருவண்ணாமலையில் உள்ள மண்மூட்டை வீடு
மண்மூட்டை வீடு கட்டப்பட்டதன் காணொளி : திருவண்ணாமலையில் உள்ள மண்மூட்டை வீடு
மண்மூட்டை கட்டிடங்கள் பற்றிய நூல்: பில்டிங்க் வித் எர்த்:எ ஹெய்டு டு பிலக்ஸிபில் ஃபார்ம் எர்த் கண்ஸ்ட்ரக்ஷன்
அமுக்கத்துக்குள்ளாக்கப்பட்ட மண் கற்கள்(CSEB):
எளிய கை எந்திரம் கொண்டு கடுமையாக அழுத்தப்பட்ட ஈரமண்கலவையானது உலர்ந்தபின் செங்கல் வடிவத்திற்கு வரும். இக்கலவையில் பயன்படுத்தப்படுவது வளமில்லாத மண், மலிவான களிமண் மற்றும் சரளைகல். இவற்றுடன் சுண்ணாம்பு சேர்க்கும் பொருட்டு அவை பெறும் நிலைத்தன்மையால் அவற்றை இறுக்கி அறுத்த நிலைத்த கல் என்றழைக்கபடுகிறது. சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் மேன்மேலும் வலுகூடுகிறது, நிலைப்புத்தன்மை பெறுகிறது. மிக முக்கியமாக நீர்ப்புகாத தன்மை பெற்று நீடித்து இருக்கும். இவற்றைக் காயவைக்க மிகக்குறைந்த நேரமே தேவைப்படுகிறது. கட்டுமானம் எழுப்பும் இடத்தில் கிடைக்கும் மண் வைத்தே கட்டுவது செலவைச் சிக்கனப்படுத்தும், திறனான தற்சார்புக்கு வழிவகுக்கும்.
- பல கற்கள் கொண்டு சுவர் எழுப்பும் முறை
- சுமைதாங்கிச் சுவர்
- குறைவான நீர்ப்பயன்பாடு
இறுக்கி அறுத்த நிலைத்த கல் கட்டிடப் புகைப்படத்தொகுப்பு: சிஎஸ்எம்பி தண்ணீர்த் தொட்டி
காணொளி : விரைவில் வருகிறது
கட்டுரை படிக்க : சிஎஸ்எம்பி மற்றும் மண்சுவர் 2 மாடிவீடு, கேரளா
தமிழாக்கம்: இ.குகப்பிரியா & து.கருப்பசாமிபாண்டி
ஆங்கிலத்தில் எழுதியவர்: ஷாலினி நாடார்
இக்கட்டுரை இயற்கைக் கட்டுமான நூல்கள் தொடரின் ஒன்று