(மீட்புத்தொடர்:தாப்பி & அரைஷ் சுண்ணாம்புப்பூச்சு, இராஜஸ்தான்)
தாப்பி சுண்ணாம்புப் பூச்சுமுறையை ஆய்வுசெய்ய பிஜு பாஸ்கர் இராஜஸ்தான் நெடுக பயணித்து, 70 – 80 வயது கடந்தும் தங்கள் வாழ்வில் பெரும் பங்கினை பாரம்பரிய கலையம்சங்களுக்காக அர்பணித்த கலைஞர்களைச் சந்தித்தார். அப்பயணத்தில் தான் சர்தார் சாகரின் பாரம்பரிய ஓவியக்கலைஞரான யூசஃபை சந்தித்தார், நகரத்தில் உள்ள ,ஹவேலி என்று சொல்லக்கொடிய மாளிகைகளில் அவரின் திறன்மிகு படைப்புகள் புகழ்பெற்றவை. ‘பிரக்ரிதிக் சித்திரகலா’வில் (பாரம்பரிய ஓவியங்கள்) தான் ஆற்றிய பங்குக்கு இராஜஸ்தான் அரசின் பாராட்டை பெற்றவர். இராஜஸ்தானில் பெரிதும் காணப்படும் அராஷ் பூச்சுடன் (கடா பூச்சு,) இயற்கை வண்ணங்களை பயன்படுத்துவதில் ஆசானாகத் திகழ்கிறார், மேலும் அதே நகரத்தில் இவரின் மகன்கள் செய்த ஹவேலி சுவரோவியங்களைக் கவனித்து வருகிறார். போதிய பொருள்களும், வேலையாட்களும், ஆதரவும் இல்லாத காரணத்தினால் இக்கலைவடிவம் அழியும் நிலையில் உள்ளது. அராஷ் மற்றும் தாப்பி பூச்சு வகைகளை மீட்டெடுக்கும் வாய்ப்பை உருவாக்கி சமகால கட்டிடக்கலையிலும் இயற்கை கட்டுமானங்களிலும் பயன்படுத்த தணல் முன்னெடுத்துள்ளது.
பலவிதமான இயற்கை வண்ணங்களைச் சுண்ணாம்புப் பூச்சுகளில் பயன்படுத்திய அவரின் அனுபவத்தைப் பகிரும் ஒரு உரையாடல் இங்கே.
1. நீங்கள் எப்போது உங்களின் வேலையைத் தொடங்கினீர்கள்?
பாரம்பரிய சுவரோவியர்களின் குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஒருவரின் மாளிகைகளில் வண்ணங்கள் அல்லது பெயிண்ட் அடிக்க விரும்பினால், சுண்ணாம்புப் பூச்சு செய்யப்பட்ட சுவரின் மீது சுவரோவியம் வரைய, சுவர் ஓவியர்களுக்கு அவ்வேலையை வழங்குவர். 1962ல் கொத்தனாராக என் தொழில் தொடங்கினேன். அதற்கு முன்னே என் குடும்பத்தின் மூத்த ஓவியக்கலைஞர்களிடம் உதவியாளராக நாங்கள் இருந்தோம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1965ல் நான் சுவர்களிலும் இரட்டுகளிலும்(Canvas) ஓவியம் வரையத் தொடங்கினேன்.
2. உங்களின் ஆரம்பகாலகட்டத்தில் என்ன வகையான வண்ணங்கள் பயன்படுத்தினீர்கள்?
மண் மற்றும் கல் , இவை இரண்டுதான் வண்ணங்களுக்கான முதன்மை மூலகங்கள்.
3. நீங்கள் பார்க்கும் வேலையில் வெவ்வேறு வண்ணங்களைப் பற்றிய புரிதல் என்ன?
என்னுடைய சிறுவயதில், என் அப்பாவும் தாத்தாவும் கல்லில் இருந்து வண்ணங்களை எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் தொழில் தொடங்கிய காலகட்டத்தில் சந்தையில் நிறுவனங்களின் வண்ணங்கள் கிடைத்தன, மக்களும் அதையே பயன்படுத்தத் தொடங்கினர். இராஜஸ்தானின் சர்தார் சாகரில் உள்ளூர் சந்தையில் அதை ‘பெர்சியன் வண்ணம்’ என்று சொல்லுவார்கள்.. என்னுடைய ஐம்பது ஆண்டுகள் கால அனுபவத்தில் பல இயற்கை வண்ணங்களையும், நிறுவனங்களின் வண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளேன். கிடைக்கும் வேலை வாய்ப்பை பொறுத்து, இரட்டுகளில் நீர்வண்ண ஓவியங்களும்(Water colours) வரைந்தேன், மாளிகைகளில் சுவரோவியனாகவும் வேலை செய்தேன்.
4. “கல்” வண்ணம் என்றால் என்ன?
அவை கற்களில் இருந்து எடுக்கப்படும் வண்ணங்களே. (வகை: கனிம சாயம்). கற்களை சூளையில் எரித்து அதை நொறுக்கி சிறிது நீரிட்டு அரைத்து எடுக்கப்படும் வண்ணம் ஒரு வழி. மற்றோரு வழியில் சூளையில் எரிக்காமல், நொறுக்கி நீரிட்டு அரைப்பதை மட்டும் செய்வது. சிறிது கால அவகாசம் எடுத்து தொடர்ந்து செய்தால்தான் போதுமான அளவு வண்ணங்களை எடுக்கமுடியும். வண்ணக்கற்களை தீயில் இட்டு தயாரிக்கும் வண்ணம், ‘மண்ணிலிருந்து‘ கிடைக்கும் வண்ணப்பொடியை விட எடைக்குறைவாகவும் மங்கலாகவும் இருக்கும்.
5. சர்தார் சாகரில் சூளை மூலம் வண்ணம் எடுக்க தெரிந்த நபர்களை உங்களுக்குத் தெரியுமா?
இப்போதைக்கு யாருமில்லை. எங்களுடைய அப்பா காலங்களில் செய்துகொண்டு இருந்தார்கள். தேவை குறைந்ததும் இதைச் செய்துவந்த மக்கள் எல்லாம் வாழ்கைநடத்த வேறு வேலைகளுக்கு மாறிவிட்டார்கள்.
6) கல் வண்ணங்களின் தற்போதைய நிலை என்ன?
தேவை மிகக்குறைவாக இருப்பதால், அதன் மூலப்பொருட்களை எடுத்துவருவது மிகக் கடினமாக உள்ளது. பழைய கடைக்காரர்கள் சிலருக்கு இதைப்பற்றித் தெரியும். ஆனால் அங்கே கிடைப்பது நிச்சயமற்றதாக உள்ளது. ‘சீனி மிட்டி‘ என அழைக்கப்படும் பீங்கான் தயாரிப்பில் அதற்கான கலைஞர்கள் அதை நெருப்பில் சுடுவதற்கு முன்பு அதன் மேற்பரப்பில் இத்தகைய கல் வண்ணங்களைப் பூசுவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. தற்பொழுது டிஸ்டெம்பர் மற்றும் நிறுவனங்கள் தயாரிக்கும் வண்ணங்களில் தான் நான் வேலை செய்கிறேன்.
7. “மிட்டி” வண்ணம் என்றால் என்ன?
மண்ணில் இருந்து பெறப்படுவதே “மிட்டி” வண்ணமாகும். இதில் சிகப்பு, மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்கள் கிடைக்கும். “ஜெர்மனி” நிறுவனம் ஒன்று இதைப் பின்னாளில் “ஜெர்மன் பீலா (மஞ்சள்), ஜெர்மன் லால் (சிவப்பு) போன்ற சில வகைகளை உற்பத்தி செய்தது. “ஜெர்மனி” வண்ணங்கள் மற்றும் “சிமிண்ட்” வைத்து செய்த இரசாயன வண்ணங்கள் இரண்டிற்கும் வேறுபாடு அறியாமல் கடைக்காரர்கள் குழம்புவதால், சரியான “ஜெர்மன்” வண்ணம் வாங்குவது கடினம் தான். இவை நிறமூட்டிகளாகக் கலவையில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கையான மூலத்தில் இருந்து பெறப்படுபவை என்று என்னால் உறுதியாக கூறமுடியாது. ஆனால் இரண்டிற்கும் நடுவே உள்ள வேறுபட்டை எப்போதும் நீங்கள் எடையில் கவனிக்கலாம். “அடர்த்தி குறைவானது மிட்டி வண்ணம், அதாவது இரண்டையும் ஒரே அளவு (எடையில்) வாங்கினால், மிட்டி வண்ணங்கள் வைத்து (சிமிண்ட் வண்ணத்தை விட) அதிகமான பரப்புக்கு வண்ணமிடலாம். ஆனால் நீல நிறத்திற்கு மிட்டி இல்லாமல் நீல் (கொளுஞ்சி) பயன்படுத்தப்படுகிறது.
8. மிட்டி & ஜெர்மனி வண்ணங்களின் நம்பகத்தன்மையை எவ்வாறு தீர்மானிப்பது?
கல் வண்ணங்களை விட அங்கீகரிக்கப்பட்ட “மிட்டி மற்றும் ஜெர்மனி” வண்ணங்களுக்கு எடை அதிகம், மேலும் கலப்படம் செய்யும் பொது மேன்மேலும் எடை கூடும் என்றாலும், வண்ணம் தீட்டும் பரப்பளவு கணிசமாக இதில் குறைந்துவிடும்.
9. தாவரங்களில் இருந்து பெறப்படும் வண்ணங்களில் நீங்கள் வேலை செய்ததுண்டா?
ஆம், கிஞ்சுகம் பூவிலிருந்து (flame of forest) நான் வண்ணம் எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். உலர்த்தப்பட்டு சந்தையில் எளிமையாக கிடைக்கின்றன. ஒரு முழு இரவு இதை நீரில் ஊறவிட்டு, அதன் சாற்றை வடிகட்டிச் சுண்ணாம்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு அடர்த்தியாகச் சாற்றைப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவு அடர் வண்ணம் வரும்.
மரப்பலகையை மெருகூட்டப் பயன்படும் “அரக்கு பிசின்” (seedlac or lac) மற்றொரு மூலப்பொருளாகும். அதை நன்கு அரைத்து, ஒரு முழு இரவு சுண்ணாம்புடன் ஊறவைக்கவும், இவ்வண்ணத்தை பயன்படுத்துமுன் வடிகட்டவும். இவ்வண்ணங்களை எல்லாம் நான் பயன்படுத்தி பல காலம் ஆகிவிட்டது.
10. சுண்ணாம்புடன் வண்ணங்களை சேர்க்கும் முறையைத் தவிர வேறு எவ்வாறு எல்லாம் வண்ணங்களை பயன்படுத்துவீர்கள்?
பழங்காலங்களில், ஒரு ஓவியர் மண் கட்டிகளில் இருந்து வண்ணத்தை எடுப்பார். “மண்” நன்கு அரைக்கப்பட்டு பிறகு வடிகட்டப்படும். பிறகு உலர் வண்ணமானது இந்த வடிகட்டப்பட்ட மண்ணுடன் சேர்க்கப்படுகின்றது. மென்மை கூட்ட இக்கலவையில் பால் சேர்க்கப்படுகின்றது. மிகையான பசைத்தன்மை தேவைப்படுமாயின் இயற்கை பிசின்/பசையை இதனுடன் சேர்க்கலாம். இதன்பின் அராஷ் அல்லது கடா பூச்சுவின் மேல் பயன்படுத்தப்படுகிறது. (மார்பில் பொடி வைத்து செய்யப்படும் சுண்ணாம்புப்பூச்சு)
11. பால் ஏன் சேர்க்கப்படுகின்றது?
உலர்ந்த வண்ணப்பொடிகளுடன் பால் சேர்ப்போம். பின்னர், வேலை செய்வதற்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்த்து பயன்படுத்தலாம். இவ்வாறு பூசும் வண்ணங்களின் மீது ஈரத்துணி வைத்து தேய்த்தாலும் அது சிதையாது. இத்தகைய வண்ணப்பூச்சு பல வருடம் ஆயுள்கொண்டது. ஷாலிமர் என்ற நிறுவனம் தயாரித்த வண்ணப்பொடிகளை பயன்படுத்தினேன். நெகிழி (பிளாஸ்டிக்) வண்ணங்களின் வருகைக்குப்பின் ஷாலிமர் நிறுவனம் வண்ணங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டது.
12. பழைய மற்றும் புதிய வண்ணங்களுக்கு இடைய உள்ள வேறுபாடுகள் என்ன?
இக்காலத்தில் வரும் நெகிழி (பிளாஸ்டிக்) வண்ணங்கள், இயற்கை வண்ணங்களைப்போல அல்லாமல் எளிதில் கறைபடிந்து, குறுகியகாலத்திலேயே அதன் பொழிவை இழக்கத்தொடங்கிடும். ஒப்பிட்டுப்பார்த்தால் நெகிழி வண்ணங்கள் விலையும் சற்று அதிகமானதே. சரியான தொழில்நுட்பத்துடன் அணுகினால், இயற்கையில் இருந்து பெறப்படும் வண்ணங்கள் மிகச் சிக்கனமானது, பொழிவுடன் நீடித்து இருக்கும்
13. உங்களுடைய பழைய வேலைகளை நாங்கள் பார்க்கலாமா?
சர்தார்சாகரில் உள்ள மாளிகைகளில் நான் நிறைய வேலை செய்துள்ளேன். ஆனால், அதன் உரிமையாளர்கள் அங்கு வாழ்வது கிடையாது. அதனால் அவை சரியான பாராமரிப்புகூட இல்லாமல் மூடிக்கிடக்கின்றன. என் முன்னோர்கள் செய்துள்ள சில வேலைகளை நீங்கள் வெளியே பார்க்கலாம். வெளியில் இருக்கும் சுவர் வேலைப்பாடுகள் யாவும் மோசமான நிலையில் உள்ளன, ஒன்று சுவரோட்டி வைத்து மறைத்தோ அல்லது நவீன வண்ணங்கள் திரும்ப அடிக்கப்பட்டோ இருக்கும். இதன் மதிப்பு மக்களுக்கு தெரியவில்லை, எனவே அவற்றை பாதுகாப்பதுமில்லை
14. உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்தால், பழைய பாணியில் வேலை செய்ய ஆர்வம் உள்ளதா?
எனக்கு வயதாகிவிட்டதால் அது மிகவும் கடினம் என நினைக்கிறேன், ஆனால் என்னிடம் இருந்து அத்தகைய மரபு நுட்பங்களை, இப்போது அதே துறையில் பணியாற்றும் என் பிள்ளைகளே கற்று வேலைசெய்யலாம்.