பிஜு பாஸ்கர் பற்றி
பிஜு பாஸ்கர் பற்றி
“தற்சார்பும் வளங்குன்றா வளர்ச்சியும் கொண்ட கிராமங்கள் அதிகம் உருவாக்குவோம்” -பிஜு பாஸ்கர்
பிறப்பு: ஆகஸ்ட் 23, 1974, கேரளம்
தந்தை: Dr.M.பாஸ்கரன்
தாய்: நளினி பாஸ்கர்
அண்ணன்: பிணு பாஸ்கர்-
மனைவி: சிந்து பாஸ்கர்
மகன்கள்: ஆதியா விருக்சா & போதி விருக்சா
கேரளாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பின் கட்டிடக்கலையில் படிக்கும் போது தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். கஜுராஹோவில் 1.5 வருடம் பழங்குடிச் சிற்பி ஒருவரிடம் முறையாகச் செயல்வழியில் கல்வி பெற்றார். பிஜு பாஸ்கர் தன்னுடைய பயணத்தில் சந்தித்த சிற்பி ஆசிரியர்கள், சுவரோவியர்கள், ஆன்மீக குருக்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் ஆகியோர்கள் மூலம் கட்டிடக்கலையில் புதிய அறிவைப்பெற்றார். 2009ல் இந்திய கட்டிடக்கலை கழகத்தால் அவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் திருவண்ணாமலை மலையடிவாரக் கிராமத்தில் இடம்பெயர்ந்தார். 2011 ல் தணல் நேட்சுரல் ஹோம்ஸ் எனும் அமைப்பைத் தொடங்கி சுயகற்றல் முறையில் கற்று சில இயற்கைக் கட்டிடங்களை எழுப்பி உள்ளார்ந்த பயணம் மேற்கொண்டு வருகிறார். பிறருக்கும் பயிற்சிப்பட்டறைகள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் காணொளிகள் வழியாகக் கற்றுக்கொடுத்து இயற்கை கட்டுமானம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 2016ல் வீவ்விங் வால் என்ற ஆங்கிலப் புத்தகம் அவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள தணல் வளாகத்தில் இருந்து கொண்டு இந்தியாவின் பாரம்பரிய முறைகளை மீட்டுருவாக்கம் செய்வதில் அவரது பணி தொடர்கிறது.
- 1993-1998 கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் (MIT) கட்டிடக்கலை பயில்தல். (அச்சமயத்தில் அவர் பட்டப்படிப்பை முடிக்கவில்லை)
- 1999 – 2000 மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் பழங்குடி மரச்சிற்பியான ஆசான் இராஜேந்திடம் செயல்வழியாகக் கல்வி பெறுதல்
- 2000 – 2002 குஜராத்தில் உள்ள பரோடாவில் எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் சிற்பியான ஆசான். வல்சன் கூர்ம கொல்லேரி(Valsan Koorma Kolleri)யிடம் பணி செய்தல்
- 2002 கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற இந்திய கட்டிடக்கலை கழகத்தில்(IIA) இணைதல்
- 2003 – 2009 பின்னர் கொச்சி, சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றினார்.
- 2009 இந்தியக் கட்டிடக்கலை கழகம் கட்டிடக்கலைக்கான இளங்கலைப் பட்டத்தை அவருக்கு வழங்கியது. பின்னர் அவர் தன்னுடைய குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு இடம்பெயர்ந்து அருணாச்சலா மலையடிவாரத்தில் தங்கி சிறுதுளியும் சிமெண்ட் இல்லாமல் மண்கட்டிடக்கலையில் ஆய்வுசெய்து அதை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் தொடக்கம்
- 2011 இயற்கைக் கட்டுமானம் பற்றி விழிப்புணர்வு செய்ய தணல் இயற்கை வீடுகள் (தணல் நேட்சுரல் ஹோம்ஸ்) எனும் அமைப்பைத் தோற்றுவித்தல்
- 2016 இயற்கைக் கட்டுமானம் பற்றிய வீவ்விங் வால்(weaving wall)என்ற இ-நூல் அவரால் எழுதப்பட்டு வெளியீடு
- 2016 – 2019 இராஜஸ்தானிய மரபுக் கட்டுமான முறைகள் பற்றிய ஆய்வுகள்
- 2017 ‘அடோபி கேர்ல்’ என்ற இயற்கைக்கட்டுமான இசை வெளியீடு. அதைத் தொடர்ந்து இராஜஸ்தானை மையப்படுத்தி ‘கோஜ்’ என்ற இசைக் காணொளி வெளியீடு. 2017 கட்டிடக்கலைச் செயற்பாட்டில் கொடுக்கல்- வாங்கல் அல்லது பண்டமாற்று முறைத் தொடக்கம்
- 2018 – 2019 இராஜஸ்தானிய மரபுக்கட்டுமான முறைகளுக்கான மீட்டுருவாக்கப் பயிற்சிவகுப்புகளை ஒருங்கிணைத்து இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் நடத்தியுள்ளார்.
- 2020 தணலில் பயிற்சி பெற்று இயற்கை முறையில் வீடு கட்டிய கலைஞர்கள், டிசைனர்கள், கட்டிடப் பொறியாளர், கட்டிடக்கலைஞர், கொத்தனார் மற்றும் சாமானியர்கள் ஆகியோர்களைப் பற்றிய ஆவணத்தொகுப்புகள் ‘நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக் கட்டிடக்கலைக்கலைஞர்கள்’ என்ற பிரிவில் ஆரம்பித்திருக்கிறார்.
- 2021 இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைன் டுடோரியல் தொடர்மூலம் கற்பதற்கென இந்தியாவின் முதல் செயலி வெளியீடு
தற்சமயம் பேக் ஹோம்(வீடு திரும்புதல்) எனும் டுடோரியல் வீடியோ தொடர் மற்றும் புத்தகம் (காணொளி வழிகாட்டி) தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாக்கி வருகிறார். அந்தத்தொடரின் மூலம் பாரம்பரியக் கட்டுமானங்கள் பற்றியும் அவற்றை மீட்டுத் திறம்படச் செய்வது பற்றியும் கற்றுக்கொள்ளலாம்.