ஒருவரின் வேலியை வைத்து அவரின் மனதைப் புரிந்து கொள்ளலாம். இக்காலங்களில், மிகுந்த செலவில் வேலிகள் அமைத்து, செடிகளும், பறவைகளும் வாழும் விலைமதிப்பான இடத்தை இழக்கிறோம். வேலிகள் அமைக்க வெவ்வேறு பொருட்களையும்,முறைகளையும் நம் கிராமங்களை ஒரு முறை சுற்றினால் புரிந்து கொள்ளலாம். தலைமுறைகள் தாண்டி வாழும் இவ்வியற்கை வேலிகள், தனிப்பட்ட வரவேற்கும் பண்புடையது. பெரும் சுவர்கள் எழுப்பி ஆட்களை வெளியில் நிறுத்தாமல், விலங்குகளிடமிருந்து மட்டும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமையும். வேலிகளில் பயன்படுத்திய பொருட்களை வைத்தே அந்த கிராமத்திலுள்ள வளங்களை நாம் அறியலாம்.
துருப்பிடிக்காத, கெட்டுப்போகாத வேலிகளைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அவை சில உயிரினங்களைக் கொண்ட சிறிய உயிர்க்கோள அமைப்பாகச் செயல்படுகிறது.. வளர்ந்து கொண்டிருக்கும் உயிருள்ளச் செடி மற்றும் கொடிகளைக் கொண்ட வேலியை நாம் உயிர் வேலி என்று குறிப்பிடுவோம். காய்ந்த இயற்கை பொருட்களான மூங்கில், தண்டுகள், ஓலை பொருட்களான பனை, தேங்காய் மற்றும் பலவற்றால் அமைக்கப்படும் வேலிகளை இயற்கை வேலிகள் என குறிப்பிடுவோம். இயற்கை மற்றும் உயிர் வேலிகள் பல எளிய முறையில் செய்யக்கூடும்.
பல தாவர வகைகள் – உயிருள்ள அல்லது காய்ந்த நிலையில் வேலிகளுக்கு உபயோகமாகின்றன. இவை விலங்குகள் மேய்வதிலிருந்தும், வெளியாட்கள் உள்ளே நுழைவதில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. இவை விலை குறைவானதாகவும்,பார்வைக்கு அழகாகவும், காற்றுத்தடுப்பானாகவும் இருக்கிறது. பல காரணங்களைக் கருத்தில் வைத்து, தாவர வகைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மாடுகளும், ஆடுகளும் தீண்டாத செடிகளை வேலிகளில் வைப்பது வழக்கம். மேலும், தண்ணீர் பாதுகாப்பிற்கும், மண் அரிப்பை தடுப்பதற்கும் வேலிகள் முக்கிய பங்களிக்கின்றன. வேலிகள் தண்ணீர் ஆவியாவதை தடுக்கிறது, நுண் பருவநிலையை(Microclimate) ஏற்படுத்துகிறது.
அருகில் கிடைக்கும் பொருட்களை வைத்து,இயற்கை வேலிகள் அமைப்பது மிகவும் எளிது. தணலில் இயற்கை வேலியை, இயற்கைக் கட்டுமானம் அமைக்கும் போது மூங்கில் அறுவடை செய்யும் போது கிடைத்த கிளைகளை வைத்தே செய்து முடித்தோம்.
முட்களைக் கொண்ட தண்டுகளுடைய கிளுவை மரங்களை எல்லைப்பகுதியில் நெருக்கமாக நட்டி, விலங்குகள் புகாதவாறு தடுப்பு அமைத்திட முடியும். பிளந்த மூங்கில்கள், மஞ்சம்புல் , உன்னிச்செடி, ஓலை பொருட்களான தேங்காய்,பனை ஆகியவற்றைப் பின்னித் தட்டிகள் செய்து வேலிகள் அமைப்பர்.. இவையெல்லாம் “படல்” என அழைக்கப்படும். மூங்கில் தட்டிகளைப் பின்னி வேலி அமைத்து, பிறகு அதில் பசுஞ்சாணம் மெழுகப்படும். பல இடங்களில், சிறிய குச்சிகள் கொண்டும், பனை மட்டைகளை ஒட்டி வைத்தும் வேலிகள் அமைப்பர். இன்னும் சில இடங்களில், வாழை இலைகள் கொண்டு சுவாரசியமாக வேலிகள் அமைத்துள்ளனர்.
உயிர் வேலிகள் வளர்ப்பது எளிது, பொறுமை மட்டுமே தேவை. வரம்பில்லாமல் உணவு, மருந்து மற்றும் தீவனம் வழங்கும் மூலம் தான் உயிர்வேலி. திருவண்ணாமலையில் குருசாமி அய்யா எந்த செலவுமின்றி ஒரு வருடத்திலே உருவாக்கிய உயிர் வேலியைக் காணலாம். மிகக்குறைந்த அளவிலான மழைப்பொழிவிலே இது வளர்ச்சியடைந்து வேலியாக மாறியது. இங்கே உள்ள செடிகள் ஓணான்தட்டை(நீர்ப்பூவரசு அல்லது நெய்வேலிக் காட்டாமணக்கு) மற்றும் நித்தியக்கல்யாணி ஆகும். தணலுடைய சமூக விதை வங்கி கட்டுமானத் திட்டத்தில், பிரதிப் குமார் தனது நிலத்தில் அரவக்குறிச்சியைத் தாயகமாகக் கொண்ட கிளுவை மரம் மற்றும் காட்டாமணக்கை வேலியாக நட்டியுள்ளார். காட்டாமணக்கு பூச்சிகளைக் கவர்ந்து மற்ற பயிர்களைப் பாதுக்காக்க வல்லது.
சந்தையில் கிடைக்கும் நிறுவனப்பொருட்களைவிட உயிர்வேலிக்கு ஆயுள் அதிகம். வேலியின் ஆயுள் வேலியில் நட்டும் மரம் செடிகளைப் பொறுத்து மாறுபடும். உயிர்வேலிக்கு வளர்க்கும் மரங்களை தகுந்த பருவத்தில் அதன் கிளைகளை வெட்டி வேறு இடத்திலும் நட்டி வேலி உருவாக்கலாம். கிளைகளைக் கழித்தபின் அம்மரம் திரும்ப துளிர்த்து வளர்ந்து விடும்.
பொதுவாக கிளுவை, கள்ளி போன்ற முள் கொண்ட செடிகள் வேலியாக அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். ஆடாதோடை, செம்பருத்தி போன்ற ஆடு,மாடு தீண்டாத செடிகள் அடர்ந்து வளரும். இவற்றை மற்றவர் பார்வையை தடுக்கும்படி வேலியாக அமைக்கலாம். அடர்ந்த படரும் கொடிகளான பூசணி, வேலியில் படரவிட மிகவும் சிறந்த தாவரம். வெட்டிவேர், கற்றாழை போன்ற மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் கூட வேலிகளில் நடலாம்.. வெட்டிவேர் போன்ற செடிகள் மாசுபட்ட சூழலில் வளர்ந்து, நிலத்திலுள்ள நஞ்சுகளை சுத்திகரிக்கும். இந்த அடர்ந்த தாவரம் சிறிய விலங்குகளோ, பாம்புகளோ கூட உள்நுழைய அனுமதிக்காது.
மண்ணின் வளத்தை அதிகரிக்குமாறு, அகத்தி, கிளிரிசிடியா போன்ற மரங்களை வேலியில் வைப்பது நல்லது. அவை மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவன. மேலும் தீவனமாகவும் பயன்படுகிறது. இத்தாவரங்கள் வீசும் காற்றைக் கட்டுபடுத்துவதால் நிலத்திலுள்ள ஈரத்தன்மை வெளியேறாது தடுக்கவும் செய்கிறது. காட்டாமணக்கு வேலியில் நட்டினால், பூச்சிகளை தன்வயம் ஈர்த்து, மற்ற செடிகளுக்குப் பூச்சி வராமல் தடுக்கும்.
களாக்காய் என அழைக்கப்படும் குத்துச்செடியின் காய் லாபகரமானது. இதன் வேலி பல பறவைகள், விலங்குகளை ஈர்த்து, தனிச் சுற்றுச்சூழலை உருவாக்கும். இரும்புக்கம்பி வேலிகளை விட அதிகம் நெருக்கம் வாய்ந்தது. அதைத்தாண்டி ஆட்களும் விலங்களும் எளிதில் நுழையமுடியாது.
சவுண்டல், மலைவேம்பு, சவுக்கு போன்ற உயரமாக வளரக்கூடிய மரங்கள் காற்றுத்தடுப்பானாக செயல்படுவதால் மண்ணிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுக்கும். நொச்சி, கழற்சிக்காய், மருதாணி போன்ற செடிகளும் பிரண்டை, முடக்கத்தான் போன்ற கொடிகளும் மருத்துவ குணம்வாய்ந்தவை. பனை, கொடுக்காப்புளி போன்ற மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.
இவ்வாறு 67 தாவர வகைகள் வேலி அமைப்பிற்கானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு உயிர் வேலி அழிந்தால், அந்த இடத்தில் எதிர்மறையாக பல்வேறு விளைவுகள் வரும். சுற்றுசூழலிற்கு இணக்கமான வேலிகள் அமைப்பது நம் கையில்தான் உள்ளது.
மேற்கோள்–
2 – http://agricultureforeverybody.blogspot.com/2012/12/live-fence-bio-fence-natural-fence.html
3- https://www.vikatan.com/pasumaivikatan/2014-oct-25/yield/99577.html (தமிழில்)