இந்தியப் பூச்சு வகைகள் – பகுதி 01

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on telegram

இந்தியப் பூச்சு வகைகள் – பகுதி 01

பேசும் பூச்சுக்கள் பற்றிய தொடர்

மனித உடலில் தோல் தான் மிகப்பெரிய உறுப்பு. உடலின் உள்ள உள்ளுறுப்புகளைப் புறசூழலில் இருந்து பாதுகாப்பதில் தோல் முதன்மையான பங்கு வகிக்கிறது. ஒரு கட்டுமானத்திற்குத் தோல் போலவே பூச்சுகள் செயல்படுகின்றன. எளிதில் காணக்கூடிய வெளிதோற்றத்தின் இறுதியிலும் இறுதியாய் திகழும் பூச்சுகள் அழகியலில் தனித்துவமான அடையாளத்தை மொழிந்து காண்போர் மனதில் தடம்பதிக்கின்றன. இயற்கையான மூலப்பொருட்க்களால் செய்யப்படும் மண் பூச்சுகளானது, சுவர்களின் சுவாச குணத்தை பெற்று பராமரித்து அகச்சூழலை மிதமாக வைத்து செளகரியத்தை தருகின்றன. கோடையிலும் குளுமை, மார்கழியிலும் மிதமை, அதுவே மண்ணின் அருமை!

பற்பல மூலிகைகள் மற்றும் மரங்களின் சாற்றைக் கொண்டு இயற்கையான முறையில் கரையானை விரட்டி, நீர் விலக்கி, வலுபெற்ற சிறப்பு இந்திய நாட்டு பூச்சுகளுக்கு உண்டு. எளிதாக கிடைக்ககூடிய சமையலறைப் பொருட்களான வெந்தயம், வெல்லம், கடுக்காய், பெருநெல்லி மற்றும் மூலிகைகளான சோற்றுக்கற்றாழை, கள்ளிச்செடி, வேலமரப்பிசின், அரிசிக்கஞ்சி, கிழங்குமாவு மற்றும் கோதுமை போன்ற எண்ணற்றவை இடுபொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் முட்டையின் வெள்ளை பகுதி, விலங்குகளின் ரோமங்கள், கொழுப்பு, கோமியம், சாணம் போன்றவை பூச்சுகளின் முதன்மையான இடுபொருட்களில் இடம்பிடிக்கின்றன. வண்ணமயமான சித்திரம் வரைந்த சுவர்கள் போலச் செய்ய, பலவகை மண்களும், சில காய்கறி மற்றும் கனிம நிறமிக்களும் பூச்சுகளுக்கு வண்ணமூட்டுகின்றன. சரியான செய்முறை மூலமாக சாமானியரின் வீட்டுச்சுவர்களையும் எளிதில் அழகாக மாற்றலாம். பின்பற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு விதமான இழைநயங்கள் வெளித்தோற்றத்தில் கிடைக்கும். தாப்பி, அரைஷ் மற்றும் செட்டிநாட்டு பூச்சுகள் போன்ற நேர்த்தியான முறைகளை செய்ய சில காலம் எடுக்கும், அதற்குப் பயிற்சியுடன் திறமையும் தேவை. 

இந்திய நாட்டு பூச்சுகள் மூன்று எளிய வகைகளாக புரிந்துகொள்ளலாம்.

  • மண் பூச்சு
  • மண் மற்றும் சுண்ணாம்புப்பூச்சு
  • மூலிகை சுண்ணாம்புப்பூச்சு
    • தாப்பி மற்றும் அரைஷ் பூச்சு
    • செட்டிநாட்டுப்பூச்சு

மண் பூச்சு

மண்ணுடன் சில இடுபொருட்களே மண் பூச்சு.  களி(மீச்சிறு துகள்), குறுமணல் மற்றும் மணல்  இவற்றின் கூட்டுத் துகள்களே மண். மண் பூச்சு செய்யும் போது பிணைப்புக்கு களியும், வலிமைக்கு மணலும் அதன் மூலப்பொருளான மண்ணிலே உள்ளன. களித்தன்மையோ, மணல்தன்மையோ மிகுதியாக இருக்கும்பட்சத்தில், தேவையான விகிதத்தில் மண்வகைகளை கலந்து, களி 12 முதல் 30 சதவிகிதம் என இருக்குமாறு மாற்றியமைக்கலாம். விரிசல்களைத் தவிர்க்க, நெல் உமி போன்ற நார்ப் பொருட்கள் பூச்சுக்கலவையில் சேர்க்கப்படுகின்றன. பிணைப்பு, நீர்த்தடுப்பு திறன் மற்றும் நஞ்சுமுறிவு குணம் கொண்ட சாணமும் பூச்சுக்கலவையில் சேர்க்கலாம். கிழங்குமாவில் இருந்து எடுக்கப்படும் கஞ்சி, புளியங்கொட்டை போன்ற இடுபொருட்கள், கலவையில் உள்ள சிறு துகள்களையும் நன்கு பிணைக்கின்றன. மஞ்சள், வேம்பு மற்றும் தேக்கு மரப்பட்டைகளும் இலைகளும் கரையானிடமிருந்து காக்கின்றன. இருளி மரப்பிசினும், வேலமரப்பிசினும் பூச்சுகளின் தூசித்தன்மையைக் குறைக்கின்றன. பலவிதமான மண் வகைகள் மற்றும் இயற்கை நிறமிகளை கொண்டு வெவ்வேறான வண்ணங்களைப் பெறமுடியும். பூச்சுக்கள் நீர்த்தடுப்பு திறனைப் பெற தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் அல்லது ஆளிவிதை எண்ணெயை இறுதியாக மும்முறை அடிக்கவேண்டும்.

பூச்சுகளின் செய்முறைகள்-இணைப்புகள்:

காணொளி

மண் மற்றும் சுண்ணாம்புப்பூச்சு

சுண்ணாம்பு, மண் மற்றும் இடுபொருட்கள் சேர்ந்து அமைவதே மண் சுண்ணாம்புப்பூச்சு. இங்கு மண்ணில் உள்ள களியுடன் சேரும் பிணைப்புப்பொருள் சுண்ணாம்பு தான். வலிமை சேர்க்கும் பொருள் மண்ணில் உள்ள மணல். பூச்சுவில் உள்ள வெவ்வேறான கூறுகளைச் சேர்த்து வைக்க நெல்உமி போன்ற நார் தன்மை கொண்டபொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கோமியம் போன்ற இயற்கை இடுபொருட்கள் பிணைப்பு தன்மையை அதிகப்படுத்த உதவுகின்றன. கரையானைத் தவிர்க்க சுண்ணாம்பே போதுமானது என்றாலும், ஈரப்பதம் அதிகம் கொண்ட பகுதிகளுக்கு சில மூலிகை கரைசல்களின் மூலம் கூடுதல் பாதுகாப்பை அளிக்கலாம். பூச்சுகளின் திடத்தன்மை மேம்பட கஞ்சி மற்றும் இயற்கை இடுபொருள் சேர்த்து பல மாதிரி கலவை செய்து சோதித்துப்பார்க்க வேண்டும். காலம் செல்லச்செல்ல சுண்ணாம்பின் கரிமமேற்றத்தால் பூச்சு கடினமாகி சுண்ணாம்புக்கல் போல திடநிலையை அடைந்துவிடும்.

மேலும் படிக்க:

மூலிகை சுண்ணாம்புப் பூச்சு

சுண்ணாம்பு, சுடுமண் மற்றும் மூலிகை இடுபொருட்கள் ஆகியன இதில் உள்ளன. சுண்ணாம்பும் சுடுமண்ணும் வினைபுரிந்து வலிமையான பூச்சாக மாறுகிறது. சுடுமண் / தூளாக்கப்பட்ட செங்கற்கள் அல்லது ஓட்டுத்தூள் / எரிந்த மண் கட்டிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். சுண்ணாம்பில் உள்ள ஈரத்தன்மையை சுடுமண் உள்வாங்கிக்கொள்வதால் இரண்டும் சேரும் விதம் எளிதாகிறது. கடுமையான தட்டுப்பாடு உள்ள ஆற்றுமணலுக்கு மாற்றாக சுடுமண் பயன்படுத்துவது ஒரு பெரிய தீர்வு என்றே சொல்லலாம். கடுக்காயும் வெல்லமும் சேர்ப்பதால் அவை நொதித்து உருவாகும் வாயுவை சுண்ணாம்பு எடுத்துக்கொண்டு கடினமாகும். பூச்சுகளில் உள்ள சிறுசிறு துளைகளையும் கடுக்காய் மூலக்கூறுகள் சென்று அடைப்பதால், பூச்சுகளில் காற்றும் நீரும் நுழைய முடிவதில்லை. கள்ளி, சோற்றுக் கற்றாழையின் பசை பொருள் சேர்க்கும் போது சாந்துவின் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கபடுகிறது

சுண்ணாம்பு காய்ந்து கடினமானதும், அது நீர்ப்புகாத் தன்மையைப் பெறுகிறது. எனவே இம்முறையை நீர்தொட்டிகள் மற்றும் குளியலறைகளுக்குப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:

தாப்பி மற்றும் அரைஷ் பூச்சு:

சுண்ணாம்புப் பூச்சு பூசிய பின், அப்பூச்சு நன்கு கெட்டியாவதற்கு அதைத் தட்டி கொடுக்கும் கருவியின் பெயரே தாப்பி. இராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டது இந்த தாப்பிப் பூச்சு, இந்தியாவின் பிறபகுதிகளிலும் உள்ளது. சுண்ணாம்பும் (பிணைப்பு) சுட்டமண்ணும் (திடப்பொருள்) தான் மூலப்பொருட்களாக உள்ளன. சுட்டமண்ணும் சுண்ணாம்பும் முதல் அடுக்காக பூசியபின் தாப்பி வைத்து மேற்புறத்தில் தட்டப்படுகின்றது. மூன்று -நான்கு நாட்கள் கழித்து மணிஒலி போல ஒலிக்கும். அதுவரை சீரான கால இடைவெளியில் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும். பூச்சுக்காயும் பொழுது ஏற்படும் சிறு விரிசல்களை தாப்பி முறையிலே சரிசெய்துவிடலாம்.

இந்தப் பூச்சுக்கு மேலே, நமக்குத் தேவையானவாறு பலவகையானப் பூச்சுகளைப் பூசலாம்.

  • மெல்லிய துளைகள் உள்ள சல்லடையில் நன்கு சலிக்கப்பட்ட சுட்டமண்ணுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கலவை தயாரித்து, மிக விரைவாக எளிமையாக பூசும் முறையே லோஹி எனப்படும்.
  • அரைஷ் என்பது பல அடுக்குகளைக் கொண்ட ஒரு அழகான பளபளப்பான பரப்பைக் கொடுக்கும் பூச்சு. அதில் மார்பில் பொடி, சுண்ணாம்பு(நீரில் நீர்த்து நீண்ட நாள் நீரினுள் சேமித்து வைக்கப்பட்ட), நிறமிகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதைப்பூசுவதற்கு திறமையும் நேர்த்தியும் தேவைப்படுகிறது.

வெந்தயம், வெல்லம், குக்குலு மரப்பிசின் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு ஆகிய பசைகளும் இடுபொருளும் பூச்சுகளின் வெவ்வேறு கட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கத்திய நாட்டில் செய்யும் டேடலாக்ட்(Tadelakt) பூச்சு போலவே அரைஷ் பூச்சும் நீர்ப் புகாத தன்மையை பெற இந்த வகையான இடுபொருட்கள் உதவுகின்றன. நேரடியாக மழைநீர்படும் மண் சுவர்களுக்கு அரணாக இப்பூச்சு திகழ்கிறது. பூச்சு வேலைப்பாடு துல்லியமான கணக்கீட்டால் மிக தெளிவான செயல்முறையுடன் பூசவேண்டும். இத்தொழில்நுட்பத்தை மீட்டேடுக்க, மூத்த கலைஞர் தாவூத் ஐயாவின் துணைகொண்டு தண்ணீர்த்தொட்டி மற்றும் வெட்டவெளிச் சுவரில் இம்முறையை பரிசோதித்துப் பார்த்தோம். பின்னர் பயிற்சி வகுப்புகள் வழியாக மக்களுக்கும் இப்பூச்சுமுறையை சொல்லித்தருகிறோம்.

மேலும் படிக்க:

செட்டிநாட்டுப்பூச்சு:

இந்த வகை சுண்ணாம்புப் பூச்சுத்தொழில்நுட்பத்தின் பூர்வீகமே தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாடு தான். பதினெட்டாம் நூற்றாண்டில் வணிகம் செய்து செல்வம் செழித்து வாழ்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் மாளிகைகளே அதற்குச்சான்று. கல் சுண்ணாம்பு, கிழிஞ்சல் சுண்ணாம்பு (பிணைப்பிற்கு) மற்றும் ஆற்று மண் (திடப்பொருள்), கல் பொடி (வண்ணங்களுக்கு) இவையே முதன்மை பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர். முட்டையின் வெள்ளைத் திரவம் மற்றும் வச்ரப்பசை இடுபொருட்களாகச் சேர்த்துள்ளனர். மேன்மையான நயம், பளிச்சிடும் நிறங்கள், கண்ணாடி போன்ற மேற்புறத்திற்கு இப்பூச்சு பெயர்பெற்றது. கலைஞர்கள் கற்களால் பூச்சுக்களின் மேற்புறத்தை தேய்த்தே மிக மென்மையான தன்மையைக் கொடுத்தனர். மேற்கொண்டு இதற்கு வேறு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் தேவை இல்லை.

காணொளி

This post is also available in: English

Share this article:

Share on facebook
Share on twitter
Share on pinterest
Share on whatsapp
Share on telegram

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Study Natural Building Online

A EBOOK BY THANNAL

Thannal Social Media

Amazon Author Page

Get The Latest Updates

Join Our WhatsApp group

8000 + members. No spam. Weekly updates. Chat or talk with us on Wednesdays

Scroll to Top