இசை

இயற்கைக் கட்டுமானத்துக்கு உந்தும் இசைக்காணொளிகள்

இயற்கைக் கட்டுமான இசை என்பது இயற்கையான கட்டுமானப் பொருட்களால் எழுப்பப்படும் ஒலி மற்றும் அமைதி நிலை. அதன் ஈர்ப்பால் நம்முடைய ஐம்புலன்களும் உள்ளீர்க்கப்பட்டு நாம் அனைவரும் ஒரு புள்ளியில் சங்கமிப்போம். பின்னர் அதன் கருத்து அதாவது கட்டுமானம் இயற்கையான முறையில் செய்வதற்கான கொள்கைகளைக் கேட்டு நடைமுறைப்படுத்தவும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் பூமியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மண்துகளும் மாற்றம் அடைந்து அல்லது எல்லைமீறிய உருமாற்றம் அடைந்து பல்வேறு பொருட்களாகவும் உயிரினங்களாகவும் நாம் அறியாதவனவாகவும் வலம் வருகின்றன. அந்த மண்துகள்களால் ஆனவர்கள் தான் நம் முன்னோர்கள், பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள். ஆனால் மண் தான் அனைவரையும் அனைத்தையும் ஒரு தாய் தன் குழந்தையை அரவணைப்பது போல இணைக்கிறது.

கட்டிடக்கலை மற்றும் இசை

இசைக்கலையும் கட்டிடக் கலையும் நெருங்கிய தொடர்பு கொண்டது தான்‌. ஒரு இசை எப்படியெல்லாம் நமது உணர்ச்சிகளைத்தூண்டவல்லது. நம்மை மெய்மறக்கச் செய்யும், சமநிலைப்படுத்தும் மற்றும் கிளர்ச்சியூட்டும் வகையில் தூய்மையான இசை அமைக்கப்படலாம்‌. அது ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்‌. கட்டிடக்கலையின் அடிப்படைக் கொள்கைகளான சந்தம்(ரிதம்), நல்லிணக்கம்(hormony), விகிதம்(proportion), இழைநயம்(texture), கலைநய வெளிப்பாடு(articulation) ஆகியன வலியுறுத்துவது இசையில் உள்ளவனற்றை ஒத்தது. கட்டிடக்கலைக்கான மூலம் எதுவெனக்கேட்டால் இசையைக் குறிப்பிட முடியும். இந்தக் கூற்றைத்திருப்பி இசையும் கட்டிடக்கலையின் சாரத்தை உள்ளடக்கியது என்றும் கூற இயலும்.

பழங்குடி மக்களும் நாட்டுப்புற மக்களும் பல வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டவர்கள். அந்த நிகழ்வுகளில் கதைகள் சொல்வது, கூட்டாகப் பாட்டுப்பாடுவது, பக்திப் பாடல்கள் இசைப்பது, வாழ்த்துப்பாட்டு, தாலாட்டு, காதல்பாட்டு, கதைப்பாடல் மற்றும் நகைச்சுவைப்பாட்டு எனப் பலவகைகளில் இசையை வெளிப்படுத்தியதைத் தெரிந்து கொள்ளலாம். அவையெல்லாம் மற்ற மனிதர்கள்மீது அன்பு செலுத்தும் வகையிலும் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கும். அறுவடைநாள், மணநாள், விதைப்பு நாள் மற்றும் பல விழாக்காலங்களில் மண், மரம் மற்றும் மற்ற இயற்கைப்பொருட்களால் ஆன இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைத்துப் பாடி ஆடிக் கொண்டாடுவதுண்டு. சந்தத்துடன் சுருக்கமாக இசைக்கப்படும் அப்பாடல்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைத்து விருந்தளிக்கும்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிருந்த இந்த இசைக்கலாச்சாரம் இன்று அறுந்துவிட்டது என்றே கூறலாம். கட்டிடக்கலை மற்றும் இசைக்கு இடைப்பட்ட தொடர்பை மீட்டுருவாக்கம் செய்யும் நேரம் இது‌. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வாழ்வியலின்‌ குறிப்பிட்டக் கருத்துக்களை கூற இயற்கைக் கட்டுமான இசை எனும் தொடரைத் தணல் குழு முன்னெடுத்துள்ளது.

இக்கட்டுரை எழுதியது: ஆர்க்கிடெக்ட். ஜெயகிருஷ்ணன் ரஞ்சித்
கீழ்க்கண்ட காணொளியில் இயற்கைக் கட்டுமான இசை எப்படி உருவெடுத்தது எனக்காணலாம்.

Play Video

தொடர்பான இசை விமர்சனங்கள் & காணொளிகள்

விரைவில் வரும்

Scroll to Top