மாடுகளும் இயற்கைக் கட்டுமானமும்

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on telegram

மாடுகளும் இயற்கைக் கட்டுமானமும்

பழந்தமிழில் “மாடு” என்ற சொல் செல்வத்தையே குறிக்கும். எதிரியிடம் பசுக்களைப் பறிகொடுப்பது மன்னனுக்குப் பெருந்தோல்வியாகக் கருதப்பட்டது. ஆநிரை கவர்தலும் ஆநிரை மீட்டலும் என்பது போர் நடைமுறையாக இருந்தது. மாடுகளைத் தமிழர்கள் வேளாண் தொழிலுக்கு மட்டும் பயன்படுத்தவில்லை. அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிய மாடு, கட்டுமானங்களிலும் பெரிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தகவல்களை நமது இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவை இப்பொழுதும் இயற்கை வழி கட்டுமானங்களிற்குப் பொருந்தும். பூமி பூஜையின் பொழுது பஞ்சகாவ்யம் பயன்படுத்துவதில் தொடங்கி, அடித்தளம்,,சுவர்கள்,பூச்சு என கூரை வரை பல்வேறு பயன்பாட்டிற்கு நாம் மாடுகளை சார்ந்துள்ளோம்.

பஞ்சகாவ்யம் என்பது மாட்டின் வாயிலாக கிட்டும் ஐந்து பொருட்களாலானது. பால்,சாணம்,கோமியம்,நெய் ,தயிர் கொண்டு இதனைத் தயாரிப்பர். மேலும், வெள்ளம்,இளநீர்,வாழைப்பழங்களும் சேர்த்துக்கொள்ளப் படும். இவற்றை முறையாகக் கலந்து, மூடி, நிழலில் அமர்த்தி, அவ்வப்போதுக் கலக்கிவிட்டு 27 நாட்கள் வைத்திருப்பர். பிறகு அதனை தேவைக்கேற்ப நீர்த்துப் போகச் செய்து மருந்துகள் உட்பட பல்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்துவர்.

பஞ்சகாவியம் கட்டுமானங்களை வளமாக்கும் ஆற்றல் பெற்றது. இதை தினசரி வாழ்க்கையிலும், கட்டுமானங்களிலும் பயன்படுத்தும் முறைகளை தணலில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். மாடுகளை நாம் எவ்வாறு சார்ந்துள்ளோம் என்பதையும், அவற்றின் கட்டுமான பயன்பாட்டையும் விரிவாக காண்போம்.

அடித்தளம்

அதிகாலையில் மாடு பெய்யும் முதல் கோமியம் சிறந்த ஆற்றலுடையது. அதனை அடித்தளம் அமைப்பதற்கான தோண்டிய குழிகளில் கற்கள் இடுவதற்கு முன் ஊற்றுவர். மாட்டைப் பராமரிக்கும் நபர், மாடு மூத்திரம் பெய்யும் பொழுது, அதை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கலாம். நம் நாட்டு மாட்டின் தினசரி நடவடிக்கைகளை உற்றுநோக்கி, அதற்கேற்ப கோமியம் சேகரிப்பது மிகவும் எளிமையானது. இதற்கு மாற்றாக, மாட்டுக் கொட்டகையில் சரிவான வடிகால்கள் அமைத்தும் மாட்டின் கோமியத்தைச் சேகரிக்கலாம்.

நமது நாட்டு மாடுகளுக்கும் மரபு வீடுகளுக்கும் உள்ள பிணைப்பு இன்றியமையாதது.

20-வது தேசிய கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின் படி 2012-ம் ஆண்டில் தமிழகத்தில் 24.59 லட்சம் என்ற அளவில் இருந்த உள்நாட்டு இன மாடுகள், 2018-ம் ஆண்டில் 18 லட்சம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இத்தகவலை தி இந்து நாளிதழில் வெளியான “தமிழக நாட்டுமாடுகள் அழிகிறதா?” என்ற கட்டுரையில் வாசிக்கலாம். திருப்பூரில் செயல்பட்டுவரும் சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேயன் சிவசேனாதிபதி, நம் தமிழக மாடுகளின் அழிவிற்கான காரணங்களை விளக்கியுள்ளார். நாட்டின மாடுகளின் சிறப்புகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு
மாட்டுச் சாணம் பல நன்மைகளைச் செய்யும் நுண்ணுயிர்களைக் கொண்டது. ஒரு கிராம் சாணத்தில் 3-5 கோடி நுண்ணுயிர்கள் இருக்கக்கூடும். இதைத்தான் நம் முன்னோர் முப்பத்தி முக்கோடித் தேவர்கள் பசுவின் வயிற்றில் இருப்பதாகக் கூறுவர். .ஆனால், சீமை மாட்டின் சாணத்தில் 50-70 லட்சம் நுண்ணுயிர்களே காணப்படும் , அதிலும் அனைத்தும் நல்லதன்று. ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்ப நம்மிடம் பல வகை இன மாடுகள் இருந்தன. மாட்டின் இரைப்பை அறிவியலை, நமது முன்னோர்கள் எந்த தொழில்நுட்பமும் இல்லாமல், சிந்தனை வைத்தே அறிந்தனர். நமது நாட்டு மாடுகளை அடையாளம் காண்வதற்கான ஒரு பதிவு

சுவர்கள்:

நமது நாட்டு மாடுகளின் பலம் அதிகம். காலங்காலமாக, மாடுகளின் உழைப்பைக் கட்டுமானத்திற்கு பயன்படுத்துவது நடைமுறை. அடித்தளம் கட்டத் தொடங்கி, சுவர் எழுப்பி, கூரையிட்டு, நிறைவமைவு வரை மாடுகளின் தயவு நமக்கு தேவைப்படுகிறது. எரிபொருள் விலை அதிகமாகும் இவ்வேளையில், மாட்டு வண்டிகள் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க. மாடுகளும் எருதுகளும் வழக்கமாக மண்கட்டிகளை மிதிக்கும் பணியில் ஈடுபடுவதைக் காணலாம். மண்ணை கலக்கவும், பதப்படுத்தி உபயோகிக்கவும் மாடுகள் உதவுகின்றன.

மாட்டின் கோமியம் நமது மரபில் தொன்றுதொட்டு பல காரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சுஸ்ருத சம்ஹிதா எனும் பண்டைய நூலின் படி கோமியத்தை பல்வேறு ஆயுர்வேத மருந்துகளுக்கும், உடல்நலிவு சிகிச்சைகளுக்கும் உபயோகித்தனர். சுவர்களுக்கும் கோமியத்தின் பயன்பாடு தேவைப்படுகிறது.கோமியத்தை கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் மண்,வைக்கோலினால் ஆன கலவையில் சேர்க்கப்படும்போது, அவற்றின் ஆற்றலும், வளமும் உயரும். கோமியத்தைச் சாந்துக் கலவைகளில் கலந்தால் வேலை செய்வதற்கேற்ற குலைவுத்தன்மையைப்பெறும்.

பழங்காலத்தில் கால்நடைகளை வைத்து பாரம்பரிய செக்கு முறையைக் கொண்டு கட்டுமானத்திற்குத் தேவையான கலவைகள் அரைக்கப்பட்டன. இம்முறையில் தயாரித்த கலவைகளின் ஒட்டும் திறனும் வலிமையும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவைகளை விட ஆகச்சிறந்தது.

மாடுகளின் ஆறாம் அறிவு :
மாடுகள் தம்மைச் சுற்றியுள்ள சூழலை அறிந்துகொள்ளும் அளவிற்கு மிகவும் தனித்தன்மையானவை. அவை மிகவும் அறிவார்ந்த விலங்கினம். நம் நாட்டு மாடுகள் தங்களை வளர்க்கும் குடும்பத்தினரிடம் மிகவும் அன்புகாட்டும். தன் உரிமையாளர் மீது விழ இருந்த மின்னலைக் கூட தன் மீது வாங்கிகொண்டு உயிர் துறந்த நிகழ்வுகள் இருக்கிறது.. மாடுகள் சாத்வீக ஆற்றலின் ஆதாரமாக திகழும் உயிரினம். மாடுகள் வாழும் சூழலில் நாம் ஒரு அங்கமாக இருப்பதே, நமது மனநிலையைச் செம்மையாக்கும்.

இயற்கை பூச்சுகள் :

பளபளப்பான இயற்கை பூச்சுகள், மாட்டின் பங்கின்றி புழக்கத்திற்கே வந்திருக்காது. “அரைஷ்” என அழைக்கப்படும், ராஜஸ்தானுக்குரிய பாரம்பரிய, மென்மையான மற்றும் கண்ணாடி போன்ற பூச்சு, தயிரை ஒரு அங்கமாகக் கொண்டு செய்யப்படுகிறது. நமது பாரம்பரிய செட்டிநாட்டு-முட்டை-சுண்ணாம்பு பூச்சுவிலும், தயிரில் இருந்து கிட்டும் தெள்நீர் கொண்டே வழுவழுப்பான பூச்சுகள் செய்யப்படுகின்றன.

மாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களில் மிகவும் வளமான செல்வமாக கருதப்படுவது பால். உலகெங்கும் மக்கள், பாலினால் ஆன பூச்சுக்களையும், வர்ணங்களையும் தயாரிக்கின்றனர். அதோடு, உறைந்த பாற்கட்டியில் இருந்து கிட்டும் பால் புரதத்தை பூச்சுகளில் சேர்ப்பர். அவற்றில் நிறைந்துள்ள புரதமானது சுண்ணாம்புடன் நன்கு பிணைந்து தரமான பூச்சை உருவாக்க உதவுகிறது.

பாரம்பரியமாக, மாட்டு சாணத்தை சுவற்றுக்கும் தளத்திற்கான பூச்சுகளில் பயன்படுத்துவர்.மாட்டு சாணத்தில் உள்ள “மிக்கோ பாக்டீரியம் வாக்கே” எனும் நுண்ணுயிர் மன அழுத்தத்தை தணிக்கும் அரிய பண்புடையது. எனவே அவற்றை மூச்சுக்காற்றாக உள்ளிழுக்கும் போது நமது உடலின் உள்ள நியூரோன்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், நமது மூளையில் “செரோடோனின் “, “நொற்பின்ப்ரைன்” போன்ற இயக்குநீர்கள்(ஹார்மோன்) தூண்டப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்கும் வித்துடுகிறது. அடிப்படையில், மகிழ்ச்சியூட்டி வெளிப்படுகிறது எனப் புரிந்துகொள்ளலாம்[1].

பூச்சுகளின் மேற்பரப்பு மென்மையாக அமைய, மாட்டு சாணத்தின் நார்கள் உதவுகின்றன. அவை தளத்தின் விரிசல்களை தடுத்து, பூச்சுவின் வெப்பம் தடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மாட்டு சாணத்திலுள்ள கோடான கோடி நுண்ணுயிர்கள் அதை கிருமிநாசினியாகப் பயன்படுத்த உதவுகிறது. பூச்சுவில் நார்தன்மைக்காக மாட்டின் முடியைக்கூடப் பூச்சுவிற்குப் பயன்படுத்தி விரிசல்களைத் தடுக்கலாம்.

மாட்டு சாணம் மட்டுமல்ல, கோமியமும் கிருமிநாசினியே. அது, சுவர்களிலும் தளத்திலும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் வளர்வதைத் தடுக்கும். மேலும் மண் தளங்களுக்கு நீர்த்தடுப்பு திறனைக் கொடுக்கும். ஒரு பங்கு கோமியத்திற்கு 10 மடங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் நீர்த்தால் பூஞ்சைக்கொல்லியாக சிறந்து விளங்கும்.

நம்முன்னோர், தளங்களில் நீர் கசிந்து உள்ளே செல்லாதவாறு தடுக்கும் அடைப்பானாக எருதின் இரத்தத்தை பயன்படுத்தினர். நம்முன்னோர், தளங்களில் நீர் கசிந்து உள்ளே செல்லாதவாறு தடுக்கும் அடைப்பானாக எருதின் இரத்தத்தை பயன்படுத்தினர்.

மேற்கூரை மற்றும் மூங்கில் பதப்படுத்துதல்:

மூங்கில்கள் விலை குறைவாகவும் பரவலாகவும் கிடைப்பதால், மேற்கூரையில் முக்கிய உறுப்புகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பயன்பாட்டிற்கு முன்பு மூங்கில்களை பதப்படுத்துவது மிகவும் அவசியம். நேபாளத்தின் “அபரி ” எனும் அமைப்பு, கோமியத்தை பயன்படுத்தி மூங்கில்களை பதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மூங்கிலினுள் கோமியத்தை அழுத்தத்துடன் செலுத்தி, மூங்கிலுள் உள்ள சோற்றுப்போருளை நீக்குகிறார்கள் . தேவப்ரியன் கஞ்சன்கட் என்கிற கேரளாவைச் சேர்ந்தவர், கோமியத்தால் மூங்கில்களை பதப்படுத்தி, தனது கட்டுமானங்களில் பயன்படுத்தி நல்ல பயன்களை உணர்ந்துள்ளார். இம்முறையில் நீர்த்த கோமியத்தில் மூங்கில்களை 2 வாரம் ஊற விடுகின்றனர். அவர் செய்த இயற்கை சுவர்ப் பூச்சுவிலும் கோமியம் ஒரு முக்கிய அங்கமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

வீட்டுப் பயன்பாட்டிற்கு:

அடுப்புகள், நம் வீடுகளின் அடிப்படை தேவை. நமது மாடுகள் எரிபொருள் தேவைக்கு பெரும் பங்காற்றும். முந்தைய காலத்தில் வரட்டிகளாகவும் நவீன காலத்தில் சாண எரிவாயுவாக பயன்பட்டு வருகின்றன. “போகி” பண்டிகையன்று குழந்தைகள் யாவரும் வரட்டியை எரித்துக் கொண்டாடுவர். சாணம், எரிவாயுவிற்கு திறம்பட செயல்படுவது மட்டுமின்றி, புகையற்ற வெப்பத்தை மூட்டக்கூடிய தனித்தன்மை பெற்றது. இவை நல்ல வெப்ப மதிப்பீட்டை கொண்டுள்ளதால், சூளைகளில் சுண்ணாம்புக் கல்லை எரிப்பதற்கு பயன்படுத்துவர். இத்தகைய பயன்பாடுகள் நம்மை அடுத்த கட்ட தற்சார்புக்கு வித்திடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாட்டுச்சாணத்தை எரித்து கிட்டும் சாம்பலை பல ஆயுர்வேத செய்முறைகளில் பயன்படுத்தினர். நம் முன்னோர்கள் அந்த சாம்பல் கொண்டு பல் துலக்குவதும் வழக்கமாக இருந்தது.

நமது விவசாயிகள், கொடிய பூச்சிக்கொல்லியான “கார்போஃபியூரோன்” அடைத்து வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களிலேயே கூட மாட்டுச்சாணத்தை பூசி, சில நாட்கள் கழித்து மறு பயன்பாடு செய்து வருகின்றனர். மாட்டுசாண மானது தன்னகத்தே மகத்தான ஊட்டச்சத்தையும், ஆற்றலையும் கொண்டுள்ளதால், அவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தொகுத்து ஊக்குவிக்கும். மாசுப் பொருட்களைக் கூட மக்கவைக்கும் வல்லமையுடையது. ஒரு ஆய்வின் படி, மாட்டுச்சாணம் மண்ணையும், நீர்நிலைகளையும், இரசாயனத்தை அப்புறப்படுத்தி தூய்மையாக்கும் என்று பதிவு செய்திருக்கிறது[2]

தற்போதைய சூழலில், நமது சக உயிரினங்களுடன் ஏற்கனவே வைத்திருந்த நெருங்கிய பிணைப்பை ஏன் உதறிவிட்டோம்? ஒரு இடத்தின் மாட்டினம் அழிகிறது என்றால் இலட்சக்கணக்கான வீடுகள் அனாதையாக மாறும் என்பது நியதி. வெளித்தோற்றத்தில் வெறும் அசைபோடும் விலங்காக காட்சியளிப்பவை, உண்மையில் மிகவும் அரிய செயல்களை ஆற்றிவருகிறது. இவ்வாறு நாம் நம் சிற்றூர்களில் ஆராய்ந்தால், நாம் மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடிப்பவை யாவும்,முன்னதாகவே நமது கிராமங்களில் புழக்கத்தில் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மேற்கோள்கள்:

[1] Kartikey Kumar Gupta , Kamal Rai Aneja, Deepanshu Rana an article on  Current status of cow dung as a bioresource for sustainable development  2016, Bioresources and Bioprocessing 2016. Available at: https://bioresourcebioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9

[2] S. Khan & A. Manchur a research on Activated cow-dung slurry as a tool to pesticides bioremediation 2015, Scholars Research Library, University of Chittagong, Hathazari, Chittagong.

பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட மனோஜ் கொட்டோராம்ஜி அவர்களுக்கு நன்றிகளை பதிவு செய்கிறோம்.

படங்கள் : pdsumesh.blogspot.in

This post is also available in: English

Share this article:

Share on facebook
Share on twitter
Share on pinterest
Share on whatsapp
Share on telegram

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Study Natural Building Online

A EBOOK BY THANNAL

Thannal Social Media

Amazon Author Page

Get The Latest Updates

Join Our WhatsApp group

8000 + members. No spam. Weekly updates. Chat or talk with us on Wednesdays

Scroll to Top